சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்திற்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்திற்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. உத்தரவு நகல் கிடைத்த 5 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில், நீதிபதி பத்மநாபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளரான ரவிச்சந்திரன், ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் போலீசார் அடித்து துன்புறுத்தியதாகவும், அவர்கள் உயிரிழந்தவுடன் ஆவணங்களை மாற்றியதோடு, பொய் வழக்கும் பதிவு செய்ததாகவும் சாட்சியம் அளித்தார். அதைத் தொடர்ந்து, சிறப்பு சார்பு ஆய்வாளரிடம், 5 காவலர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான பொருட்களின் தடய அறிவியல் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. செல்போன் உள்ளிட்ட உபகரணங்களில் அழிக்கப்பட்ட விவரங்கள் கிடைத்தால், விசாரணைக்கு உதவியாக இருக்கும் என ,சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை 20 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது என கோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெறுவதாக கீழமை நீதிமன்றம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த 5 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

scroll to top