வே.ரோகிணி
குகைச் சிற்பங்கள், பாறை ஓவியங்கள் என்ற சகலத்திலும் கைதேர்ந்தவன்தான் கலாவல்லவராயன்.
அதனாலேயே அவனை கலைவல்லவராயன் என்றழைத்தனர் சிற்ப, ஓவிய சாஸ்திரம் தெரிந்த விற்பன்னர்கள். தனக்குத் தோன்றியதை வரைந்தும், செதுக்கியும் சித்தம்போக்கு சிவம் போக்காய் இருந்த அவர்கள் எல்லாம் கலைவல்லவராயன் தயவில் செழிப்பும், செல்வமும் அடைந்தனர்.
அப்படி என்னதான் அந்த ஓவியத்திலும், குகை சிற்பங்களிலும் இருக்கிறதோ என்று ஓவிய, சிற்பங்களில் நாட்டம் இல்லாத மக்கள் தங்களுக்குள் கேள்வி எழுப்பி வாழ்ந்து வந்தனர். தன் தாத்தாவும், பெரியராஜாவுமான கோவிந்தராயன் கண்மூடுவதற்கு முன்பாக அவரின் ஆன்மாவை ஆற்றுப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் தன் கலை ஆர்வத்திற்கு தற்காலிகமாக தடை போட்டுக் கொண்டான் கலா வல்லவராயன்.
தன் தந்தையின் மூச்சு அடங்குவதற்குள்ளாகவே தனது மகனுக்கு சுயம்வரத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்று துடித்தான் கிருஷ்ணராயன்.
அந்த வகையில் சுயம் வரத்திற்கு வந்த பெண்கள் எல்லாம் இளையராஜாவின் முகம் பார்த்து நின்றனர்.
ஒருத்திக்கு கண்கள் மான் மருட்சியுடன் உருண்டன. இன்னெருத்திக்கு கெண்டை மீனை தோற்கடிக்கும் கண்கள். மடங்கி மடங்கி விரிந்தன இமைகள். அடுத்தவளுக்கு விலாங்கு மீன் போல துள்ளி அலைந்தது கருவிழிகள்.
ஆகா, இப்படியான யுவதிகளை பார்க்கும் பேறு இதற்கு முன் எந்த ராஜாவுக்கும் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் வரிசையாய் அமர்ந்திருந்த மந்திரிபிரதானிகளுக்குள்ளும் கூட எட்டிப் பார்த்தது. ஒவ்வொருத்தியும் பளிங்குச் சிலை போல, வெற்றிலைக் கொடி போல, ஆலிலை வடிவிலான உடல்வாகுடன் எல்லாம் இருந்தனர்.
அத்தனை பேரும் ஒன்று சொன்னாற் போல் தங்க நிறமாக ஜொலித்தனர். அனைவரது கைகளிலும் பிச்சிப்பூ மாலை தாங்கி நின்றனர். மற்ற தேசங்களில் எல்லாம் பெண் பார்க்கும் படலத்திற்கு ராஜாக்கள்தான் வரிசை கட்டி நிற்பது மரபு.
இங்கோ நிலைமை தலைகீழ். அப்படி மாறுவதற்கு காரணம் இருந்தது.
இந்த ராஜா கலையை காதலித்து முதல் தாரமாக ஆக்கிக் கொண்டான். எனவே அவன் பாறைகளையும், வண்ண வண்ண மூலிகைகளையும் நேசித்த அளவு நிஜ பிம்பமாய் சிற்பங்களாய் நிற்கும் ஆரணங்குகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
கலைஞானத்தில் ஒரு பெண்ணை சிற்பமாய், ஓவியமாய் வடிக்க நிர்வாணமாக்கி தன்னருகே நிறுத்தினால் கூட அவன் கண்களில் கலைச்சுடர் ஒளி வீசியதே ஒளிய காமம் துளிகூட ஏறெடுக்கவில்லை.
அப்படி மட்டும் அவன் நெஞ்சத்தில் காமநீர் சுரந்திருந்தால் இன்றைக்கு அவன் அந்தப்புரத்தில் ஆயிரம் சேடியர் உருவாகியிருப்பர்.
அத்தனை பெண்களைத் தொட்டுத்தடவி, அதன் உருவில் ஓவியங்களும், குகை சிற்பங்களும் உருவாக்கும்போது கூட அவன் நரம்புகள் அசைந்து கொடுத்ததில்லை.
ஆனால் அவன் ஸ்பரிசம் படும்போதெல்லாம் அதனால் ஒரு இம்சையை இளம்பெண்கள் அனுபவித்தனர். அதில் அவர்களுக்கு எங்கெங்கோ ஏதோவெல்லாம் சுரந்தது. சில சமயங்களில் அந்த ஆரணங்குகள் அப்படியே இளையராஜாவின் மீது விழும் தன்மைகளும் நடந்தது. அப்போதும் கூட தன்னை அவள் இதற்காகத்தான் மோகிக்கிறாள் என்றுணர்ந்து அவளை தன் சகசிற்பிக்கு தள்ளி விட்டு நகர்ந்தானே ஒழிய அவளை தன்னவளாக்கிக் கொள்ள துணியவில்லை.
இப்படி இளையராஜா புறக்கணித்த அழகுப் பதுமைகள் எல்லாம் அவனுக்கு ஒத்தாசை செய்ய வந்த ஓவியன்களுக்கும். சிற்பிகளுக்கும் விருந்தாகினர். அவர்களே அவளுக்கு கணவன்மார்கள் ஆகினர்.
ஒருவருக்கு ஒருத்தி என்ற முறையெல்லாம் கிடையாது. அவளுக்கு யார் எதுவோ, அவர்கள் எல்லாம் அனுபவிக்கப் பிறந்தவர்கள்.
இப்படியான சூழலுக்கும், உணர்வு மழுங்கலுக்கும் காரணம் இவனின் அன்னை மகிழினியின் வளர்ப்பே ஆகும். அவன் பிறந்ததிலிருந்து வளர்ந்தது வரை அவனை தன் தோழியர்கள் சூழவே வளர்த்து விட்டாள்.
அவனை எந்தப் பெண்ணும் தன் இச்சையால் துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காகவே அவனுக்கு இசையும், நடனமும், ஓவிய, சிற்பமும் தன் சேடியர்களை விட்டே கற்றுக் கொடுத்தாள்.
அவனைப் பொறுத்தவரை பெண்கள் அன்னை வடிவம். தெய்வத்தின் அம்சம். அதை சிதைப்பது மாபெரும் பாவம். ஆடைகளற்று அவர்களை நிறுத்தினாலும் கூட தன்னையே நிர்வாணப்படுத்தி நின்றது போல சலனமற்று இருந்தானே ஒழிய உணர்வுகள் கிளர்ந்தெழ வாய்ப்பில்லாமலே போய் விட்டது.
அப்படியானவனுக்கு சுயம்வரம் என்று ஏற்பாடு செய்து, வரிசையாய் அண்டை நாட்டு குறுநில, சிறுநில மன்னர் மன்னர்களின் இளவரசிகளை எல்லாம் நிறுத்தினால் மட்டும் அசைந்து கொடுத்து விடுவானா?
ஒவ்வொரு மங்கை நிற்குமிடம் நோக்கிப் போகிறான். அவர்கள் கையில் இருந்த மலர் மாலைகளை எல்லாம் வரிசையாய் வாங்குகிறான். அவற்றை அங்கேயே கீழே விட்டெறிகிறான். அப்படி விட்டெறிகையில் அந்த மலர் மாலை வைத்திருந்த மங்கையின் முகம் தொங்கிப் போகிறது. வருத்தம். இழக்கக்கூடாததை இழந்த தவிப்பு.
அத்தனை பேர் கைகளில் இருந்த மலர் மாலைகளும் இவ்வண்ணமே கிட்டத்தட்ட முடிந்தே விட்டன.
இதோ கடைசியாய் ஒரு பெண். அவள் அலங்க மலங்கப் பார்க்கிறாள்.
அவள் கண்களில் ஆசை இல்லை. சுழற்சி இல்லை. பயம் மட்டும் தழுவி நிற்கிறது. தகடூரான் அதியன் நாட்டைச் சேர்ந்த மந்திரிபிரதானியின் மகள். பெயர் மதிவதனி.
அதோ அவளின் பூ மாலையையும் வாங்கி திரும்பி வரப்போகிறான். இனி இவன் பார்க்கப் பெண்களே இல்லை என்ற நிலை. தடாலென்று என்ன நினைத்தாளோ தாய் மகிழினி. நேராக அவள் வசம் ஓடினான்.
மாலை வாங்கும் மகனை தீட்சண்யப் பார்வையுடன் பார்த்தாள். அவனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தாள்.
அவ்வளவுதான். அந்த சபையே அதைப் பார்த்து அதிர்ந்தது. அதில் மன்னன் கிருஷ்ணராயன் கூட கொஞ்சம் ஆடிப் போனான். கலைவல்லவராயன் அசரவில்லை.
தாய் அடித்த அடிக்கு கட்டுப்பட்டவன் போல் அந்த மலர் மாலையை அந்த யுவதியின் கழுத்தில் போட்டே விட்டான்.
அவ்வளவுதான் கொம்பூதினான் கொம்பூதி. குழல் இசைத்தான் குழல்மன்னன். யாழிசை மீட்டினான் இசை விற்பன்னன் ஒருவன். அங்கே சங்க நாதங்களும் முழங்கின. மற்ற தேசத்து மன்னர்கள் எல்லாம் கரவொலி எழுப்ப, அது வரை மலர்மாலைகள் வாங்கப்பட்ட பெண்கள் எல்லாம் பொறாமைக் கண்களுடன் பார்க்க, அதோ அந்த யுவதி அப்படியே மயங்கி விழுந்து விட்டாள்.
இது நடக்கும் என்று எதிர்பார்த்து விழுந்த மயக்கமா? எதிர்பாராமல் நிகழ்ந்ததால் வந்த வினையா?
அந்த நேரம் அந்த அரண்மனை மணகரை வாசலுக்கு வெளியே ஒரே ஆரவாரம். குதிரைகளின் குழம்போசை. படை வந்து விட்டது. தளபதி வந்து விட்டான்.
நான் கேட்ட நல்ல சேதியுடன் வந்திருக்கிறான் என்று கலைவல்லவராயனின் மனம் குதூகலித்தது. தன் பட்டத்து மகிஷியாகினவள் மயங்கி விழுந்ததைக்கூட அவன் கண நேரம் சட்டை செய்யவில்லை.
தந்தையே என்னை ஆசிர்வதியுங்கள் என்றான். கிருஷ்ணராயனின் காலில் விழுந்து வணங்கி எழுந்தான்.
தாத்தாவின் படுக்கையிலிருந்து கரட், கரட்டென்று ஒரு வித சத்தம் ஒலித்தது. படை வீரர்கள் புடைசூழ வீரனொருவன் கலைவல்லவராயனை நோக்கி வந்தான். காதோடு காதாக அந்த சேதியைச் சொன்னான். இளையராஜாவின் கண்கள் சட்டென்று மலர்ந்தது.
‘‘உண்மையாகவா?’’ என்று வாய்விட்டே கேட்டுவிட்டான்.
‘‘அன்னையின் மீது ஆணையாக!’’ என்றான் இவன்.
இளையராஜாவின் நா இப்படி அசைந்தது.
‘‘ஆகா கிடைத்து விட்டது நான் தேடிய ஓவியங்கள்.. புறப்படலாம்..!’’ என்று போக எத்தனித்தான் இளையராஜா. அவன் குறுக்கே வந்து ஒரு மென்கரம் தடுத்தது. ஏறெடுத்துப் பார்த்தான். அன்னை மகிழினி.
‘‘எங்கே செல்கிறாய். காரியத்தை முடித்து விட்டுச் செல்!’’ என்று அவள் குரல் ஓங்கி ஒலித்தது. அதே வேகத்தில் இவன் காதோடு பேசியவனை ஏறெடுத்தாள்.
‘‘செந்தூரா? என்ன சேதி கொண்டு வந்தாய்? எதற்காக இங்கே கரடி போல் நுழைந்தாய்?’’
மகாராணி. மன்னிக்க வேண்டும். இளையராஜாதான் ஒரு மலைக்கரட்டில் ஓர் ஓவியக்குறிப்பை தேடிக் கண்டுபிடித்து வரச் சொல்லி அனுப்பினார். மூன்று மாதங்களாகத் தேடிக் கிடைத்த சேதி ஒன்று கொண்டு வந்தேன். அதுதான் இளையராஜா இந்தப் பரபரக்கிறார்..!’’
‘‘அப்படியென்ன சேதி…!’’
சித்தண்ணா குகை சித்திரங்கள். அங்கே சமணப்படுக்கையும் சில கண்டேன்!’’
மகிழினியின் புருவமும் இப்போது ஆச்சர்யத்தால் விரிந்தது. இப்போது அந்த மண்டபத்தின் ஓரமாய் மயங்கி விழுந்த சுயம்வரப் பெண் கண்களைக்கசக்கிக் கொண்டு எழுந்திருந்தாள்.
—
கதைப்போம்.
THE KOVAI HERALD S.KAMALA KANNAN Ph. 9244319559