கோவை அருகே மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், கோவைப்புதூர், குனியமுத்தூர், பி.கே.புதூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகள் அருகே சிறுத்தை ஒன்று புகுந்து நாய்களை அடித்துக் கொன்று அச்சுறுத்தி வந்தது.
இதனால் அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அப்போது பி.கே. புதூரில் உள்ள தனியார் குடோனுக்குள் சிறுத்தை புகுந்துள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தனியார் குடோனில் இறைச்சி மற்றும் தண்ணீர் சேவல், கோழியுடன் கூடிய கூண்டு அமைத்து கண்காணிப்பு கேமரா மூலம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கடந்த 5 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் கூண்டில் அகப்பட்டது. சிறுத்தை பிடிப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், கூண்டில் சிக்கிய சிறுத்தையை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வனத்துறையினர் கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் சிறுத்தையை வனத்துறையினர் விட்டனர்.