கோவை குற்றாலத்தில் நடந்த வசூல் வேட்டை – அனைத்து வனத்துறை சோதனைச் சாவடிகளையும் சோதனை நடத்த கோரிக்கை

kovai-kutralam.jpg

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி. இங்கே தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பெரியவர்களுக்கு, ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, கார்களுக்கு ரூ.50 வரையிலும் கட்டணமாக வனத்துறை சார்பில் வசூலிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் நுழைவு சீட்டுகள் வழங்குமிடத்தில் இரண்டு மிஷின்களில், டிக்கெட் சீட்டை அச்சிட்டு பணத்தை பெற்றுள்ளனர். இதில், ஒரு மிஷினில் மட்டுமே முறையாக அரசாங்கத்திற்கு செல்லும் வகையில் பதிவு செய்யப்படுகிறது. மற்றொரு மிஷின் மூலம் போலியான டிக்கெட் வழங்கி அந்த பணத்தை இங்குள்ள பணிபுரியும் வன அலுவலர்கள் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை  கையாடல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய அதிகாரிகள் இடைநீக்கம் செயப்பட்டுள்ளனர். இதில்  பிடிபட்ட வனவர் ஒருவரிடம் ரூ. 35 லட்சமும், இன்னொரு வனவரிடம் ரூ 25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  கடந்த 2021, நவம்பர் மாதம் முதல் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது!’ என்கின்றனர் இது சம்பந்தமாக விசாரித்து வரும் அதிகாரிகள்.

சமீபத்தில் கோயமுத்தூர் பொள்ளாச்சி ஆளியாறு சோதனைச் சாவடியில் பழங்குடி மக்கள் நலனுக்காக என்று அனைத்து வாகனங்களிடமும் கறார் வசூல் நடந்து வந்தது. இதையும் இங்குள்ள வனத்துறையினரே செய்து வந்தனர். அதைக் கண்டித்து இங்குள்ள பழங்குடியின செயல்பாட்டாளர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பினார்.

உண்மையில் அந்தப் பணம் பழங்குடி மக்களுக்கு செலவு செய்யப்படுவதில்லை. வனத்துறையினரே பங்கு போட்டுக் கொண்டு பழங்குடிகள் பெயரில் கணக்கு எழுதி விடுகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அந்த சோதனைச் சாவடியில் வசூலை திடீரென்று நிறுத்தினர் வனவர்கள். அதேபோல் அங்குள்ள குரங்கு அருவிக்கும் டிக்கெட் போட்டு வசூல் செய்தனர். அதிலும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது இந்தப் பகுதி முழு கண்காணிப்பில் இருந்து வருகிறது.

 இப்போது கோவை குற்றாலத்தில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை காரமடை, பரளிக்காடு, வால்பாறை பகுதிகளிலும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் பல்வேறு வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் முழுக்க ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்!’ என்ற கோரிக்கைகளை வைத்து வருகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

scroll to top