கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் ஆர்.சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், காவல்துறை துணை தலைவர் சி.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
பின்னர், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் வழங்கும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையரகத்தின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு நிலையிலான 69 காவலர்களுக்கும், கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு நிலையிலான 43 காவலர்களுக்கும் என மொத்தம் 112 பல்வேறு நிலையிலான காவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய 127 காவல்துறை அலுவலர்களுக்கும், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளிட்ட 136 நபர்கள் என மொத்தம் 263 நபர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.