கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தினை நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவிற்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார்.
முன்னதாக குஷ்பு அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்தும் கும்மியாட்டம் ஆடியும் மகிழ்ந்தார். இதனைய்டுத்து நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தினை குஷ்பு ரேக்ளா வண்டியின் மீது ஏறி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “பொங்கல் நம்முடைய பாரம்பரிய பண்டிகை, வீட்டில் சந்தோஷம் கொடுக்கும் பண்டிகை இது. தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்கக்கேடானது.ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாய் பிச்சை கொடுப்பது போன்று என்றார். தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள கூடாது. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.எல்லா பெண்களும் வெளியே போகவில்லை. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். திமுகவில் எனக்கு எதிராக தான் நடந்துக் கொண்டனர். ஆனால் அதற்கு பாஜக ஆதரவாக நின்றது. அண்ணாமலை களத்தில் போராடினார்.” என்று பேசினார்.