கோயமுத்தூர் ராஜாக்கள் 31:தூரத்தில் ஒரு பாய் மரக்கப்பல்

வே.ரோகிணி:

மலைக்குன்றுகள் ஓரம் சிறு சிறு கட்டிடங்கள். பாறைகளால். கருங்கற்களால் ஆன அந்தக் கட்டிடங்களை ஒட்டியே ஓடி வந்த புரவிகள் மெல்ல நின்றன.அதிலிருந்து வீரர்கள் இறங்கினர். குதிரை இழுத்து வந்த ரதத்தின் முன்னே இருந்த பல்லக்கிலிருந்து சேடியர் இறங்கினர். அவர்கள் முன்பின் அணிவகுக்க, அடுத்த பல்லக்கு அறையிலிருந்து இறங்கினாள் சில்வியா.மெலிதான வெண் உடை. அதில் கருப்பு நிறத்திலான ஓர் அங்கி. சில சமயங்களில் தன் தலையை அந்த அங்கியினால் சுருட்டிக் கட்டி தெய்வீக அம்சத்துடன் விளங்கினாள். பொன்னும் வெள்ளியும் கலந்த ஒரு நிறத்தில் இருக்கும் அவள் அந்த ஆடையில் அப்படியே தெய்வாம்சம் பொருந்தியவளாகவே அரண்மனை சேடியர்களுக்குத் தெரிந்தாள். எத்திரோயும் அவளைப் போலவேதான். குதிரையிலிருந்து குதித்து இறங்கி அன்னையை வணங்கினான். கால்வரையிலான நீண்ட ஒரு அங்கியை அணிந்திருந்தான். சுருட்டையான முடி கழுத்து வரைத் தொங்கியது. அவனின் இடையில் ஒரு கருப்பு நார்க்கச்சை. துண்டு போல, அவன் இடுப்பை அது இறுக்கிக் கட்டியிருந்தது. நீல நிறக்கண்கள் ஜொலிக்க  ரோமானியப் பேரரசன் குதிரையில் வந்தது போலவே சுடர்விட்டான். இவர்கள் வருகையை எதிர்பார்த்தது போலவே அந்தக் கற்கட்டிடங்களிலிருந்து பத்துப் பதினைந்து பேர் ஓடி வந்தனர். அவர்களின் கைகளிலும் வேல், குத்தீட்டி, கம்பு போன்ற ஆயுதங்கள் இருந்தன. எத்திரோயை வந்தவர்களில் ஒருவன் வணங்கினான். எத்திரோய் தன்னிடம் இருந்து ஓலைச் சுவடியைக் காட்டினான் வந்தவன் அப்படியே எத்திரோயை கட்டிப் பிடித்துக் கொண்டான். அவனுக்குப் பின்னே நின்ற சில்வியாவை சட்டென அடையாளம் அறிந்து கொண்டு இடுப்பை நன்றாக வளைத்துக் கும்பிட்டான். தன்னை மோஸே என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.பனிரெண்டாம் அப்போஸ்தலரின் நாற்பத்தியிரண்டாவது சீடன் என்று சொன்னான். அதைக் கேட்டு முறுவல் பூத்தாள் சில்வியா, ‘அப்போஸ்தலர் புனித மண்ணை மிதித்து விட்டாரா?’ என்று வினவினாள்.‘‘இல்லை மரியே. இன்று மாலை வரும் நாவாயில் கொற்றவைத் துறையிலிருந்து அவர் வந்திறங்குவதாக ஓலை வந்திருக்கிறது. நீண்டதூரப் பயணம். நீங்கள் உண்டு, படுத்துறங்கி அதற்குள் இளைப்பாறலாம்!’ என்றான்.‘ஆகட்டும்’ என்றாள் சில்வியா.தூரத்தில் பார்த்தபோது குன்று போல் இருந்த இடம் இப்போது பெரும்பாறையாய்த் தெரிந்தது. அவற்றின் பின்னே பெரிய பெரிய மாளிகைகளும் கட்டப்பட்டிருந்தது.பல்வேறு தேசத்திலிருந்தும் சிற்றரசர்களும், மந்திரி பிரதானிகளும் அங்கே அன்று வந்திருந்தனர். அவர்கள் எல்லாம் தேவன் அவதரித்து விட்டான் என்ற பிரச்சாரத்தை ரோம் நகரிலிருந்து வந்த சேதியின் மூலம் ஏற்றவர்களாக இருந்தார்கள்.தேவனின் தூதன். மாயவித்தைகளும், விநோதங்களும் செய்யக்கூடியவரை தரிசிப்பதில் அவர்களுக்கெல்லாம் ஆனந்தம். அந்த தேவனின் தூதர் அப்போஸ்தலரின் பெயரை தோமையா என்றும் தோமையர் எனவும் தோம் அய்யர் என்றெல்லாம் உச்சரிப்பு மாற்றி மாற்றி சொன்னார்கள். தென்கரைச் சீமையினர் தோமஸ் என்றார்கள். வடக்கத்தி வேந்தர்கள் மனிதப்புனிதர் என்றார்கள்.அங்கிருந்த கட்டிடங்களில் எல்லாம் நிறையப் பேர் தங்கியிருந்தனர் அவர்கள். பேச்சு, மூச்சு எல்லாம் தோமையாவைப் பற்றியதாகவே இருந்தது.அதோ வரப்போகிறார். இதோ வரப்போகிறார். அவர் தலைக்குப் பின்னே ஓர் ஒளி சுருள் ஒழிந்திருக்கிறது அதுவே தேவன் என்றார்கள். தேவன்தான் ஒளி வடிவில் அவர் தலையை சூழ்ந்திருக்கிறார் என்றார்கள்.வேறு சிலரோ, தலைக்குப் பின்னே மட்டுமல்ல, அவர் உடலையே ஓர் ஒளி சூழ்ந்திருக்கிறது. அதுதான் அவரை அப்படி ஜொலிக்க வைக்கிறது. அவர் போகும் இடம் எல்லாம் பொன்னும் மணியுமாய் கொழிக்கிறது. மாதம் மும்மாரி பொழிகிறது. ஊரெங்கும் பசுமையாய் ஜொலிக்கிறது. எல்லாமே தேவனின் அருள்தான் என்றார்கள்.இப்படி அவர்கள் பேசப்பேச அத்தனை பேருக்கும் அந்த மாமனிதரை மனிதப்புனிதர் எப்போது வருவார். எப்படி தரிசிப்போம் என்ற ஏக்கமே சூழ்ந்து கொண்டது. அத்தனை பேர் கண்களும், உண்டும் உறங்காமலும் நீலக்கடலையும், அதன் அடிவாரத்தில் வரும் நாவாய்களையும், பாய் மரக்கப்பல்களையும் பார்த்தபடி இருந்தது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி தூரத்தே கலங்கரை விளக்கம் ஸ்தூபி போல் பகல் பொழுது வெளிச்சத்தில் மினுக்கம் காட்டியது.ஆங்காங்கே வரிசையாய் குடிசைகள் போட்டிருந்த செம்படவர் கூட்டம் யாரும் அன்றைக்கு கடலுக்குப் போகவில்லை. மீன்பிடிப்பதை தோமையா வருவதை முன்னிட்டே நிறுத்தியிருந்தார்கள். இறைதூதனின் தூதர். அவரிடமிருந்து வரும் ஒளியை முதலில் தரிசிப்பவனே பாக்கியவான் என்ற கதை அவர்களுக்குள் ஓடியது. அவர் பாதம் தரையில் பட்டவுடன் முதல் தரிசனம் நான்தான் பெறுவேன் என்ற போட்டா போட்டியும் அவர்களுக்குள் நடந்தது.அதை விட சில்வியா தங்கியிருந்த கட்டிட வெளியிலும் நடந்தது. சிற்றரசர்கள், ராஜாக்கள், மந்திரிகள் ஒவ்வொருவருமே நான்தான் முந்துவேன் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அவர்களை எல்லாம் கொஞ்சம் அடக்கி ஆண்டார்கள் ரோமிலிருந்து வந்திருந்த சில தூதுவர்கள்.மகாமாட்சிமை பொருந்திய தோமையரை நீங்கள் எல்லாம் தரிசிப்பதற்கு முன்பு அவர் பூமி தரிசனம் செய்வார். மண்ணைத் தொட்டு முத்தமிடுவார். அதுவரை நீங்கள் அமைதி காக்க வேண்டும். அவர் மண் முத்தம் தழுவிட்டு, இந்தக்கூட்டத்தில் யாரை ஏறெடுத்துப் பார்க்கிறரோ, அவரே தேவாதி தேவனின் தூதுவனுக்கு தூதுவனை முதலில் வழிபாடு நடத்த விதிக்கப்பட்டவன் என்றார்கள்.இது என்னடா இது புதுக்கதையாக உள்ளது? என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதைப்படற்றியே பேசியும் கொண்டார்கள். இறைவன் பாவிகளை மன்னிப்பதில்லை. இரட்சிப்பதுமில்லை. இந்த தூதுவன் ஏதோ நாடகமாடுகிறார் என்றார்கள்.சில்வியா இதையெல்லாம் வேடிக்கையாகப் பார்த்தாள். அவளுக்கு அங்கிருந்து தனக்கு ஒதுக்கப்பட்டட அறைக்கு அத்தனை பேரையும் பார்த்தாள். அமைதி காத்தாள். அந்த அமைதி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்த எத்திரோய்க்கு அச்சம் ஊட்டுவதாக இருந்தது.புனித தோமையரை நானும் அன்னையும் மட்டும்தான் தரிசிக்க ஏங்கிக் கொண்டிருந்தோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இங்கே உலகமே அவர் வருகைக்காக அல்லவா காத்திருக்கிறது என்று வியந்தான்.அதுவும் அன்னையின் ஆசை, அவர் பாதம் மண்ணில் பட்டதும், அதைத் தொட்டு வணங்கும் கை தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதுதான் என்பதை இவன் எப்பவே அறிவான். அது இங்கே இப்போது சாத்தியமில்லை போலிருக்கிறது என்று எண்ணினான்.அதுவே அவனை வருத்தத்தில் வாட்டியது. அந்த விசனத்தோடு கிழக்கே பார்த்துக்  கொண்டே இருந்தவன் கண்களில் அலையாடும் கடல் அலைக்கு ஏற்ப அழுக்கு நிறங்களில் பல்வேறு வெண்ணிற பாய்கள் போர்த்த நாவாய் ஆடி ஆடி வருவது பட்டது. அதில் சிலுவைக்குறியிருந்ததை கூர் நோக்கி வழியாய் பார்த்த வழிகாட்டி ஒருவன் கண்டு கொண்டான். வந்து விட்டார். வந்து விட்டார். நம் புனிதர். மண்ணின் ஆத்மா. மனிதப் புனிதம் அதோ வந்து விட்டார்!’ என கூவ, அத்தனை கூட்டமும் தறிகெட்டு கடற்கரை நோக்கி ஓடியது.

THE KOVAI HERALD KAMALA KANNAN: 92443 17182

scroll to top