கோவை விமான நிலையத்தில் 1.8 லட்சம் பயணிகள் மற்றும் 828 டன் கார்கோ மார்ச் மாதம் கையாளப்பட்டுள்ளன: பயணிகள் போக்குவரத்து 40% கார்கோ போக்குவரத்து 10% உயர்வு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பல மாதங்களுக்கு பிறகு தினசரி இயக்கப்படும் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை மற்றும் மாதம்தோறும் கையாளப்படும் கார்கோ அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2022 மார்ச் மாதத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில், மொத்தம் 10,214 பயணிகளும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,70,436 பயணிகள் என மொத்தம் 1,80,650 பேர் பயன்படுத்தியுள்ளனர். கார்கோ போக்குவரத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில் 85 டன் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 743 டன் என மொத்தம் 828  டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.கடந்த 2021 மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்து 40 சதவீதம், கார்கோ போக்குவரத்து 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில்1,23,664 பயணிகள் மற்றும் 749 டன் கார்கோ கையாளப்பட்டன.இந்த தகவல் இந்திய விமான நிலைய ஆணையகம் சார்பில் அறிவிக்கப்பட்டு,  ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.கொரோனா நோய் பரவல் காரணமாக விமான போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் சமீப காலமாக மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்றைய சூழலில் கோவை விமான நிலையத்தில் அதிகாலை முதல் இரவு வரை உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்து பிரிவுகளை சேர்த்து தினமும் 22 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

scroll to top