சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில்,  ஸ்ரீநிதி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த பட்டாசு ஆலையின் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில், திடீரென்று தீப்பிடித்தது. இது குறித்து உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு மூலப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தொழிலாளர்கள் யாரும் இல்லாத, இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top