கோவையில் கலைஞர் அறிவாலயம் உருவாகுமா?

தி கோவை ஹெரால்டு:

இந்தியாவிலேயே அதிக கோஷ்டிகள் உள்ள கட்சி எது என்றால் காங்கிரஸ் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம். அதேபோல் தமிழகத்திலேயே அதிக கோஷ்டிகள் உள்ள கட்சி திமுக என்றால் அது மிகையாகாது. ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி. ராசா கோஷ்டி என்று மாநிலம் முழுக்க இருந்தது போல் மாவட்டந்தோறும் பொங்கலூரார் கோஷ்டி, சிடிடி கோஷ்டி, வீரபாண்டியார் கோஷ்டி, என்கேகே பி ராஜா கோஷ்டி, நேரு கோஷ்டி என துளிர்விட்டு கிளை விட்டு நீண்டிருந்தது. கலைஞர் கருணாநிதி மறைவிற்குப் பின்பு மு.க.ஸ்டாலின் தலைவரான பிறகு இது முழுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டது. அதிலும் ஸ்டாலின் முதல்வர் ஆனபிறகு கோஷ்டிகள் சுத்தமாகவே அழித்தொழிக்கப்பட்டு விட்டன என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் முதல் வரின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன், மகன் உதயநிதியை தாண்டி வேறொரு பெயரை அறிவாலயச்சுவர்கள் கூட ஒலிப்பதில்லை. இப்படி ஒரு காலத்தில் திமுக கோஷ்டிகளுக்கெல்லாம் சிகரமாக இருந்த கோவை மாவட்டமும் 10-க்கு 10 தொகுதிகளை இழந்த பின்பு சுத்தமாக அந்த விஷயத்தில் நீர்த்துப் போய்க்கிடக்கிறது. குறிப்பாக அமைச்சர் செந் தில்பாலாஜி கோவையில் கோஷ்டி அரசியல் என்பது மருந்துக்குக்கூட வெளிப்படுவதில்லை. கோஷ்டிகளை மட்டுமல்ல, கட்சியை சீரமைக்கவும், கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சவும் பல்வேறு நடவடிக்கைகளை புயல் வேகத்தில் எடுத்து வருகிறார் செந்தில்பாலாஜி. அதன் உச்சகட்டமாக அவர் கோவையிலேயே தங்கி, தன் விசுவாசிகளாக விளங்கும் கரூர் உடன்பிறப்புகளை வைத்து வார்டு வாரியாக மக்களுக்கான குறை நிறைகளை, கட்சிக்குள் உள்ள குழப்பங்களை கணக்கெடுத்து வருகிறார். இதே நேரத்தில் கோவை காளப்பட்டி பகுதியில் சில ஏக்கர் நிலங்கள் கட்சிக்காக வாங்கப்பட இருப்பதாகவும், அதில் கலைஞர் அறிவாலயம் அமைய திட்டமிட்டு வருவதாகவும் கட்சிக்குள்ளேயே பேச்சு அடிபட்டு வருகிறது. இது குறித்து திமுக உடன்பிறப்புகள் சிலரிடம் பேசினோம். இது சம்பந்தமாய் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
‘‘கோவை எங்கள் தலைவர் வாழ்ந்த மண். அவர் சிங்காநல்லூரில் அண்ணாசாமி வீட்டில் பத்மாவதி அம்மாளுடன் ஒண்டுக்குடித்தனமாக- வாடகைக்கு குடியிரு ந்து கொண்டு ராமநாத புரம் பட்சிராஜா ஸ்டு டியோவிற்கும், சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கும் நடந்தே சென்று கதை வசனம் எழுதிய கதை சோக வாழ்க்கை குறித்தெல்லாம் அவர் தன் நெஞ்சுக்கு நீதி சுயவரலாறு புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். இன்னமும் அவர் வாழ்ந்த வீடு அப்படியேதான் இருக்கிறது. அவர் பெயரில் அதை நினைவுச்சின்னம் ஆக்க அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் கணிசமான விலைக்கு கொடுக்கவும் முன் வந்தனர். ஆனால் ஆளாளுக்கு கோஷ்டி சண்டை போட்டு வாங்காமலே இருந்து விட்டனர். இந்த விவகாரம் எல்லாம் தலைவர் உயிரோடு இருந்த காலத்திலேயே நடந்தது. சரி அதுதான் முடியாது என்றால் திருச்சியில் நேரு கலைஞர் அறிவாலயம் அமைத்தது போலவே கோவையிலம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் விருப்பப்பட்டோம். பல முறை கட்சிக் கூட்டங்களிலும் பேசினோம். நான் செய்கிறேன்; நீ செய்கிறேன் என்று மாவட்ட, மாநகர செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பேசினார்களே ஒழிய யாரும் அதையும் செய்யவில்லை. இப்போது பார்த்தால் தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சி மாவட் டங்களிலம் கலைஞர் அறிவாலயம் பெரிய இடத்தில் பட்டொளி வீசி நிற்கிறது. அண்மையில் பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் கூட கலைஞர் அறிவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு கூட உள்ளது. பெரம்பலூர் போனால் நாம் லண்டன் மாநகருக்கு வந்து விட்டோமா என்று எண்ணும் அளவு ராசா பெரிய மாளிகை கட்டி வைத்துள்ளார். கோயமுத்தூரில் மட்டும் இதன் வாசம் கூட இல்லை. அதற்குக் காரணம் கோஷ்டிப் பிரச்சனைதான். இப்பவும் கூட கலைஞர் வாழ்ந்த வீட்டை கணிசமான விலை கொடுத்து வாங்கி கலைஞர் நினைவு இல்லம் ஆக்கலாம்தான். அதை இவர்கள் செய்வார்களா தெரியவில்லை.
இப்படியிருக்க காளப் பட்டியில் நிலம் விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது எதற்கு என்றுதான் தெரியவில்லை.ஒரு வேளை செந்தில் பாலாஜி சொந்தமாக பங்களா கட்டவாக அது இருக்கலாம். வேறு உபயோகத்திற்கு கூட இருக்கலாம். ஆனால் கலைஞர் அறி வாலயத்திற்குத்தான் என கட்சிக்குள்ளேயே சிலர் புரளி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை சொல் லப்போனால் கோவையில் கலைஞர் சிலை வைக்கப் போவதாக செந்தில் பாலாஜி சொன்னதாக சொல்கிறார்கள். அதுவும் நடக்குமா தெரியவில்லை. காலங்காலமாக கலைஞர் மீது பற்று வைத்து, அவர் உழைப்பில் பதவி, பணம், தொழில் சுகங்களை அனுபவித்தவர்களே இங்கே கலைஞர் அறிவாலயம் எழுப்பவில்லை. அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த இவர் மட்டும் செய்வாரா என்ன? செய்தால் நாங்கள் எல்லாம் செந்தில் பாலாஜியை தலையில் வைத்துக் கொண்டாடுவோம்!’’
என்று தெரிவித்தனர்.

scroll to top