சிறப்பு ரயில்கள் ரத்தால் 15 சதவீதம் ரயில் பயண கட்டணம் குறைகிறது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. வெளியூர் சென்ற தொழிலாளர்களின் வசதிக்காக தனி ரயில்கள் இயக்கப் பட்டன. அதனைத்தொடர்ந்து உள்நாட்டு பயண சேவைகள், படிப்படியாக தொடங்கப்பட்டது. அப்போது ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு ரயில்கள் அனைத்தையும் மீண்டும் பழைய பெயரிலேயே இயக்கும் படி அனைத்து மண்டலங்களுக்கும், ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி 1,700 சிறப்பு ரயில்கள் மீண்டும் பழைய பெயரிலேயே இயங்க உள்ளன. இதனால் இந்த ரயில்களுக்கான கட்டணம், 15 சதவீதம் வரை குறைந்து, பழைய கட்டணமே வசூலிக்கப்பட உள்ளது.
இந்த மாற்றங்களை செய்வதற்காக, ரயில்வே இணையதளம் அடுத்த ஒரு வாரத்திற்கு தினமும் ஆறு மணி நேரம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் ரயில்களில் உணவு வழங்குவது நிறுத்தம், பிளாட்பார டிக்கெட் விலை உயர்வு, நேரடி டிக்கெட் விற்பனைக்கான தடை ஆகியவை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top