கோயமுத்தூர் ராஜாக்கள்

df.webp

‘யானோ வீரன்? இல்லை நானே கோழை!’

அந்தக்குதிரை வீரன். தன் யானை பறிபோனதில் மண்ணில் விழுந்து எழுந்த கமலவிஜயனுக்கு உடனே புரிந்து விட்டது.

ரட்டர் குல ராஜா புறமுதுகிட்டு ஓடி விட்டான். இனி கோட்டையைக் கைப்பற்றுவதில் தடையேதும் இல்லை.

இவன் முடிவெடுத்த கணத்தில் கோட்டைச்சுவர்களின் மீதிருந்த வீரர்கள் சங்கநாதம் முழங்கி விட்டனர்.

‘நாட்டை ஆபத்து சூழ்ந்து விட்டது. எந்த நேரமும் நாம் எதிரிகளின் வாளுக்கு இரையாவோம்! என்று ஆண்களுக்கும். நீங்கள் எந்த நேரத்திலும் எதிரிகளின் பாலியல் வக்கிரத்திற்கு பழியாவீர்கள்!’ என்று பெண்களுக்கும் சொல்லக்கூடிய இசை முழக்கம் அது.

அந்த ஓசை கிளம்பியதுதான் தாமதம். கமலவிஜயனின் படைகள் உள்ளே நுழைய முடியவில்லை.

மூலைக்கு மூலை தீச்சுவாலை எழுந்தது. அதனூடே பெண்களின் மரண ஓலம் அந்தப் பிராந்தியத்தையே கலங்க வைத்தது அத்தனை பேரும் தனக்குத்தானே நெருப்பு மூட்டி அழித்துக் கொண்ட கோலம். சிறிது சிறிதாக மூலைக்கு மூலை எழுந்த தீ கோட்டையில் கொளுந்து விட்டு எரிந்தது. எங்கெங்கும் உடல்கருகும், முடிகருகும் நாற்றம். உயிர் முனகல்களின் ஓசை.

கோட்டைக்குள் உட்புக நினைத்த கமலவிஜயன், தன் படை பரிவாரங்கள் பின்தொடர கோட்டைக்குள்ளிருந்து வெளியேறினான்.

அதேநேரம் ரட்டர் குலத்தலைவன், ஆயிரம் தலைகள் கொய்த மாவீரன். தாய்சமயம் மாறின மக்கள் வேந்தன் வடமலை உச்சியில் காடேகி இருந்தான். குடிகள் அழிந்த நிலையில் நான் மட்டும் இருந்த என்ன புண்ணியம் என்று கனிந்து கண்மூடித் தியானித்தான்.

அவன் மனக் கண்ணில் அத்தனை சம்பவங்களும் ஓடின. ‘எத்தனை உயிர்கள். எத்தனை அழிவு. ‘யானோ அரசன்; யானோ வீரன்? இல்லை நானே கோழை!’ அவன் உதடுகள் முணுமுணுத்தது.

அடுத்த விநாடி, அவன் வலக்கையில் இருந்த வாள் அவன் தோளுக்கு சற்று மேலே சென்று அவன் கழுத்தையே கொய்தது.

தூரத்தில் போய் விழுந்த அரசனின் மணிமுடியுடன் கூடிய சிரசு மூன்று முறை கண்களை திறந்து மூடி, நிலை குத்தி சாம்பல் பூத்தது. ரட்டர் குல ராஜாவின் கடைசி வேந்தனின் இந்த முடிவினைக் கேட்டபோது கொங்கணி வர்மன் ஆடிப் போய் விட்டான்.

‘‘என்ன காரியம் செய்தாய் கமலவிஜயா? என்னை எத்திரோய் இருக்கும் திசைக்கு அனுப்பி விட்டு என் அனுமதியில்லாமலே கோட்டை மீது தாக்குதல் நடத்த யார் உனக்கு உத்திரவிட்டது. நானே போரை நிறுத்தச் சொல்லி ஓலை கொடுத்து அனுப்பினேனே!’ என்று சினந்தான்.

அங்கே கமலவிஜயன் மட்டுமில்லை. குருநாத நாகநந்தியை நடுநாயகமாக வைத்து ஐந்து பஞ்சநந்திகளும் வீற்றிருந்தனர்.

அவர்களை மையமாக விட்டு ஆயிரக்கணக்கில் வர்த்தமானர்களின் சீடர்கள். மொட்டையடித்து, தாடி, மீசை துப்புரவாக மழித்து மொழு,மொழுப்புடன் காட்சியளித்த அவர்களின் நடுவே கொங்கணி வர்மன் சிறைப்பிடிக்கப்பட்டவன் போல்தான் தெரிந்தான்.

கமலவிஜயனுக்கு முன்னே குருநாத நாகநந்தி நகர்ந்து வந்தார். இவனைப் பார்த்து சிரித்தார்.

‘‘நீ இப்படித்தான் சொல்வாய் என்று தெரியும். நீ அந்த ஆழிப் பேரலை பூதத்திடம் பயந்து போய் விட்டாய். அதிலிருந்து காத்தவனிடம் சரண்டர் ஆகி விட்டாய் என்பதெல்லாம் எமக்குத் தெரியும். அதுதான் நீ வருவதற்குள் அத்தனையும் முடிந்து விட்டது. இல்லையில்லை, முடித்தே விட்டோம்!’’ என்று மேலும் சிரித்தார்.

உனக்கான கோட்டை வடக்கே தயராக இருக்கிறது. அங்கே அமர்ந்து நீ ஆட்சியைப் பார். நாங்கள் காட்சியைப் பார்க்கிறோம். இன்று முதல் உன்தேசம் வடக்கே உள்ள கொங்கணி தேசம் மட்டுமல்ல, இந்த ரட்டர் தேசம்தான். இந்த இரண்டும் சேர்ந்து கங்கர் தேசமாக விளங்கட்டும். ஆட்சி புரிவது என்னவோ நீதான். அதை நடைமுறைப்படுத்துவது நாங்கள்!’’ என்று நிறுத்தி நிதானமாக பேசினார்.

அதோ பேரிகைகளின் முழக்கம் காதடைக்கிறது. வாத்தியங்களின் சப்தம் இடி இடித்தது போல் கேட்கிறது. வர்த்தமான மகாவீரரின் துறவிகள் பல ஆயிரம் பேர் ஏதேதோ மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். அவர்களின் வாழ்த்தொலியோடு புத்தம்புது கோட்டையில் தனக்கான மகுடம் சூடி அரியணை ஏறினான் கொங்குணிவர்ம ராஜா.

ஆயிரமாயிரம் யானைகள். அதன் மீதமர்ந்த மாவூத்தன்கள். கொம்பூதின நேரம், பிளிறலும் காதுகளைக் கிழித்தது.

பல்லாயிரம் குதிரைகள். அதன் மீதமர்ந்த வீரர்கள். வில்,வேல் பிடித்து நின்ற காட்சி காலைச்சூரியனின் கிரணங்கள் பட்டு ஜொலித்தன. நிழலாய் அமர்ந்த வீரர்கள் வேல்களை உயர்த்தினர். வில்களை தோளில் சாற்றி நெடித்துயர்ந்து குதிரைகள் மீதேகி நின்றனர்.

அடுத்த லட்சம் படை வீரர்கள். உடம்பெங்கும் தோலாடை அணிந்து குத்தீட்டி, கொடுவாள் ஆயுதங்கள் தரித்து, ‘வேல், வேல்!’ என்று முழக்கமிட்டனர்.

இவர்களுக்கெல்லாம் முன்நாயகர்களாக நின்றவர்கள் கோயபாட்டன் வம்சாவழிகள். மண்ணின் மைந்தர்கள். காடு, மலைகடந்து புதுமன்னனை வாழ்த்திப் போற்ற அத்தனை பேரும் அணிவகுத்தனர். அவர்களுக்கெல்லாம் தவச, தானியங்கள் படியளக்கப்பட்டன.

அவர்களுக்கு அடுத்த நிலையில் இளங்கோசர்களின் வம்சாவழி. எட்டுத்திக்கிற்கும் பதினாறு தளபதிகளும் அங்கே குழுமியிருக்க, அவர்களின் பின்னே குடிகள் சூழ்ந்து நின்று வணங்கின. இந்த மண்ணை உயிரைக் கொடுத்தும் காத்த விசுவாசமிக்கவர்கள்.

அடுத்த நிலையில் ரட்டர்களின் வம்சம். ஆயிரம்தான் தோற்றோடி தன்னைத்தானே தலை கொய்து கொண்ட மன்னனின் குடிமக்கள் என்றாலும், இவர்களையும் நாம்தான் கட்டியாள வேண்டும். அத்தனை பேரும் நமக்கானவர்களாக மாற்ற வேண்டும் என்று நாகநந்தி பஞ்சந்திகளுக்கு கோடி காட்டியிருந்தார். அதை வழிமொழிந்து கொங்குணி வர்மனின் தலைமைத் தளபதி கொட்டு கொட்டவும் வைத்திருந்தான். இந்தப் பொறுப்பை இளங்கோசனின் தென் திசை தளபதிகள் இருவருக்குப் பொறுப்புக் கொடுத்திருந்தனர்.

ஆக, ‘இனி வரும் காலம் ரட்டர்கள் ஆட்சியாக இருக்காது. இந்த கொங்கணி வர்மனின் ஆட்சி அனைவருக்குமானதாக இருக்கும். இங்கே கோயன், கோசன், ரட்டன் என்ற பேதமில்லை. அத்தனை பேரும் கொங்கணிச்சீமையின் குடிமக்கள்!’’ என்றான் அரியணை ஏறிய கொங்கணி வர்மன்.

‘‘ஹோ.. ஹோ…!’’ என்று மீண்டும் ஆரவாரமிட்டனர் கோயன்குடிகள்.

‘‘ஆகா…!’’ என்று ஒலித்தனர் இளங்கோசன் வழி வந்தவர்கள்.

scroll to top