கோயமுத்தூர் ராஜாக்கள்: 28 சிற்பங்களாய் சித்திரங்களாய் ஒரு சமணமுனி

Pi7_Image_28.jpg

  வே. ரோகிணி

ராஜா கலைவல்லவராயனும், தளபதி சித்தன்னனும் பார்த்த திசைக்கு மேலே பாறைவெளியில் ஒரு சாளரம் போல் துவாரம் இருந்தது. பெரும்பாறையைக் குடைந்து அந்த துவாரத்தை ஏற்படுத்தினார்களா, இயற்கையாகவே அது அப்படித்தான் இருந்ததா என்று அனுமானிக்க முடியவில்லை. அதேபோல் நான்கு மூலைகளிலும் ஒரே அளவிலான துவாரங்கள்.

அதில் இவர்கள் பார்த்த திக்கிலிருந்துதான் கூரிய வெளிச்சம் வந்து விழுந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் முன்னேதான் இவர்கள் பார்த்த உருவம் பிரம்மாண்டமாய் நின்றது. புரியாத அந்த மொழியில் ஏதேதோ மந்திரங்கள் சொன்னது. சாளரத்துவாரத்தின் ஓரங்களில் ஏதோ புதுவிதமான கற்கள் இருக்கும் போல. அதில்தான் சூரிய வெளிச்சம்பட்டு இந்த உருவத்தின் தலைக்குப் பின்னே வண்ண, வண்ண பிரகாசத்தில் ஒரு வித ஒளி வட்டத்தை தந்திருந்தது.

நெடுஞ்சாண்கிடையாக விழுந்திருந்த மலைவாசிகள் எல்லாம் எழுந்தனர். இப்பவும் ஹோ.. ஹோ என்று ஆரவாரம் எழுப்பினர். அந்த மலைவாசிகளின் தலைவன் அப்படி ஒலி எழுப்பிய பின்னரே, இவர்கள் இந்த முறையைத் தொடர்ந்தனர். அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த கொம்பு, குழல்கள் முழக்கப்பட்டன.

காலே அரைக்கால் நாழிகை நேரம்தான் இந்த ஆரவாரமும், அதிர்வோசைகளும். சத்தங்கள் நின்றன. மலைவாசித்தலைவன் அந்த நெடிய உருவத்திடம் சென்று ஏதேதோ கரேபுரே என்று சொன்னான். அந்த உருவம் இவர்களை உற்றுப்பார்த்தது. ராஜாவின், தளபதி மீது குத்திட்டு நின்ற பார்வையில் ஒருவித தீட்சண்யம். அருள் ஒளி இவர்கள் மீது படிந்தது.

‘‘வாருங்கள் ஸ்கந்தபுரத்து ராஜாவே. நம் மலங்காட்டுத் தலைவன் சேடன் உங்களைப் பற்றி சொன்னான். வரவேண்டும். உங்கள் வரவு சிறப்பாக ஆக வேண்டும்!’’

ஆகா. என்ன அதிசயம் அந்த உருவம் அழகாகத் தமிழ் பேசியது. பேசியபடியே வரவேற்று அங்கிருந்த அசனம் போல் இருந்த இரண்டு கற்படுகைகளைக் கைாட்டியது. அவர்களை அதில் அமரச் சொல்லுகிறார் என்று புரிந்து கொண்ட இருவரும் அதில் அமர்ந்தனர். சேவர்கள், படை வீரர்கள் கையில் இருந்த பொருட்களை, ஆயுதங்களை தரையில் சாற்றினர். மலைவாசிகள் எல்லாம் ஓரங்கட்டி நின்றனர்.

இவர்கள் இருந்த திசைக்கு நேர் எதிரே கற்பாறையிலேயே நீண்டதொரு திட்டு. அதன் ஓர் ஓரமாய் மேடு. அரண்மனை அந்தப்புரத்தில் ராஜாக்கள் சயனம் செய்யும் படுக்கை போலவே பாறையில் செதுக்கியிருந்தார்கள். அதன் மீதுதான் அமர்ந்தது அந்த உருவம். அந்த திட்டின் மேட்டின் மேல் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டது.

‘‘ராஜாவுக்கு கலைச் சிற்பங்கள், சித்திரங்கள் மீது மிகுந்த ஆர்வமோ? ஆசையோ!’’ குரல் தேன்கலந்த கிண்கிணி நாதத்துடன் இப்போது ஒலித்தது.

ராஜா பிரமை பிடித்தமாதிரி அமர்ந்திருந்தான். அவன் பிரமையிலிருக்கிறானா, பக்திப் பரவசத்திலிருக்கிறானா என்பது அவனுக்கே வெளிச்சம். ஆனால் இந்த நிர்வாண உருவத்தைப் பார்த்த கணத்திலிருந்து அவனுக்குள் ஏதோ ஒரு பரவச நிலை உட்புகுந்ததை உணர முடிந்தது. அந்த உருவம் கேட்கிற கேள்விக்கு மட்டும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி பதில் தந்தான்.

‘‘ஆம் குருவே. எமக்கு சித்திரங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். என் தேசத்து பாறைகளில் எல்லாம் சித்திரங்களும் சிற்பங்களுமாகத்தான் வடித்து வைத்துள்ளேன். அதில் புதியன தேட வேண்டும் என்ற ஆர்வம். இதோ இந்த சித்தன்னன் போல் தளபதிகள் பலர் திக்கெட்டும் தேடி அலைகிறார்கள். அதில் ஒன்றாகவே உம் குகைவெளி ஓவியத்தை அறிந்தோம். யாம் வந்தோம்!’’

‘‘நன்று.. நன்று சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளாய் மகனே!’’

அசரீரி போல்தான் அவர் குரல் ஒலித்தது.

‘‘இங்கே வரும் வழியில் குகைக்குள் நிறைய சித்திரங்களைப் பார்த்தேன். ஆகா, அப்படியான சித்திரங்கள் நான் ஆயுளில் கண்டதில்லை. அதையெல்லாம் எனக்கு கற்றுத் தேற வாய்ப்புண்டா குருவே!’’ என்றான்.

‘‘நிச்சயமாக!’’ என்றது உருவம். பின் அப்படியே எழுந்து அமர்ந்தது. சம்மணமிட்டு கண்களை மூடி மெளனத்தில் ஆழ்ந்தது. மொட்டைத் தலையில் சுற்றுவட்டத்தில் அணிந்திருந்த உத்திராட்சங்களின் மீது சாளரத்திலிருந்து வந்த ஒளி இப்போது மிளிர்ந்தது. திடீரென்று அவரிடம் கணைப்பு வெளிப்பட்டது.

‘‘வல்லவா.. நீ கலைக்கே வல்லவன். வா.. இங்கே வா!’’ என்று இப்போது குரல் எதிரொலி போல் ஒலித்தது. இவன் அருகே போனான். அவர் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.

இப்போது நிர்வாண உருவத்தின் கைகள் உயர்ந்தது. இவன் முடிமேல் தவழ்ந்தது. பஞ்சினும் மிருதுவான கரங்கள். பூப்போல ஊர்ந்தது. ராஜா தன்னை மறந்தான். அவனுக்குள்ளிருந்த ஏதோ ஒன்றை அடக்கி வேறு ஏதோ ஒன்று குடிபுகுவதை உணர்ந்தான்.

அதுகூட ஒரு சுகமாக இருந்தது. இப்போது அந்த உருவம் கண்விழித்தது. தன் பாறைப் படுக்கைக்குப் பின்னே கைவிட்டு எதையோ எடுத்தது. நீண்டதொரு மயில் பீழி கற்றைகள்.

அப்படியே எடுத்து ராஜாவின் தலைமுதல் கால்வரை வருடியது. இவன் உடம்பு சிலிர்த்தது.

அதற்குப் பிறகு ஒரு நாள் அல்ல, ஒரு வார காலமும் இல்லை. மாதக்கணக்கில் அங்கேயே வாசம் செய்யலானான் ராஜா. அப்படி அவரின் மந்திரத்தில் கட்டுப்பட்டான்.

அங்கே வாழ்ந்த வேளையில்தான் அந்த நிர்வாண முனியின் வரலாறு அறிந்தான். அந்த முனிக்கு ஏழு சீடர்கள் இருந்தனர். அந்த சீடர்கள் ஏழு திசைக்கு செல்வார்கள். மூலிகை, மணிகள், எல்லாம் கொண்டு வருவார்கள்.

அவர்களுக்கு இந்த மலைவாசிகள் உதவி புரிந்தார்கள். அவர்களின் சாயலும் கூட இந்த குருமுனியின் உருவத்தையே ஒத்திருந்தது. ஏழு பேருமே முழு நிர்வாணமாக இருந்தார்கள். அவர்கள் மட்டும் வெளியே செல்லும்போது ஆலிழைக் கற்றைகளை இடுப்புக்குக்கீழே அணிந்தனர். குருமுனி அப்படி ஒரு போதும் ஓர் இலையைக்கூட அந்தரத்தில் கட்டி மறைத்து இவன் பார்க்கவில்லை.

இறைநிலை அடையும் குருக்கள் அப்படி செய்தலதகாது என்பது அவர்கள் வேதம்.

அந்த முனிவர் சுபர்வனநாதர் எனப்பட்ட தீர்ந்தங்கரர். தீர்த்தங்கரர் என்றால் இறைவன் நிலையைப் பெற்றவர்கள். இறைநிலை பெறத் துடிப்பவர்கள்.

வடதேசத்தில் அவதரித்த வர்த்தமானரின் வழித்தோன்றல்கள் இவர்கள். சாலா மரத்தடியில் ஞானம்பெற்ற குருநாதர் தன் சீடர்களுக்கெல்லாம் தான் உணர்ந்ததைப் போதித்தார். அந்த சீடர்களின் வழித்தோன்றல்கள் எல்லாம் தீர்த்தங்கரர் ஆக முற்பட்டனர். அது ஒரு கடுமையான தவம்.

பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதிருத்தல். உயிர்ப்பலி கூடாது. ஈ, எறும்பானாலும் கொல்லாது வாழ்தல். அதன் பிரதிபலிப்பே நன்னம்பிக்கை, நல்லறிவு நற்செயல். கல்படுக்கை. கல் இருக்கை. காய்கனிகளைப் புசித்தல். நடக்கும் பாதையில் கூட மயில் பீழியால் சுத்தம் செய்து விட்டே நடத்தல். ஆடைகளை துறத்தல். இப்படியாக சகல உணர்வுகளையும் அடக்கி மெய்ப்பொருள் காணும் அவர்களே தன் ஐம்புலன்களை வென்ற மகாவீரர்களாக மாறுவார்கள்.இப்படியாகவே வாழ்ந்து சமாதியாகிறவர்கள் இறைவன் நிலையை பெற்றவர்கள் ஆவர். அவர்களே வழிபாட்டுக்குரியவர்கள். என்பதெல்லாம் அவரின் போதனை.

அந்தப் போதனைகளை எடுத்துக் கொண்டு இருபத்தி நான்காம் தீர்த்தங்கரரான வர்த்தமானன் சீடர்கள் திக்கெட்டும் பரவினர். நால்வர் எழுவராகி, எழுபதாகி, எழுநூறு, ஏழாயிரமாகி கடல் கடந்தும், நாடு கடந்தும் சென்றனர்.

அதில் ஒரு பிரிவினர் பா இசைத்தனர். இன்னொரு பிரிவினர் சிற்பங்கள் வடித்தனர். மாபெரும் பிரிவு சித்தரங்களை தீட்ட ஆரம்பித்தது. மகாவீரகுரு தோன்றி அறுநூறு ஆண்டுகளில் ஆக மொத்தம் முப்பது தலைமுறைகள். வடபுலம் தொடங்கி தென்புலம் வரைக்கும் ஆயிரமாயிரம் சித்திரக்கவிகள்

 அதில் சுபர்வனநாதர் வடபுலத்தில் அஜந்தா ஓவியங்களின் விற்பன்னர். தன் குருவின் ஆக்ஞையால் தென்திசை வந்தார். சோழன் கரிகாலன் இவரை ஆகர்சித்தான். பூஜித்தான். முனிக்கு வேண்டிய உதவிகள் செய்தான். அவன் தேசத்து வடமேற்குத் திசையில் மலைகள். காடுகள். அதையே வாசஸ்தலமாக்கிக் கொண்டார் முனி.

அவருக்கான சீடர்களும் பெருகினர். இவரைப் போலவே ஆகத் தலைப்பட்டனர். அதற்குப் பிரதிபலனாக சீடர்களுக்கு இவர் கற்றுக் கொடுத்தது மலைகளை குடைந்து குடைந்து உருவாக்கும் சித்திரங்கள். 24 தேசத்து ராஜாக்களும், நூற்றி எட்டு நாட்டு சிற்றரசர்களும் இங்கே வந்து பார்த்து வியந்தனர்.

இது மனிதச் செயல் அல்ல தேவச்செயல் என்றே போற்றினர். அதில் ஒரு சிற்றரசுக்கு சிற்றரசனாக வந்து நின்ற கலைவல்லவராயன் இந்த திகம்பர முனிவரின் கைப்பாவையாகவே மாறிப்போனான். தன்னுடன் வந்த படை பரிவாரங்களை எல்லாம் நாட்டிற்கே திருப்பியனுப்பினான். சித்தன்னனை நாட்டுக்கும், குகைக்கும் உளவாளியாகத் திரியவிட்டான். இவனோ குகைவெளிகளில் எல்லாம் ஒடி, ஓடி சிற்பங்கள் வடித்தான். சித்திரங்கள் தீட்டினான்.

இப்படி சிற்பங்களும், சித்திரமுமாகவே இவன் இருந்தால் மணக்கோலத்தில் விட்டு வந்த மனைவி என்ன ஆவாள். அவனின் தாய் மகிழினி ஒரு நாள் தன் மருமகள் ஆதினியையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்து நின்றாள். சமண முனிவரிடம் நியாயம் கேட்டாள்.

நாம் அன்றைக்கு சுயம் வரத்தில் கண்ட ஆதினியா இவள்.. அந்த அழகுப் பதுமையா இப்படி. இளைத்து மெலிந்து என்பு தோல் போர்த்த மேனியளாய் பாவப்பட்ட ஜீவனாய் காட்சியளித்தாள் அவள்.

கதைப்போம்…

THE KOVAI HERALD S.KAMALA KANNAN Ph. 9244319559    

scroll to top