கோயமுத்தூர் ராஜாக்கள்-27:சர்வம் நிர்வாணமாய் ஓர் உருவம்

Pi7_Image_sith.jpg

வே. ரோகிணி

விவாகம் முடிந்தும் முடியாத நிலையில் சித்தன்னன் வந்து சொன்ன சேதி கேட்டதுமே புறப்பட்ட கலைவல்லவராயன் நெடுந்தூரம் பயணப்பட்டிருந்தான். அவன் புரவியுடன் இணையாக அடியொற்றி சித்தன்னின் புரவியும் நகர்ந்தது. அதற்குப் பின்னால் ஏழெட்டு படை வீரர்களின் புரவிகள்.

அதிலிருந்து சிறிது தூரத்தே பொதி சுமக்கும் கழுதைகள்.அதை ஓட்டி வரும் சேவகர்கள். கழுதைகளின் மீது ஏராளமான தானியங்களும், கறிகாய்களும், துணி மணி வகையறாக்களும் மூட்டை மூட்டையாய் கட்டப்பட்டிருந்தன. இந்த கழுதைகளை ஓட்டிய பரிவார ஆட்களுடன் அவர்தம் மனைவிகளும் இருந்தனர்.

ஸ்கந்தபுர நகரத்திலிருந்து நேர் கிழக்காகப் புறப்பட்ட இந்தப்புரவிக்கூட்டமும், பொதி சுமக்கும் கழுதை மந்தைகளும் கிட்டத்தட்ட பதினாலு காத தூரத்தை ஒரு பகல் இரண்டு இரவில் அடைந்தன. இடையில் காடு,மேடு, பள்ளத்தாக்கு, நீரோடைகள், அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள். அங்கங்கே பரிவாரம் தங்கியது. இளைப்பாறியது.

கழுதைச் சுமைகளுடன் வந்த ஆண், பெண்கள் சுமைகளை இறக்கி, அவ்வப்போது கழுதைகளை ஆசுவாசப்படுத்தினர். பெண்கள் உடனுக்குடனே அடுப்புக்கூட்டி சமையல் வேலையைக் கவனித்தனர்.

அதில் ஆண்கள் அடர்ந்த கானகத்திற்குள் புகுந்து வேட்டையாடி கைக்கு கிடைத்த உடும்பு, முயல், மான் என பிடித்து வந்து கறியாக்கி சமைத்தனர். இவர்கள் கூடாரம் அடித்துத் தங்கும் இடங்களில் எல்லாம் மாமிசம் நெருப்பில் சுடும் வாசம் மூக்கைப் பறித்தது. அரசனாகப்பட்ட கலைவல்லவராயனுக்கும், தளபதியாகப்பட்ட சித்தன்னனுக்கும் சிறப்பு உணவுகள் தயாரித்தனர்.

காடுகளில் கிடைத்த மூலிசைசாறுகளை தம்மோடு கொண்டு வந்திருந்த மர உரல், மரக்கல்களில் அரைத்து கூட்டாக்கி, அதில் இறைச்சிகளை இட்டு வேக வைக்கும்போது அந்த மணம் ஒரு மாதிரி மயக்கத்தை ஏற்படுத்தியது. இவர்கள் இப்படி சமைப்பதைப் பார்த்து மந்திகளும், பருந்து, காடை, கெளதாரிகளும் வட்டமிட்டன.

வெயில் தாழ்ந்த பிறகு ஒரு காத தூரம் பயணம். இரவு ஆறு, நீரோடை இருக்கும் இடம் பார்த்துத் தங்கல். மயில் அகவும் நேரத்தில் விழித்துக் கொள்ளல், நீரோடைகளில் குளித்து. காலை ஆகாரங்கள் புசித்துப் புறப்படல், இந்தப் பயணம் இரண்டு அல்லது மூன்று காத தூரம் தொடர்ந்தது. இப்படியே ஆக நகர்ந்த பயணம் அந்த பெரியமலை அடிவாரத்தில் முற்றுப் பெற்றது.

அங்கே இவர்களுக்காக கோவேறுக்கழுதைகள் காத்திருந்தன. இனி போகும் இடம் கழுதைகள் செல்லும், குதிரைகள் செல்ல லாயக்கற்ற இடம் என்றனர் அதை கொண்டு வந்தவர்கள்.

எனவே ராஜாவும், தளபதியும் கோவேறுக் கழுதைகளில் ஏறி அமர்ந்தனர். கழுதையுமல்லாத, குதிரையுமல்லாத உருவம். வேகமும் அப்படித்தான் கழுதையை விட கொஞ்சம் வேகம். குதிரையை விட வேகம் குறைவு. கனைப்புச் சத்தமும் இது வேறு விதமாக இருந்தது.  பெரிய பள்ளத்தாக்குகள். கோவேறுக் கழுதை கீழே தள்ளிவிட்டால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது.

அப்படியொரு பள்ளத்தாக்கு. போகும் வழியில் சில சிறுத்தைகளையும், ஒரு யானைக் கூட்டத்தையும் காண நேர்ந்தது. இதையெல்லாம் கடந்து அந்த பெரும்பாறையை அடையும் போது சூரியன் மேற்கே மஞ்சள் வண்ணத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்தான்.

‘‘இனி இறங்கலாம் ராஜா. இதுதான் நான் சொன்ன இடம்!’’ என்றான் சித்தன்னன்.

கலைவல்லவராயன் கோவேறுக்கழுதையிலிருந்து இறங்கினான்.

அவன் கோவேறுக்கழுதையிலிருந்து இறங்கி நின்ற போது அவனை ஒட்டி நின்ற  கழுதையின் உயரம் அவன் இடுப்புக்கு கீழேதான் இருந்தது. பொதுவாகக் கழுதைகளில் கோவேறுக்கழுதைகள் அரபு நாட்டுக்குதிரைகளைப் போலவே உயரம் கொண்டவை. அதுவே இவனின் இடுப்பளவு என்றால் இவன் என்ன உயரம் இருப்பான்.

அப்படியான உருவ, உயரத்தை உடைய ராஜா சுற்றிலும் ஒரு முறை பார்த்தார். புருவத்தை நெரித்தார். ஆளரவமற்ற பிரதேசம். ஒரு மொட்டைப் பாறை.

‘இங்கே எப்படி சித்தன்னன் சொன்ன கலைப் பொக்கிஷம் இருக்க முடியும்?’ என்று எண்ணி மோவாயைச் சொறிந்தான்.

‘‘வாருங்கள் மன்னா!’’

குரல் வந்த திசையில் கரிய நிறத்தில் பத்துப் பதினைந்து காட்டுவாசிகள். கன்னங்கரேல் நிறத்தில் இருந்தார்கள். அவர்களின் நெற்றி மேடிட்டு கடும் புடைப்புக் காட்டியது. கண்கள் அநியாயத்திற்கு பளீரென்று இமையை விட்டு வெளியே பிதுங்கி இருந்தது. எல்லோரும் இலைதழைகளை சூடியிருந்தனர். மான்தோல், புலித்தோல், எருமைத்தோல்களை ஆடையாக அணிந்திருநு்தனர். அந்தக் காட்டுவாசிகளுடன் பெண்கள் சிலரும் இருந்தனர்.

அவர்கள் தலையில் கொன்றைப்பூ, பிச்சிப்பூ, ஆவாரம்பூ செருகியிருந்தனர். சிலர் பச்சை நிறத்தில் ஏதோ ஒரு மூலிகை இலையை செருகியிருந்தனர்.

அவர்கள் ரொம்ப தூரத்தில் நின்றாலும் தன் மூக்கை உறிஞ்சி, உறிஞ்சி முகத்தை ஒரு மாதிரி சுளித்தான் கலைவல்லவராயன்.

வேறொன்றுமில்லை. இந்தக் காட்டுவாசிகள் எட்ட நின்ற போதே ஏதோ ஒரு எண்ணெய் வாடை.

‘‘இவர்கள் பெரும்பாலும் குளிப்பதில்லை. காட்டில் கிடைக்கும் மூலிகைச் செடிகள் சிலவற்றை எடுத்துக் காய்ச்சி தலையிலும் உடலிலும் பூசிக் கொள்கிறார். எப்போதுமே சூரிய ஒளியிலோ, வேறு காரணங்களாாலோ உடல் காயக்கூடாது என்பதை பாரம்பர்யமாகவே கடைப் பிடித்து வருகிறார்கள். அதுதான் இவர்களிடம் இப்படியொரு வாடை!’’

ராஜாவின் காதோடு காதாகச் சொன்னான் தளபதி. கலை வல்லவராயனின் முகத்தில் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை. காட்டு வாசிகள் கைகளிலிருந்து வேல்களை உயர்த்தியும், கீழே தாழ்த்தியும், ‘‘ஹோ.. ஹா.. ஹோ.. ஹா..!’’ என்று கோஷமிட்டார்கள்.

தம் மலைக்கு விருந்தாளியாக வந்திருக்கும் மேலைநாட்டு ராஜாவுக்கு மரியாதை செலுத்துகிறார்கள் என்றார் தளபதி. அதற்கும் ராஜாவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. கண்கள் மட்டும் அங்கங்கே சென்றன. அந்தப் பெரும்பாறையை விரற்கடை, விரற்கடை அளவில் ஆராய்ந்தது.

அப்போதுதான் ராஜா கவனித்தான். அந்தப் பெரும்பாறையின் வலப்புறத்தில் கரிய இருட்டு. உற்றுப்பார்த்த பின்புதான் தெரிந்தது அது அந்தப் பாறைக்கு கீழிருந்த குகை வாசல். எத்தனையோ மலைகளுக்குப் போயிருக்கிறான் கலைவல்லவராயன். அங்குள்ள குகைகளுக்குள் எல்லாம் சென்று வந்திருக்கிறான். இப்படியொரு பிரம்மாண்ட குகை வாசலைக் கண்டதில்லை.

அதோ, அந்த வாசலில்தான் அந்த மலைவாசிகளில் ஒரு சாரார் உள்ளே நுழைகின்றனர். அடுத்தது ராஜாவையும் தளபதியையும் அழைக்கிறார்கள். இவர்கள் உள்ளே நுழைய பரிவாரமும் அடியொற்றி நகர்கிறது.

முன்னே சென்றவர்கள் தீவட்டிகளை கொளுத்திக் கொள்கிறார்கள். இருண்டு குகைக்குள் வெளிச்சம் பாவுகிறது. ராஜா, தளபதி, பரிவாரங்கள், சேவகர்கள், அவர்களுக்குப் பின்னேயும் மலைவாசிகள் குழு ஒன்று தொடர்கிறது. அவர்களும் உள்ளே நுழைந்தவுடன் தீவட்டிகளைக் கொளுத்திக் கொள்கிறார்கள்.

இப்போது அந்த அகண்ட குகைவெளிக்குள் பெரிய ஊர்வலமே செல்வது போல இருக்கிறது. நடந்தவர்கள் ஐம்பது அறுபது பேர்கள்தான். ஆனால் அவர்களின் நிழல்கள் மூலைக்கு மூலை கொளுந்து விட்ட தீப்பந்தங்களால் பல்லாயிரம் பேரைப் போல் குகைச்சுவர்களில் பிரதிபலித்தன. குகைவழி சென்று கொண்டே இருந்தது.

அப்படி ஒரு நாழிகை நேரம் நடந்திருப்பர். திடீரென்று அந்த குகைவெளியில் நான்கு புறமிருந்தும் மஞ்சள் நிறத்தில் சூரிய வெளிச்சம். அந்த குகைப்பாறைச் சுவர்கள் எல்லாம் சந்தன நிறத்தில் ஜொலித்தது.

உடனே முன்னும் பின்னும் நகர்ந்த மலைவாசிகள் ஆஹா… ஆஹா… என்றும் ஓஹோ.. ஓஹோ என்றும் கூச்சலிட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஏந்தி வந்த தீவட்டிகளை தரையில் அழுத்தி ஒன்று சொன்ன மாதிரி அழுத்தி அணைத்தனர்.

இப்போது அந்த தீவட்டி வெளிச்சம் துளி கூட இல்லாத நிலையில் குகைவெளியெங்கும் தங்க நிறத்தில் ஜொலித்தது. ஆஹா குகைச்சுவர்களில் நீலம், சிகப்பு, பச்சை இப்படியான நிறத்தில் ஏகப்பட்ட ஓவியங்கள். அதில் மக்கள் நாட்டியமாடினர். மது அருந்தினர். கிளிகள், மயில்கள் ஆடின. பாடின. இப்படியான ஓவியங்களை வாழ்நாளில் கலைவல்லவராயன் கண்டதில்லை.

‘‘ஆஹா.. ஆஹா.. அடடா.. அடடா..!’’ என சொக்கினான் ராஜா. தன்னை மறந்தான்..

‘‘தளபதி தளபதி என்னை சொர்க்கத்திற்கே அழைத்து வந்து விட்டாய்!’’ என்று பிதற்றினான்.

அவன் பிதற்றல் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. மலைவாசிகள் மறுபடி

‘ஹோ.. ஹோ…!’ என்றனர்.

ஒரே ஒரு வரிதான். அத்தனை பேரும் அமைதியாயினர். அப்படியே தன் வேல், வில், அம்புகளை, தீவட்டிகளையும் கீழே சாற்றிவிட்டு நெடுஞ்சாண் கிடையாக கிடந்தனர்.

என்ன ஆயிற்று.

இப்போது தன்னந்தனியாக அப்படியே நின்றது ராஜாவும், தளபதியும், அவனுடன்  வந்த சொற்ப சேவர்களும்தான்.

மீதியெல்லாம் தரையில் கைநீட்டி இருகரம் கூப்பி கும்பிட்டவாறு குப்புறப்படுத்திருந்தனர். அவர்கள் அப்படி கைநீட்டி கும்பிட்ட திசையிலிருந்து ஒரு குரல்…

‘‘நமோ அரிகதானம், நமோ சித்தானம், நமோ அயாரியானம், நமோ உவாசயானம், நமோ லோ சவ்வ சாகூனாம்..!’’

அந்தக்குகையின் உச்சியில் நான்கு மூலைகள், அது சாளரம் போல் அங்கிருந்து சூரிய வெளிச்சம் அந்த குகைக்கு நடுவில் குவிந்திருந்தது. அந்த வெளிச்சம்தான் அந்தக் குகையின் இருளை அகற்றி பொன்னிறமாக சுடரிட வைத்தது.

அந்த சுடரொளியில் இப்போது எழுந்து வந்தது போல் ஓர் உருவம். நெடு, நெடுவென்றிருந்தது. தலையில் முடியில்லை. உடலில் ஆடையில்லை. காலில் பாதரட்சைகளோ எதுவுமேயில்லை. ஆம், முழு நிர்வாணமாயிருந்த அந்த உருவத்தின் தலைக்குப் பின்னே பெரியதொரு ஒளி வட்டம்…

கதைப்போம்…

THE KOVAI HERALD S.KAMALA KANNAN Ph. 9244319559  

scroll to top