வே.ரோகிணி
மகிழினியும், சில்வியாவும் ஒரு சேர மகிழ்ச்சியில் இருந்தனர். அதை விட அதிகமான மகிழ்ச்சி நாட்டு மக்களுக்கு வாய்த்திருந்தது. நாடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
கோட்டை அரண்மனை வாசலில் நேரம் ஆக, ஆக மக்கள் கூட்டம் பெருக்கெடுத்துக் கொண்டேயிருந்தது. வருபவர்களுக்கு பானக்கமும், கல்இனிப்பும் வழங்கிக் கொண்டிருந்தனர் சேவகர்கள்.
ராஜாதி ராஜர், இளவரசர் வாழ்க கோஷங்கள் அங்கே விண்முட்டின. கலைவல்லவராயரின் வம்ச வாரிசு, நம் ஸ்கந்த தேசத்துக்கு வந்த அருட்கொடை வாழிய வாழிய என்றனர் மக்கள்.
ஆம் கலைவல்லவராயன் துணைவி ஆதினிக்கு இன்று காலை ஆண் பிள்ளை பிறந்திருக்கிறது. சமண முனி கூற்றுப்படி மகன் கலைவல்லவராயனை ஒரு வார காலமே அழைத்து வந்திருந்தாள் மகிழினி. அவனை அந்தப்புரத்தில் ஆதினியோடு கூடச் செய்வதில் பெரும்பாடு பட்டும் விட்டாள்.
இராத்திரி நேரம். சந்தனம், அகில் என நாணாவித புகைகள் கிளப்பி, பொற்றாமரைக் குளத்தில் குளித்து நறுநெய் பூசி ஆதினி காத்திருந்த நேரத்தில் கூட அவன் வரவில்லை.. அர்த்தமண்டபத்தில் மோட்டு வளையைப் பார்த்தவாறிருந்தான் கலை வல்லவராயன்.
ஆதினியோ நாட்பட்ட கட்டுக்கடங்கா விரகதாபத்தில் சுருண்டு வாழ்ந்தவளுக்குள் இன்று மட்டும் இன்ப ஊற்று கொப்பளித்துக் கொண்டிருந்தது. நடுநிசி நேரம்தான் அவன் வந்தான். அதுவும் அவன் அன்னையின் கட்டாயத்தின் பேரில் உள்நுழைந்தான்.
அவனை கசக்கி, அணைத்து முகர்ந்து தன்னை மறந்து இன்பம் துயிக்க நிறைய ஒத்திகைகளைப் பார்த்து வைத்திருந்தாள் ஆதினி.
‘ஆமாம் ஆதினி இந்த முறை நீ கலையை சரிக்கட்டவில்லை என்றால் அவன் எனக்கு மகனாகவும் வரமாட்டான். உனக்கு கணவனாகவும் இருக்க மாட்டான். அவன் வேறு லோகத்தில் சஞ்சிரிக்கிறான். அவன் இந்த அளவு இரங்கி நாட்டுக்கு வந்ததே பெரும்பாடு!’ என்றெல்லாம் மகிழினி நிறைய போதித்திருந்தாள்.
ஓர் இரவு இன்பம். இரண்டு இரவு சோர்வு. மூன்றாம் இரவு மன்மதபானம் பருகல் எனக் கடந்து திடீரென்று ஒரு நாள் பழையபடி காணாமல் போனான் கலைவல்லவாரயன். எங்கே போயிருப்பான் அவன்.
கிடக்கிறதெல்லாம் கிடக்க சமணமுனியைப் பார்த்து குகைக்குள் சேவகம் செய்து கொண்டிருப்பான் என்று எண்ணியபோதே மகிழினிக்கு கோபம் கொப்பளித்தது.
ஆனாலும் கூட ஒரு வார காலத்தில் ஆதினி புதுமெருகு சூடியிருந்தாள்.
அவளின் தாபம் அகன்று போய் ஓர் அமைதி குடி கொண்டிருந்தது அவள் முகத்தில். அரண்மனை மருத்துவச்சிகள் கூட அவள் அகமும், முகமும் பார்த்து, ‘கவலைப்படாதீர்கள் அரசி. நிச்சயம் நம் இளவரசியின் வயிற்றில் சூர்ய குமாரன், நம் குல வம்சம் உதிக்கப் போகிறது!’ என்று ஆருடம் சொன்னார்கள்.
அது மூன்று மாதத்தில் உறுதிப்பாடாயிற்று. பத்தாம் மாதம் அழகான மகவை பெற்றெடுத்திருக்கிறாள் ஆதினி. அந்த சுபநிகழ்வு சற்று முன்னர்தான் நிகழ்ந்தது.
இதே வேளையில் தான் காப்பாற்றப்பட்டது போல் உணர்ந்தான் எத்திரோய். அன்னையிடம் சென்றான். என்னை ஆசீர்வதியுங்கள் தாயே என்றான் சில்வியா அதை எதிர்பார்த்தே இருந்தாள்.
தோமையரை புலியூருக்கு தரிசிக்கப் போன நாளிலிருந்தே மகன் எத்திரோய் தானும் தோமையருடன் சென்று மக்களுக்கு சேவகம் செய்யப்போகிறேன் என்றே கூறி வந்தான்.
அதை உடனே செயல்படுத்தினால் மகிழினியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அப்போதே பக்குவமாக மகனுக்கு எடுத்துச் சொல்லி வந்தாள்.
ஆகா அந்தக் காட்சிதான் எப்படியான அற்புதக்காட்சி.
‘தோமா, தோமாஸ்.. தோமா என்று கடலைகளைத் தாண்டி ஓங்கி ஒலிக்கிறது மக்களின் கூக்குரல். பாய் மரக்கப்பலிலிருந்து மாறி கட்டுமரத்தில் வந்த புனிதர் அப்படியே மணல் தரையை முத்தமிட்டு, கை தொட்டு வணங்கி, வானத்தைப் பார்த்து கண்ணிமை செருகி, தியானித்து நிமிர்ந்து நேர் கொண்டு பார்த்தாரே. அதில்தான் எப்படியான அருள். குழந்தமை.
ஆகா.. இந்த மண் புனிதமடைந்து விட்டது. மக்கள் புனிதமடைந்து விட்டது. இந்த மக்களின் பாவம் யாவும் கழுவப்பட்டு விட்டது. இனி நாம் இந்த அருளாளரின் கால்களே கதி என்று இருந்தால் போதும் என்று நிறைந்த மக்களிடம் தாங்கொணாத எண்ணங்கள். அதில் உச்சபட்ச எண்ணமுடையவளாய் இருந்தாள் சில்வியா.
அதை விட அதிகமயக்கத்துடன் இருந்தான் எத்திரோய். அம்மா தன்னிடம் வர்ணித்த அந்த யேசுகாவே வந்தது போல் ஒரு வெளிச்சம். அவர் கண்களின் அருட்சுடர் யார் மீது படும் என்பதுதான் திரண்ட மக்களின் ஒரே எண்ணமாக இருந்தது.
அந்த அதிர்ஷ்டம் சில்வியா தன் மகன் எத்திரோய்க்கு வாய்க்கும் என்று நினைத்தும் பார்க்கவில்லை. ஆம். அவர் அருள்ஒளிப் பார்வை அவன் மீதே விழுந்தது.
அங்கிருந்து அவர் கண்கள் அகலவில்லை. இரண்டு கைகளையும் அகல விரித்து வா மகனே என்பது போல் வாயசைவு காட்டினார். ஓடினான் எத்திரோய். கூட்டத்தை தள்ளிக்கொண்டு, மக்கள் வெள்ளத்தை பிளந்து கொண்டு புயலென அவன் பாய்ந்து ஓடியது சில்வியாவின் கண்களுக்கு காற்றுத் துகள் பறப்பது போலத்தான் இருந்தது.
போன வேகம் என்ன? தோமர் கால்களில் விழுந்த வேகம் என்ன? அவர் இவனை இறுக அணைத்த கோலம் என்ன? அப்படியே அதைப் பார்த்து கண்களில் சில்வியாவுக்கு அவளையறியாமல் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
தோமரே. தோமா, அருள் ஒளியே. என் அன்பு வெள்ளமே! என்று தன் அங்கி தரையில் தவழ இவளும் ஓடினாள். அவர் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.
காற்றின் வேகத்திற்கு கடலைப் பிளந்து வரும் நாவாயின் வேகத்தைக் கண்டு அலைகள் ஒதுங்குவது போல் மக்கள் ஒதுங்கினர். தேவமாதா என்பது அவள் ஒளிப் பிழம்பிலேயே அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
அவர் ஆசீர்வதித்தார். இவர்கள் ஆசீர்வாதம் வாங்கினர். அப்போதே தன் மகனை அப்போஸ்தலருக்கு ஒப்புக் கொடுத்து விட்டாள் சில்வியா. ஒரு நாள், இரண்டு நாள் என அங்கேயே தங்கியிருந்தவள். மக்கள் பரவசத்துடன் தோமாவைக் காணச் செல்வதையும், ஆசி பெறுவதையும் கண்டு இன்புற்றாள். அவர் பாதத்திலேயே அமர்ந்து கிடக்கும் எத்திரோயை எண்ணி எண்ணிப் பூரித்தாள்.
தோமா தங்கியிருந்தது ஒரு மலைக்குகை. தேவதூதனுக்கு தூதனாய் அவதரித்த அவரின் புண்ணான கால்கள் அழுந்தி அழுந்தி உரமேறப்போகும் புண்ணிய பூமி என்பது அவளுக்கு அப்போது தெரியவில்லை.
ஞானம் வார்ப்பதால் ஞானபூமி, அந்த குகையின் உள்ளே ஒரு பாறை இடுக்கு. அதனுள்ளே ஒருவர் ஒருவராக குனிந்து மட்டுமே செல்ல முடியும். உள்ளே சென்றால் ஒரு சிற்றோடை. வரும் மனிதர்கள் தாகம் தணித்த பின்பே அதைத் தாண்டி உள்ள குகையில் அமர்ந்திருக்கும் தோமரை தரிசிக்க முடியும்.
அதற்குள்தான் எத்தனை முறை சென்றிருப்பாள் சில்வியா. அங்கேயே குடியிருந்து விட ஆசைதான். ஆனால் மகிழினி தேடிக் கொண்டு வந்து விட்டால்? படைவீரர்களை அனுப்பி விட்டால்?
அதனாலேயே அவள் புனிதரை கடைசியாகத் தரிசித்து விட்டு புறப்பட வேண்டியிருந்தது. தன் அருட்பார்வையை முதன் முதலாக வீசிய குழந்தையை புனிதருக்கு தாரை வார்ப்பதே அன்னையின் கடமை. அதை செய்வதே தனக்கான கடன் என்று எத்திரோயிடம் சொன்னாள்.
அதற்கு முன்பே தோமரின் முன்னால் தீட்சை பெற்றவன் போலிருந்தான் எத்திரோய். அவனை இங்கே திரும்பி வரவேண்டிய நாள் வரும் என்பதைச் சொல்லியே திரும்ப அழைத்து வரவேண்டியதாயிருந்தது.
ஸ்கந்தபுரம் வந்து பார்த்தால் எல்லாமே மாறியிருந்தது. வனவாசம் போயிருந்து பட்டத்து இளவரசன் திரும்பி வந்து தன் துணைவியுடன் சல்லாபம் புரிந்து அவளின் வேட்கை தணித்து விட்டுச் சென்றிருந்தான்.
மகிழினி இப்பவே நாட்டிற்கு வாரிசு வந்து விட்டது போல் புளகாங்கிதத்துடன் சொல்லித் திரிந்து கொண்டிருந்தாள். ஆதினி வயிற்றில் குடிகொண்ட சிசு உறுதிப்பட்டவுடன் ஆட்டம் பாட்டம் சொல்லவே வேண்டியதில்லை.
அப்போதெல்லாம் சில்வியா அமைதியானாள். தனக்கான அறையில் எப்போதும் ஜெபத்தில் இருந்தாள். அவளுக்குள் புனிததோமையரே ஜொலித்தாள். இதோ இந்த ஸ்கந்தபுரத்துக்கு புத்தம் புது இளவரசன் பிறந்து விட்டான். இனி நம் எத்திரோய்க்கு வேலை இல்லை. அழைத்தாள்.
இனி நீ புறப்படு. தோமைாவிற்கு நீ சேவகம் செய். பிறிதொரு நாளில் நானும் வந்து அடைக்கலமாவேன் என்றாள். அவன் தன் அன்னையின் பாதம் தொட்டு வணங்கினான்.
‘அப்படியே ஆகட்டும் தாயே!’’
இவன் புறப்படும்போது ஆதினியுடன் மாடமாளிகை ஆசனத்தில் வீற்றிருந்தாள் மகிழினி. அவள் கையில் அன்றலர்ந்து மகிழம்பூ போல சிசு.
மாடமாளிகைக்கு கீழே இளவரசர் வாழ்க கோஷம். இதோ மகிழினி தன் பேரப்பிள்ளைக்கு, ஸ்கந்தபுரத்தை அடுத்து ஆளப்போகும் இளவரசனுக்கு பெயர் சூட்டுகிறாள்…
இதோ ஸ்கந்த நாட்டு இளவரசன் ஐந்தாம் பட்டம் கோவிந்தராயன்…!’’
‘‘கோவிந்தராய மகராசா… வாழ்க. வாழ்க…!’’ மக்களின் கோஷம் விண்முட்டுகிறது.
———-
கதைப்போம்
THE KOVAI HERALD: S KAMALA KANNAN Ph.no 9244317182