கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது – நகை, பணம், கார் பறிமுதல்

MONEY3.jpeg

​கோவை பீளமேடு பகுதியில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 57 சவரன் நகை, 31 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், இன்னோவா கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கோவை மாநகர துணை ஆய்வாளர் .சந்தீஷ் கூறுகையில், “பீளமேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. மாநகர காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் ஏசி பார்த்திபன் தலைமையில், இரண்டு சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவம் நடந்த நாட்களில் ஒரே நபர் பைக்கில் அடிக்கடி சென்றது தெரியவந்தது.

அவர் அன்னூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் அடிக்கடி பெட்ரோல் அடித்து வந்துள்ளார். இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர் அளித்த தகவலின் பேரில், அவரை போலீசார் கண்காணித்து கைது செய்தனர்.

விசாரணையில், பீளமேடு வ உ சி நகரை சேர்ந்த சிவசந்திரன் (எ) சிவா(54) என தெரியவந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளில் 6 வீடுகளில் கொள்ளை அடித்தது தெரியவந்தது. தவிர இரண்டு பைக் திருட்டு வழக்கில் தொடர்புடையது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரிடம் இருந்து 57 சவரன் நகை, 31 லட்சத்து 40 ஆயிரம் பணம், இரண்டு பைக் மற்றும் திருடிய நகைகளை விற்று வாங்கிய இன்னோவா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது” என்று கூறினார்.

scroll to top