கோயமுத்தூர் ராஜாக்கள்-35; வாத்தியப்படையின் வெற்றி முழக்கம்

Pi7_Image_35.jpg

வே. ரோகிணி:

இரட்டர்குல மகாராஜாக்களுக்கு யாரோ மந்திரம் செய்துவிட்டார்கள் என்றுதான் ஸ்கந்தபுரத்து மக்கள் பேசலாயினர். இவர்களுக்கு செய்வினை செய்ய புதுசாக யாராவது வரவேண்டுமா என்ன? எல்லாம் அந்த சமணத்துறவிகள் செய்த கைங்கர்யம் என்றே ஏசினர்.

ரட்டர் ராஜ்யத்தில் பெரும்பகுதியை தன்வசப்படுத்தியிருந்தார்கள் வடக்கிருந்து வந்த சமணர்கள். அதில் பெஸ்தி ஜெயின தேவர் கோயிலுக்கு கொடுத்த தர்மசாசனநிலம் மாத்திரம் ராஜ்யத்தில் ஐந்தில் ஒரு பகுதி இருந்தது. அதற்கு தலைமைப் பீடமாக குலசத, பொம்மகொம்மன் கிராமம் இருந்தது. அந்த கிராமத்தின் நல்லது கெட்டது,

நில புலன்களைப் பற்றிய முடிவு மட்டுமல்ல, ஸ்கந்தபுரத்து சகல விஷயங்களின் முடிவுகள் கூட அரிஷ்டணனுடைய குரு பிரஞானபனாசாரியிடமே ஆலோசிக்கப்பட்டது. எனவே பிரஞானன் அரசர்க்கு அரசாய் விளங்கினான். சுத்தமாய் மழுங்க சிராய்த்த தலை.

உடலில் ஓர் ஒற்றை ஆடை, குலைத்து வைக்கப்பட்ட சீனக்களிமண்போல இருந்தான். அவனுக்கு உதவியாளர்களாக பஞ்சநந்தி நூறு பேர், சொக்கப்பன்னன் ஆயிரம் பேர், ஜெயதேவன் ஈராயிரம் பேர் என அணிவகுத்தனர்.

தன் சகோதரர்களை வீழ்த்தி விட்டு, தந்தையை வடக்கே ஜைனத்துறவியாய் பரதேசம் அனுப்பி விட்டு யாருக்கும் அடங்கா அரசனாக நின்ற சதுர்புய கன்னரதேவ சக்கரவர்த்திக்கு வடக்கே படையெடுப்பதே குறியாக இருந்தது. அதில் ஆங்கே குறுநில மன்னர்களாக விளங்கிய கங்கர்களை ஓட, ஓட விரட்டியடித்தான். ஹொய்சாளர்களைத் தாக்கினான். சாளுக்கியர்களை துவம்சம் செய்தான். அங்கெல்லாம் தன் கொடியை  நாட்டி ஆனந்தக்களிப்பூறினான்.

அப்படி வெற்றி வாகை சூடியபோதெல்லாம் வாத்தியக் கருவிகளான கொம்பு, குழலூதி ஆரவாரப்படுத்தினான்.  தன் வில் வீச்சு, வாள் வீச்சு, கதை வீச்சு எல்லாமே தன் படைத்தளபதிகளுக்கு கற்றுக் கொடுத்தான்.

இதற்காக ஒரு பெரிய படைத்தளம் இவன் நிர்மாணித்திருந்தான். இந்தத் தளபதிகளிடம் கற்றுக் கொண்டு வாள் வீச்சாளர்களின் வேகம் யாரும் ஆச்சர்யப்படத்தக்க அளவில் இருந்தது. அவர்கள் சாதாரண நிலையில் எல்லாம் இரண்டு கைகள், இரண்டு புஜங்கள், இரண்டு கால்களுடன் சாமான்யர்களாகவே இருந்தனர்.

ஆனால் ஆயுதங்கள் வீசும்போது மட்டும் அந்த ஆயுதம் தாங்கிய கரங்கள் நான்கு, எட்டாய் விரிந்தன. அந்த அளவு அதன் வேகம் இருந்தது. கண் இமைக்கும் வேகத்தில் ஒரு வாள் நான்கு பேரின் தலை சீவும் வேகத்தை எப்படித்தான் இந்த அரசன் படைவீரர்களுக்கு தாரை வார்த்தானோ என்றே மற்ற நாட்டுப் படைகளின் பேச்சாக இருந்தது.

இந்த வீரர்களே இப்படி வாள்வீசுகிறார்கள் என்றால் இவனின் மன்னனும், தளபதிகளும் எப்படியெல்லாம் விளையாடுவார்கள் என்று வியந்தனர் பலர். அவர்கள் எல்லாம் சதுர்ப்புயனை பகைத்துக் கொள்ளாது விலகியே சென்றனர். சிலர் இவனின் படைக்களத்தில் பயிற்சி பெறவும் விரும்பினர். முக்கியமாக இவர்களிடம் பயிற்சி பெற கன்னரத் தேசத்து அரசன் கமலவிஜயன் வந்து ஒரு மண்டலம் பர்ணசாலையில் தங்கினான்.

பொதுவாக மற்ற தேசத்து அரசர்களுக்கோ, குறுநில மன்னர்களுக்கோ சிற்றரசர்களுக்கோ போர்ப்பயிற்சி தரும் வழக்கம் ஸ்கந்தபுரத்தில் இல்லை என்றாலும் பஞ்சநந்தி ஜெயினன் சொன்ன சொல் தட்ட முடியவில்லை. கமலவிஜயனுடன் அவன் உற்றநண்பன் மகாதிரயனையும் துணைக் கழைத்து வந்திருந்தான்.

அதில் சதுர்ப்புயுனுக்கு இஷ்டமில்லை. உனக்கு வித்தை கற்றுக் கொடுக்கத்தான் பஞ்சநந்தி கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் உடன் ஒருவரை வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல என்றான் சதுர்ப்புயன். கன்னரதேசத்து அரசனோ நகைத்தான்.

‘ஸ்கந்தபுரத்தாருக்கு பகைவன் கன்னரத் தேசத்தவன். நம்மிடம் தோற்றோடி கூட்டம் எங்கே தன்னிடமே வித்தை கற்று தன்னையே எதிர்க்குமோ என்ற அச்சம். இல்லையா?’ என்றான். அவன் பேச்சில் கேலியின் சாயல். சதுர்ப்புயனுக்கு முகம் சிவந்தது. அதைப் புரிந்து கொண்டான் கமலவிஜயன்.

‘என்ன கோபம் மன்னா. நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். இவன் என் நண்பன். எந்த இடத்திலும் நாம் வித்தை கற்பிக்கும் இடத்திற்கு வரமாட்டான். எனக்கு அவ்வப்போது பணிவிடைகள் செய்யவே அவசியமாகிறான். நீங்கள் எண்ணுகிற மாதிரி எதுவும் நடக்காது’ என்றான்.

சதுர்ப்புயனுக்கு மறுதலிக்க முடியவில்லை. ஏதோ கடைகோடி ஜெயினனுடைய சிபாரிசு என்றால் பரவாயில்லை. நமக்கு எல்லாமுமாக விளங்கும் பஞ்சநந்தியின் சிபாரிசு. தட்டமுடியாதே!’ என உள்ளுக்குள் புழங்கினான்.

அப்படியென்ன பஞ்சநந்திக்கு தன் மனதில் முக்கியத்துவம் என்பதை அவனே அறிவான். இந்த நாற்கர வாள்வீச்சு வித்தையைத் தனக்கு அருளியவனே இந்தப் பஞ்சநந்திதான். ஜோதிடம், ஆருடம், மந்திரம், தந்திரம் என சகல கலைகளையும் கற்றவன் அவன்.

அதன் மூலம் அவனின் குருவுக்கு குரு பிரஞாபனாசாரியையே தன் கைக்குள் போட்டுக் கொண்டவன். இந்த பஞ்சநந்திதான் தன் இளமைக்காலத்தில் தன் தந்தைக்கு வாள் வித்தை வில்வித்தைக்கு ஆயுதம் ஏந்த அருளாசி புரிந்தவன். அவனே வயோதிக காலத்தில் கண்மூடித் தியானித்து சதுர்ப்புயனுக்கும் வாழ்த்து சொன்னான்.

‘வடக்கே போ. உன் வாளை வீசு. நிச்சயம் எதிரிகள் அஞ்சுவர்’ அவன் வார்த்தையில் மந்திரம் இருந்தது. இவன் மந்திரித்து விட்டவன் போலானான். அதே சமயம் நாகநந்தி முக்கியமான ஒன்றை வெளிப்படுத்தினான்.

‘சதுர்ப்புய. உன் உடலின் நாடி, நரம்பு, ரத்தநாளங்களில் எல்லாம் இசை ஊடுருவிக்கிடக்கிறது. உனக்கு தாளமானாலும், சங்க நாதமானாலும், குழலிசை என்றாலும், கொம்பூதல் என்றாலும் இஷ்டம்தானே என்று வினவினான். பின்னுக்கு ஓரடி எடுத்து நின்ற சதுர்ப்புயன் நின்றான்.

எப்படி இந்த பஞ்சநந்திக்கு மட்டும் நம் மனதைப் படிக்க முடிகிறது. அவன் கேள்விக்கு இவன் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஆம் என்பதற்கு அடையாளமாக தலையாட்டினான். அதுதானே? என்று சிரித்த பஞ்சநந்தி அடுத்த ஆக்ஞையை இட்டான்.

ஆயிரம் கொம்பூதிகள், ஆயிரமாயிரம் குழலூதிகள், மத்தள வாத்திய வித்தகர்கள் எல்லாம் நீ படைநடத்திச் செல்லும்போதெல்லாம் அழைத்துக் கொள். உன் படைகள் எதிரிப்படைகளைத் தாக்கும்போது அத்தனை வாத்தியங்களும் முழங்கட்டும், சங்கும், முரசும் அதிரட்டும். உன்னை வெற்றி கொள்ள யாராலுமே முடியாது’ என்றுரைத்தான்.

பஞ்சநந்தியின் வாசகம் இவனுக்கு அன்றிலிருந்து வேத வாக்கானது. எத்திக்கில் படைதிரட்டிச் சென்றாலும் வாத்திய பேரிகைகள் முழங்கின. கானகத்தில் உள்ள விலங்குகள் இவர்களின் வாத்தியக்கருவிகள் ஓசை கேட்டு தெறித்து ஓடின.

இவர்கள் படை நாட்டின் எல்லையில் வித்தியாசமான இசை ஒலி எழுப்பி அதிர வைக்கும் போது எது ஏதோ துன்பியல் சம்பவம் போல எதிரிநாட்டு அரசர்கள் அஞ்சி நடுங்கினர். முதல் பிழை முற்றும் பிழை என்பது சதுர்ப்புயனின் வாத்தியக்கருவிகள் மூலமே எதிரிகளுக்கு ஊட்டப்பட்டது. அதில் இடக்கை, வலக்கை, உடுக்கை, கின்னாரம், குழல், கொக்கரை, கொடுகொட்டி, கொட்டு, கொம்பு, கொழலு, சங்கு, சச்சரி, சலஞ்சலம், சிலம்பு, தக்கை, தண்டு, தாரை, தாளம், துத்திரி, துந்துபி, துடி, பறை, பாணி, பேரிகை, மத்தளம், மணி, முரசு, யாழ் இப்படி ஆயிரமாயிரம் இசைக்கருவிகள் இருந்தன. 

போருக்கு ஒருவன் படைவீரர்களை அனுப்புவான். அடுத்தது புரவிப்படையை ஏவுவான், அடுத்து கஜமும், ரதமும் அலைமோதும். ஆனால் இவனோ விதிவிலக்காக சங்கொலி, முரசம் படையையே அனுப்புகிறானே? என்று விநோதமாய்ப் பார்த்தனர்.

அந்த சங்கொலிப்பின் பலன் ஸ்கந்தபுரத்து மண்ணனுக்கு நரம்புகள் முறுக்கிக் கொண்டது. அவன் வாள் சுழற்றும் வேகத்தை அவனாலேயே அனுமானிக்க முடியவில்லை. அதைப் பார்த்துத்தான் இவனுக்கு இரண்டு கரங்கள் இல்லை. நான்கு கரங்கள் என்று எதிரிநாட்டு அரசர்களும் தம் படைவீரர்களை புறமுதுகிட்டு ஓட வைத்து தானும் ஓடி வனாந்திரங்களுக்குள் புகுந்தனர்.

ஒவ்வொரு முறை படை சென்று திரும்பும் போதும் குறைந்தபட்சம் ஆயிரம் வேலி நிலமாவது கைப்பற்றாமல் திரும்பியதில்லை சதுர்புயன். அதில் ஆனந்தித்து ஆராதனை எடுத்து வரவேற்றது ஜெயினர்கள் குழு.

யுத்தபேரிகை சதுர்ப்புயனுடையது விநோதம் என்றால், வெற்றி பேரிகை இன்னமும் கிளர்ச்சி பெற்றது. ஊர் முழுக்க அன்று கொண்டாட்டம்தான். இவன் வெற்றி பெறப் பெற, இங்கே வரும் ஜெயினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. நாட்டில் நடமாடுபவர்களில் இருவரில் ஒருவர் ஜைனர்களாகவே இருந்தனர். பலர் ஜைனமதத்தைத் தழுவினர்.

சதுர்ப்புயனும் அவன் பட்டத்தரசி தேவியும், ஒரே மகன் திருவிக்கிரமனும் ஒரு நன்னாளில் ஜைனமதம் தழுவினர். இப்படியான சூழலில் அரண்மனை வாசலில் வயோதிக வெள்ளுடையணிந்து முனிவர் ஒருவர் அரசனைப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்தார். அதை காவலாளிகள் வந்து சொல்ல, அவரை நேர்காண வரச் சொன்னான் அரசன்.

வந்த மனிதர் பிராயம் தொண்ணூறு கடந்திருக்க வேண்டும். சந்தன நிறத்தில் இருந்தார். வெள்ளுடை அங்கி தரித்திருந்தார். காடுமாதிரி வெள்ளை முடி வெள்ளியாய் அலையாய் சுருண்டது. தாடியும் கண்டமேனிக்கு தாடைக்கு கீழே தொங்கியது.

கைகளில் ஏதோ ஒரு ஜெபமாலை உருட்டிக் கொண்டிருந்தார். புருவத்திலும் கற்றையாய் வெண்முடி. அடிக்கடி கண்களை சிமிட்டிக் கொண்டார். தளர்ந்த நடையுடன் வந்தவர், ‘மகனே என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டார். சதுர்ப்புயன் விழித்தான்.

‘‘உன் சின்னப்பாட்டி சில்வியா நினைவிருக்கிறதா? அவள் மைந்தன் எத்திரோய் அறிவாயா? அவன் உனக்குப் பெரியப்பன் முறை என்பதாவது தெரியுமா?’’

சதுர்ப்புயனின் கண்களில் பளீர் வெளிச்சம்.

‘‘பெரியப்பா… நீங்களா?’’ என்று பிரமித்து எழுந்தே விட்டான் சதுர்ப்புயன்.

  THE KOVAI HERALD S.KAMALA KANNAN PH.92443 17182 

scroll to top