கோவை மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி

maxresdefault-1.jpg

கோவை மாநகராட்சியில் இதுவரை மேயர் பதவியை திமுக பிடித்தது கிடையாது. இந்த நிலையில், முதல்முறையாக, கோவை மாநகராட்சி மேயர் பதவியை திமுக அலங்கரிக்க இருக்கிறது. இந்த முறை கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றி பெற்றுள்ளதால், யார் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதனிடையே, அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து மேயர் மற்றும் தலைவர்களுக்கான பரிந்துரை பெயர் பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களுக்கு தலைமையில் இருந்து உத்தரவு போடப்பட்டிருக்கிறது. அதன்படி, பட்டியலும் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மேயருக்கான போட்டியில் 3 பேர் இருக்கின்றனர். அதில் முதலாவதாக இருப்பவர் முன்னாள் எம்எல்ஏவும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா. கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி. இவர், 52வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார், மேலும் ஏற்கனவே கவுன்சிலராக இருந்துள்ளதால் அவருக்கு மேயராகும் வாய்ப்புள்ளது. இதேபோல, இளம் பெண் கவுன்சிலராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நிவேதா. 97 வது வார்டில் வெற்றி பெற்றுள்ள 22 வயதான இளம் கவுன்சிலரான நிவேதா மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக பரவலான பேச்சு எழுந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அனுபவமிக்க கவுன்சிலரான மீனா லோகுவும் மேயர் போட்டியில் இருக்கிறார். திமுக மாநில மகளிரணி துணை செயலாளராகவும் இருந்தாலும், இவருக்கு வாய்ப்புகள் குறைவு என்றே பேச்சுக்கள் அடிபடுகின்றன. கோவையில் கடந்த முறை திமுக கவுன்சிலர் ஆக இருந்த பொழுது, அதிமுகவிற்கு எதிராக போராட்டங்களை மாநகராட்சி மன்றத்தில் நடத்தியதற்காக, மன்றத்தில் வைத்தே அதிமுக கவுன்சிலர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

scroll to top