சட்டப்பேரவை தேர்தலில் 150க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தேர்தலுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தை ஒருபுறம் முன்னெடுத்திருந்தாலும், அதேவேளையில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாகச் சென்று வழிபாடு நடத்தி வந்தார். இந்த சூழலில், வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, முதல்வர் ஸ்டாலின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து காரில் சமயபுரம் வந்த துர்கா ஸ்டாலின் முககவசம் அணிந்தபடி கோவிலின் பின்பக்க வழியாக சென்று மாரியம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, கொடிமரத்தை வணங்கிய அவர், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டி, அவர் பிரார்த்தனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.