கோயமுத்தூர் ராஜாக்கள் 33:அரிஷ்டண்ணன் என்கிற ஜெயினன்

Pi7_Image_33.jpg

வே.ரோகிணி:

கண்கள் இடுங்கியிருந்தன. உடம்பில் என்புதோல் மாத்திரமே மிச்சமிருந்தது. படுத்த படுக்கையாய் இருந்தாள் அந்த மூதாட்டி. அவளை கிட்டப்போய்ப் பார்க்கும்போது இவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று நமக்குத் தோன்றும். அவளா, நிச்சயம் இருக்காது என்றே மறுபடி மனது இயம்பும்.

எப்படியான அழகி அவள், பெளர்ணமி நிலவு போல் ஒளிரும் தேகம். காண்பவரை வசீகரிக்கும் கண்கள். சந்தன மரத்தை நெகுநெகுவென்று இழைத்துத் தடவியது போன்ற ஒரு நிறம். அப்படியானவள் நிச்சயம் இவளாக இருக்க மாட்டாள் என்று எண்ணுவதில் வியப்பில்லைதான். மகிழினி எப்படியான பேரழகி,

கொடுமணத்தில் வணிகர்கள் வசப்பட்டு கடல்கடந்து யூதராஜ்யம் சென்று, சில்வியா என்பவளுக்குத் தோழியாகி, அங்கிருந்து சிலுவைத் தண்டனைக்குப் பயந்து பாய்மரமேறி இங்கே வந்து கிருஷ்ணராயன் என்பவனுக்குப் பட்டமகிஷியாகி, கலாவல்லவராயன் என்பவனுக்கு தாயாகி, ஸ்கந்தபுரம் தேசத்தை தன் சுட்டுவிரல் பார்வையால் வசீகரித்தவள் மரணப்படுக்கையில் கிடக்கும்போது மிச்சம் என்ன இருக்கும்? என்புதோல் போர்த்த உடம்புதானே? என்பதை ஏற்கும் சக்தி அவளைக் காண்பவர் யாருக்கும் இல்லை.

ஆனால் அவளுக்குள் இருந்தது. எந்த நேரம் என்றாலும் நாம் கண்ணை மூடி விடலாம். அதற்குள் நம் புதல்வனின் புதல்வன் தான் பாட்டனின் நாமகரணம் சூடிக் கொண்ட கோவிந்தராயனிடம் சில சத்திய வாக்குகள் முக்கிய வாக்குகளாக வாங்கிட வேண்டிய நெருக்கடியில் இருந்தாள். பூங்கிழவி, அப்படியென்ன ஆளும் அரசனிடம் சத்தியம் வாங்கிட முடியும். தன் பட்டத்தரசன் கிருஷ்ணராயன் எப்பவோ பரலோகம் போய்விட்டான்.

 அதற்கு முன்பே தன் தோழி சில்வியாவும் தன்னிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான். அவள் மகன் எத்திரோய் எப்போது கோவிந்தராயன் பூமியில் அவதரித்தானோ, அப்போது சென்றவன்தான். புலியூர் தேசத்தில் தோமா அப்படியென்னதான் இவனுக்கு வசியம் செய்தாரோ, இவனே இன்னொரு தோமாவாக மாறிவிட்டான். தோமையர் அந்தப் பிதா ஏசுகாவின் வடிவம் என்றால் இவனும் அதே வடிவம்தானே. அது ஒரு சந்நியாசக் கோலம் என்றும் சொல்லலாம். 

சில்வியா மரியாவின் சிருஷ்டி என்றால் எத்திரோய் அப்படியே இயேசுகாவின் பிம்பம். எனவே புலியூர் வந்த தோமையாவுடன் ஐக்கியப்பட்டதில் ஆச்சர்யமில்லை. அவர்களை எப்படியாவது மனதை மாற்றி நம் அரண்மனையில் நிரந்தரவாசம் செய்திட வேண்டும். எத்திரோய்க்கு கலைவல்லவராயனுக்கு அடுத்த அந்தஸ்து கொடுத்திட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஆரம்பத்தில் இருந்தாள் சில்வியா.

தன் மகனின் போக்கு, சிற்பம், ஓவியம், குகைவெளி என்றிருந்ததால் இனி இவனைக் கொண்டு ராஜாங்கக்காரியம் எதுவும் நடத்த முடியாது. எனவே அதற்கு தன் வளர்ப்பு மகனைப் போல உள்ள எத்திரோய் உதவுவான்; சில்வியாவும் துணை நிற்பாள் என்ற நம்பிக்கையோடும்தான் இருந்தாள்.

ஆனால் அதை பாரம்பர்யமாய் இருக்கும் இரட்டர்களின் வாரிசுகள் ஏற்குமா? நம்மையே அல்லவா யானைக்கழுவில் ஏற்றி விடுவார்கள் என்று மனதில் பட்டதை வெளியே சொல்லவும் பயந்தாள் மகிழினி.  தன் துணைவன் கிருஷ்ணராயனுக்கு பதினைந்து மனைவியர். தான் மட்டுமே அதில் பட்டமகிஷி. அதுவும் தன் துணையின் தாய் செய்து வைத்த பிரயக்ஞம். இல்லாவிட்டால் இவளும் அரசனின் அந்தப்புரத்தின் சுகம் தரும் வேசியாகவே இருந்திருக்க வேண்டி வந்திருக்கும் என்பதை இவள் எண்ணாத நாளில்லை.

அது எந்த கடவுள் கிருபையோ என்று நினைத்தவேளையெல்லாம் சில்வியா குறுக்கில் வருவாள். என் தேவனின் தேவன், தேவாதி தேவன்தான் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்ப்பித்திருக்கிறான். அவனை வணங்கு என்பாள். இவளுக்கு அதில் உடன்பாடில்லை. நாளுக்கு நாள் சில்வியாவின் தேவன் பைத்தியம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

உரோம நகரிலிருந்து தூதுவர்கள் வரும்போதெல்லாம் உங்கள் நாட்டிற்கே இந்தப் பித்துப் பிடித்தவளை அழைத்துச் சென்று விடுங்கள். அங்கே தேவனின் திறந்த கல்லறையிலேயே படுத்துறங்கி சாகட்டும் என்று கூட சொல்லிப் பார்த்தாள்.

அவர்களோ, இப்படி தேவன் பித்துப்பிடித்தவர்களை எல்லாம் அங்குள்ள யூதராஜா ஒரு நிமிடம் வைத்திருப்பதில்லை. அவர்களுக்கெல்லாம் சிலுவைத் தண்டனைதான், நெஞ்சாணிதான் என்று சொன்னார்கள். ஆக அவளின் சொந்த நாட்டை விட அவளுக்கும், அவள் மைந்தனுக்கும் இந்த ஸ்கந்தநாடு வசதியாகவும், பாதுகாப்பானதாகவும் இருந்தது என்பதை இவள் மட்டுமல்ல, சில்வியாவும், எத்திரோயும் உணர்ந்தே இருந்தார்கள்.

எனவேதான் மகிழினி தரும் துன்பத்தையெல்லாம் சகித்துக் கொண்டிருந்தார்கள். மகிழினி துன்பம் எப்படியானது தெரியுமா? ஒரு நாள் அவள் புதல்வன் கலைராயன் மலைக்குகைக்குப் போனவன் திரும்பி வரவேயில்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆதினி தன் இணையான் தன்னுடன் இணை சேரா வருத்தத்திலேயே உருகிக் கரைந்து கொண்டிருந்தாள். அவளின் தேகம் கருத்தது. வளைகள் சுமந்த கரங்கள் சூம்பிப் போய் அவை அப்படியே கழன்று விழுந்து கொண்டிருந்தன.

அடிவயிற்றில் ஏந்திய மேகலை வற்றின வயிற்றோடு ஒட்டிப் போயின. மேடிட்டுப் பூரிப்புடன் கிண்கிணி நாதத்துடன் அவளின் இடையில் தவழ வேண்டிய அற்புத மணி. இப்படியா அர்த்தமிழந்து போவது?

இனி இவள் உயிர்வாழ்வது ஏது என்ற நிலைக்கு வந்த வைத்தியர்கள் அவளைக் காப்பாற்ற ஒரே ஒரு உபயம்தான் சொன்னார்கள். இளையராணிக்குப் பீடித்திருக்கும் விரகவியாதிக்கு உடனடியாக ஓர் ஆண் வாடை இல்லாவிட்டால் சங்கடம்தான் என்பதுதான் அது.

கலை வல்லவராயனை சமண சித்தன் குகைக்குள் சென்று பல முறை பார்த்து விட்டாள். காலில் விழுந்து கதறியும் விட்டாள். அங்கே இருந்த சமணமுனியின் முன் மண்டியிட்டு கரைந்தும் பார்த்தாள். அசைந்து கொடுக்கவில்லை மகன்.

இனி வேறு வழியில்லை. ஆதினியைக் காக்க வேண்டுமானால் அவள் விரகத்தைப் போக்க வேண்டுமானால் சில்வியாவின் மைந்தன் எத்திரோய்தான் அருமருந்து என்று எண்ணினாள்.

ஓர் இரவு நேரம். வேறு எந்த பெண்ணும் தன் மகனின் இணைக்கு செய்யத்துணியாத செய்கையை இவள் செய்யத்துணிந்தாள்.

தீப்பந்தங்கள் வெளிச்சம் அரண்மனையின் நாலா திசையிலும் சுடர் விட்டது. அதன் வெளிச்சத்தை சன்னமாக்கச் செய்தாள் அரண்மனைக் காவலர்களை விட்டு. பூவையர் தங்கும் சாலைக்கு சற்று தள்ளித்தான் சில்வியாவின் பிள்ளை எத்திரோய் சன்னியாசி போல் ஓர் கட்டிடத்தில் வாசம் செய்து வந்தான் எத்திரோய். அவனைச் சொன்னால் மசியமாட்டான். செயலில்தான் இறங்கியாக வேண்டும்.

ஆதினியை தேவதை போல் அலங்கரித்தாள். அரண்மனை சேடியர்களை வெளியேற்றினாள். தானே அவளை அழைத்து வந்து அக்கம் பக்கம் பார்த்தபடி எத்திரோய் அறைக்குள் ஆதினியைத் தள்ளி கதவுகளை இறுக மூடினாள்.

இப்போது அறைக்குள் அவளும், ஆதினியும், எத்திரோயும்தான். ஆழ்ந்த  உறக்கத்தில் இருந்த எத்திரோயின் மஞ்சனத்தின் அருகே இவளை விட்டு விட்டு வெளியேறி விட்டாள்.

அகில் மணம். சந்தன சுகந்தம். இன்னமும், மல்லிகை, மருக்கொழுந்து, ஜவ்வாது வாசத்துடன் அவன் காலடியில் இருந்தாள் ஆதினி. அவள் கண்களில் நீர் ஆறாகப் பெருகியது அதற்குப் பின் நடந்தது ஏதும் தெரியவில்லை.

அதிகாலைப் பொழுதில் அந்த மஞ்சனத்தில் ஆதினிமட்டுமே இருந்தாள். எத்திரோயைக் காணவில்லை. கண்ணும் கண்ணும் வைத்த மாதிரி தன் மருமகளை அப்புறத்தில் விட்டு இப்புறத்தில் கொண்டு வரவே மகிழினி இந்த யுத்தியைக் கையாண்டாள். என்னதான் இருந்தாலும் பஞ்சும், பஞ்சும் பக்கத்தில் பற்றிக் கொள்ளும்.

அதிலும் தன் மகன் கலைவல்லவராயனை விட அதீத  மோகிப்பு ஆதினிக்கு எத்திரோய் மீதுதான் உண்டு என்பதை மகிழினி உணர்ந்தே இருந்தாள். எனவே அவன் சும்மா இருந்தாலும் இவள் விடமாட்டாள். மத்தகத்தில் யானை நினநீர் தழும்பிட நிற்கும் மஸ்துவின் தன்மை அவள் கண்களில் இவள் கண்டாள்.

தன் மகனுக்கு ஒரு வாரிசை மருமகள் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை, தன் மகனுக்கு மகனாய் இருக்கும் எத்திரோயின் வாரிசை சுமக்கட்டுமே, அது அரச வாரிசாக வளரட்டுமே என்பதுதான் மகிழினியின் சூழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அதுவும் ஈடேறவில்லை. அந்த சம்பவத்தைப் பற்றி ஆதினியும் சொல்லவில்லை. அதற்குப் பிறகு எத்திரோய் இவளை ஏறெடுத்தும் பார்த்தவளாயில்லை. அதைப் பற்றி சில்வியாவிடம் எத்திரோய் சொல்லி, அவள் தன்னிடம் கடுகடுப்பாளோ, முகம்திருப்பிக் கொள்வாளோ என்ற பயத்துடனே நகர்ந்த மகிழினிக்கு அந்தத் துன்பமும் நேரவில்லை.

இந்த நிலையில்தான் வேறு வழியே இல்லாமல் ஆதினியை சமணமுனி குகைக்கே இட்டுச் சென்றாள். அவர் காலடியில் தானும் விழுந்து அவளையும் விழச்செய்தாள். அதற்கான பலன் இருக்கவே செய்தது. அசலான மனைவியைக்கூடுவதற்குக் கூட ஒரு சில பொழுதுகளே தவணை சொல்லி அந்தப்புர வாசம் செய்தான் மகன். ஆதினியும் இளவரசு ஒருவனைப் பெற்றெடுத்தாள்.

நல்லவேளை அரச வம்ச வாரிசு, அரச விருத்தி இப்படியாவது நடந்ததே என்று மகிழினி எண்ணாத நாளில்லை. இந்த சுவட்டிலேயே கிருஷ்ணராயனும் போய்ச்சேர்ந்தான். கலைவல்லவன் குகையிலேயே சஞ்சரிக்க, தளபதிகளைக்கூட்டி தன் மகன் கோவிந்தராயனுக்கு பதினான்கு வயதில் பட்டம் சூட்டினாள் மகிழினி. அடுத்து ஒரு வம்ச வாரிசுக்கு மருக்கொழுந்து என்ற துணையை ஏற்படுத்தினாள்.

மகனைப் போல் இல்லை மகனின் மகன். அன்றாடம் அவனுக்கு துணையின் தேவை இருந்தது. கூடவே ராஜ்யத்தின் மீதும் மோகம் இருந்தது. விட்டகுறையோ தொட்ட குறையோ அப்பனைப் போலவே சித்திரங்கள், சிற்பங்கள், கலைப் பொருட்கள் மீதெல்லாம் இவனுக்கும் மோகம் இருந்தது.

கூடவே சமண முனிகளின் மீது பற்றிருந்தது. அடிக்கடி குகைவெளியில் தன் தந்தையை சந்தித்து வந்ததன் விளைவு அப்படியொரு தருமசிந்தனையை அவனுக்குள் வளர்த்திருக்கும் என்ற எண்ணத்தில் மூதாட்டியே ஆகிப்போனாள் மகிழினி. தோமையர் குடிலுக்குச் சென்ற சில்வியா அங்கேயே இயற்கையோடு கலந்தாள்.

இனி தனக்கும் எந்த நேரமும் மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலையில் பேரன்  கோவிந்தராயன் பட்டம் ஐந்து தன் மூத்த மகன் சதுர்ப்புச கன்னரதேவ சக்கர வருத்திக்கு ஆறாம் பட்டம் சூட்டி வைத்தான். முன்னதாக சகை நான்கு, சுபானு பதினேழு வைசாக சுத்த பெளர்ணமியிலே இந்த கோவிந்தராயன் என்ற பட்டத்து அரசன் அரிஷ்டண்ணனென்கிற செயினனுக்குப் பூமி சாசனம் பண்ணிக் கொடுத்தான். அந்த பூமி குலஸ்த கிராமத்திலே சேர்ந்திருக்கிற பொம்ம கொம்மனென்கிற கிராமத்திலே ஏழு கண்டகம் விரைக்கிற பூமி.

அதைப் பார்த்தவாறே கண்மூடினாள் சில்வியா. அந்தப் பூமியைப் பெற்ற ஜெயிணன் வேறு யாருமல்ல, இவன் அப்பன் கலைவல்லவராயனை தன்வசம்கொண்ட ஜெயினனுடைய வழித்தோன்றல்.

கதைப்போம்

THE KOVAI HERALD KAMALAKANNAN.S Ph.92443 17182

scroll to top