கோவையில் உதயநிதி நடத்திய பாக முகவர்கள் கூட்டம்! திமுகவின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு கை கொடுக்குமா?

KOVAI HERALD :

“கோவைவாசிகள் குசும்புக்காரர்கள்.  எதிர்பாராத தோல்வியையும் கொடுத்து விடுகிறார்கள். சென்ற சட்டமன்றத் தேர்தலில் 2 நாட்கள் தங்கி இங்கேயே தேர்தல் பிரச்சாரம் செய்தேன். அலை, அலையாய் வந்த கூட்டம் எனக்குள் பெரிய நம்பிக்கையை கொடுத்திருந்தது. எப்படியும் 10 தொகுதியில் 5-6 தொகுதிகள் கண்டிப்பாக திமுக பெறும் என நம்பினேன். ஆனால் 10-க்கு 10 தோல்வியை தந்து விட்டீர்கள். தமிழகம் முழுக்க எங்களுக்கு வெற்றிக்கனியை மக்கள் கொடுத்திருக்க, இங்கே மட்டும் எப்படி இப்படி? இந்த முறை அப்படியல்ல. அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதற்கு அடுத்து பாராளுமன்றத் தேர்தல். இதில் எல்லாம் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றியை நீங்கள் அளிக்கும்போது மாதத்தில் பத்து நாட்கள் இங்கேயே தங்கி பணி செய்வேன்!’’

கடந்த 26-ந்தேதி கோவை வந்து கொடீசியா மைதானத்தில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் இப்படி உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின்.

அவர் பேசியதில் பெரிய வியப்பில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தலில் வென்றால் கோவையிலேயே வந்து குடியிருந்து மக்கள் பணி ஆற்றுவேன் என்று சொல்லியிருந்தால் கூட வியப்பில்லை. ஏனென்றால் திமுக எப்போது பெரும்பான்மைத் தொகுதிகளில் வென்று தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததோ, கோவை மாவட்டத்தில் 10-க்கு 10 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததோ, அப்போதிருந்த திமுகவிற்கு கோவை தோல்வி என்பது அரசியலில் கௌரவப்பிரச்சனையாக இருந்து வருகிறது.

எம்.ஜி.ஆர் காலத்தில், ஜெயலலிதா இருந்த காலத்தில் எல்லாம் திமுக பெறாத தோல்வி இது. அதனால்தான் இந்த முறை ஸ்டாலின் முதல்வர் ஆன நாளிலிருந்தே கோவையில் கட்சியை வளர்த்தெடுக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் அக்கட்சியின் மூத்த தலைகள், குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்னபிற இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி எடுத்து வருகின்றனர்.

முதலில் கோவை மண்டலப் பொறுப்புக்கு உதயநிதியை பொறுப்பாளராக்கி அங்கேயே பிரச்சாரத்தில் ஈடுபடுத்தலாம் என்று திட்டமிட்டது அறிவாலயத்தலைமை. பிறகு அதுவே கனிமொழியை கோவைக்கு பொறுப்பாளராக்கினால் என்ன என்று யோசித்தது. என்ன காரணமோ, கட்சியின் மேல் மட்ட அளவில் இருந்த இந்த பேச்சு அப்படியே மறைந்து இளித்துரை ராமச்சந்திரன் முதல் கரூர் செந்தில் பாலாஜி வரை பொறுப்பாளராகப் போட்டு நகர்ந்து விட்டது.

அதில் செந்தில்பாலாஜி மட்டும்தான் அரசியல் சூட்சுமத்தோடு செயல்படுகிறார் என்ற நம்பிக்கை தலைமைக்கு வந்துள்ளது. இதற்கிடையே ஸ்டாலினும், உதயநிதியும் மட்டும் கோவைக்கு நான்கு முறை வந்து இப்படி கூட்டங்களில் கலந்து கொண்டு விட்டனர்.

அதையெல்லாம் தாண்டி இந்த முறை உதயநிதி வந்த போது திமுகவினரை மட்டுமல்ல, அதிமுகவினரைக்கூட புருவம் உயர்த்த செய்த விஷயம் செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்திருந்த பாக முகவர்கள் எனப்படும் பூத் கமிட்டி ஏஜண்டுகள் கூட்டம்தான்.

இந்த பூத் கமிட்டி ஏஜண்ட்டுகள் கூட்டம் என்பது ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தேர்தல் காலங்களில் நடப்பதுதான். அது ஒரு உள் அரங்கிலோ, ஏதாவது ஒரு மண்டபத்திலோதான் நடக்கும். பொதுவெளியில் பொதுக்கூட்டம் போல், மாநாடு போல் நடந்ததாக சரித்திரமே இல்லை. அதை உடைத்து திமுக இந்த முறை சரித்திரம் படைத்து விட்டது.

கோவை கொடீசியா பக்கத்தில் பெரிய மைதானத்தில் கூட்டம். சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டம். இது பொதுக்கூட்டமா, நிர்வாகிகள் கூட்டமா என்றே புரிபடாத அளவு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. எதற்காக இதை இப்படி திமுக நடத்த வேண்டும். அதிலும் தமிழகத்திலேயே முதன் முறையாக நடத்த வேண்டும்? அதில்தான் சூட்சுமமே இருக்கிறது என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

இதுதான் வரப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு கை கொடுக்கப் போகும் உத்தி என்கிறார்கள் அவர்கள். எப்படி?

திருமங்கலம் ஃபார்முலா என்று ஒன்றை அறிமுகப்படுத்தி வாக்காளர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் பாலத்தை ஏற்படுத்தியது திமுக என்பதும், அது எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதும் யாரும் அறியாததல்ல.

அதற்கு முழுமையான உறுதுணையாக இருந்தது பூத் கமிட்டி எனப்படும் பாக முகவர்கள்தான். அதை வைத்துத்தான் திமுக திருமங்கலம் மட்டுமல்ல, பர்கூர், தொண்டாமுத்தூர் உள்பட 2011 முன்பு நடந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் வெற்றிக்கனியை ஈட்டியது. அதனாலேயே அந்த தேர்தல்களை அதிமுக புறக்கணித்தது. அதேசமயம் திமுகவை விடவும் ஸ்டாராங்காக பூத் கமிட்டிகளை அமைத்து விட்டது. அதாவது நூறு பேர் வாக்காளர்கள் உள்ள ஒரு பூத்துக்கு 13 பேர் வீதம் நியமிக்கப்பட்டு அவர்கள் தேர்தல் நேரத்தில் அன்றாடம் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களை சந்தித்து பேசினர்.

அவர்களுக்கான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த பூத் கமிட்டிகள் பலப்பட்டன. 2011 தேர்தலில் மட்டுமல்ல, 2016 தேர்தல்களிலும், 2021 தேர்தல்களிலும் அதிமுகவிற்கு தேர்தல் பணியை ஆற்ற  கைகொடுத்தது இந்த பூத் கமிட்டிகள்தான். திமுகவிலும் இதுபோல் பூத் கமிட்டிகள் செயல்பட்டாலும், கோவையில் அவை சிறப்பாக செயல்பட்ட மாதிரி தெரியவில்லை. அதிமுக பூத் கமிட்டிகள் போன்ற மாயத்தோற்றத்தையே உருவாக்கி வைத்திருந்தன. அதுதான் கோவையில் திமுகவின் படுதோல்விக்கு வித்திட்டுள்ளன.

உண்மையில் பல பூத் கமிட்டிகள் அதிமுகவிடம் விலை போய்விட்டதாகவே தகவல்கள் கசிந்தன. அதை செந்தில்பாலாஜி கோவை பொறுப்புக்கு வந்த பிறகு கண்டுபிடித்து ஒழுங்கமைத்து இருக்கிறார். அவர்களை எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். அதை வெறுமனே அரங்கக்கூட்டத்தில் காட்டினால் ஒருவருக்கும் தெரியாது. சொல்லப் போனால் கட்சிக்காரர்களுக்குள்ளேயே நம்பிக்கை வராது. அதை தெளிவாக வெளிச்சம் போட்டுக்காட்டத்தான் இப்படி பாக முகவர்கள் கூட்டத்தை மாநாடு போலவே உதயநிதி முன்னால் நடத்திக் காட்டியிருக்கிறார் செந்தில் பாலாஜி. இது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு நன்றாகவே கை கொடுக்கும்!’’ என்கிறார்கள் திமுக நலம் விரும்பிகள்.

இதையே அதிமுக சைடில் கேட்டபோது, “இந்த பூத் கமிட்டிகள் என்பதே ஒரு ஏமாற்று வேலை. தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடியில் ஒரு முகவர் இருப்பார். அவர் உணவு, பாத்ரூம் போகும் வேளையில் மாற்று ஒருவர் இருக்க வேண்டும். அவ்வளவே இவர்கள் பணி. ஆனால் 100 பேருக்கு 13 பேர் பூத் கமிட்டி என்று அமைத்து வாக்காளர்களை சந்திப்பதன் மூலம் பெரிய அளவில் செலவு கணக்கு காட்டலாமே ஒழிய, அதனால் ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது.  இப்போது திமுகவில் இந்த பூத் கமிட்டி ஏஜண்ட்டுகள் கூட்டம் என்பது கூட கட்சிப் பெயரால் அவர்கள் சமீபத்தில் வசூலித்த தொகைக்கு கணக்கு காட்டும் விஷயமாக இருக்குமேயொழிய, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு துளியும் பயன்படாது!’’ என்று தெரிவித்தனர்.

scroll to top