வே.ரோகிணி
கோபம் ரெளத்திரமாக மாறியது. அந்த ரெளத்திரம் தன்னை என்ன செய்யுமென்று மகிழினிக்கே தெரியவில்லை.
எந்த நோக்கத்தோடு தான் இந்த ஸ்கந்தபுரத்துக்குப் பட்டமகிஷியானாளோ, கிழட்டு மாமனார் கோவிந்தராயன் இச்சைக்கு உள்ளாக்கி, அவனின் அந்தப்புரத்தில் தள்ளாமல் பட்டமகிஷி காப்பாற்றி கிருஷ்ணராயனுக்கு தன்னை நாண் பூண வைத்தாளோ, அது அத்தனையும் பாழாகி விடும் அளவு தன் மைந்தன் கலைவல்லவராயன் நடந்து கொள்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மகனை இவள் இப்படி உருவாக்கினதன் நோக்கம் வேறு. மக்களை அவன் நேசிக்க வேண்டும். ராஜாக்களுக்கே உரிய ரத்தவெறியுடன் அலைய விடக்கூடாது. அவன் கண்களில் கருணை ததும்ப வேண்டும். இந்த சிறு ஸ்கந்தபுரத்துக்கு மட்டுமல்ல, உலகத்தையே ரட்சித்து வாழும் அளவு அவனுக்குள் கனிவும், அன்பும் சொட்ட வேண்டும்.
அதற்காகவே அவனை போர்க்கலைகளைத் தாண்டி சிற்பம், ஓவியம், இசை என பயிற்றுவித்தாள். பெண்வாடை என்பது காம இச்சைக்கானது அல்ல, தாய்மைப்பூரிப்புக்கானது என்பதை உணரச் செய்யவே அவன் ஆளாகும் காலம் வரையிலுமே அவனோடு இருக்கும் நேரங்களில் தானும், தன் தாதியர்களும் பிறந்த மேனியோடு உலா வந்து அவனுக்கு பரிபாலனை செய்தனர். அதனால் அவனுக்கு பெண்களின் அங்கங்கள் கிலேசம் ஊட்டுபவையாக இல்லை. அதே போல்தான் அவனுடைய சேஷ்டைகளையும் தாயும், தாதியர்களும் குழந்தை தன் தாயிடம் அமுதூட்டி விளையாடும் தோதான உணர்வில் இரண்டறக் கலந்தனர்.
அதனால் அவனுக்கு பெண்போகம், பெண்மோகம் என்பதே மரத்துப் போனதானது.
அது சரிதான். ஆனால் இந்த ஸ்கந்தபுர அரசாட்சிக்கு அது உகந்ததல்லவே. இளவரசன் இந்த நாட்டிற்கு பட்டம் சூடி பட்டத்து ராஜாவாக வேண்டுமானால் முதலில் தனக்கு இச்சையான பெண்ணை மணந்து அவளை நாட்டின் இளவரசி ஆக்க வேண்டும்.
அந்த இளவரசியும் இந்த இளவரசனும் சேர்ந்து தனக்கொரு பிள்ளைப் பேறு அடைய வேண்டும். இவர்கள் இருவருமே நாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்து மக்களை பரிபாலிக்கும் உரிமை பெற்றவர்கள் என்பது இங்கே ராஜகட்டளை.
அப்படியிருக்கையில் இவன் இப்படியிருந்தான் என்றால் எப்போது பட்டம் சூடுவது. தன் கனவை அவன் எப்படி நிறைவேற்றுவது?
ராஜதர்பாருக்கு அவன் சுயம்வரம் நோக்குடன் வருவதற்கு முன்பே அவன் அன்னையைத் தரிசித்தான்.
அவனை அகில், சந்தனமேனியனாய் பொற்றாமரைக் குளத்தில் வைத்து குளிப்பாட்டி, தீர்த்தமாடிக் கொண்டு வந்தனர் சேடியர். தாதியரோ இவளைத் தாண்டி அவனை உச்சிமோந்தனர். அங்கே வைத்து வழக்கம்போல்தான் அவனுக்கு மந்திர உபதேசம் செய்தாள் மகிழினி.
‘‘இதோபார் மகனே. இது உன் அன்னையின் கட்டளை. இது அரச மரபு. அதை நீ செய்வதனால்தான் உன் தாயின் நோக்கம் நிறைவேறும்!’’ என்று இடுப்புக்கு கை வைத்த வண்ணம் கண்களை உறுத்து அசையாது அவனை நோக்கி செப்புவித்தாள்.
அவன் சொன்னதை எல்லாம் செய்வான்; அப்படித்தான் இதுகாறும் அவன் நடந்திருக்கிறான் என்பது மகிழினிக்கும் அவளுடன் இருந்த தோழியர் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அவன் சுயம்வரத்தில் அத்தனை பெண்களின் கைகளில் இருந்த மாலைகளை வாங்கி வாங்கி கீழே விட்டெறிந்து விட்டு வந்த கோலம் இவர்களை மூர்ச்சையாக்காத குறையாக செய்து விட்டது.
எனவேதான் கடைசி, கடைசியாய் இருந்த பெண்ணிடமும் அவன் அதே செயலை செய்து விட்டான் என்றால் தன்நிலை கடைமோசமாகி விடும் என்றுணர்ந்தே ஓடோடிச் சென்றாள். அவன் செவினியில் ஓர் அறை விட்டான்.
அவனுக்கு சித்த பிரமை தெளிந்து விட்டது. அப்படி பிரமை தெளியாமல் இருந்திருந்தால் அந்த யுவதி வைத்திருந்த மாலையும் கூட மண் மீது கிடந்திருக்கும். இப்போது கதை மாறி விட்டது. அரசியின் ஓர் அடி அந்த ராஜதர்பாரையே நிலைகுழைத்து விட்டது.
மன்னன் கிருஷ்ணராயன் தலைகவிழ்ந்து விட்டான். அந்தப்புரத்தில் அவ்வளவு சுலமாய் மகிழினியை எதிர்த்த துப்பு ராஜாவுக்குக் கிடையாது. பகிரங்கமாக ராஜதர்பாரில் இப்படி நடந்த போது அதுவும் மகன் நிமித்தம் அவள் இப்படி செய்த போது அவனால் ஏதும் செய்ய இயலவில்லை.
அதோ சாவுப்படுக்கையில் முனகிக்கொண்டிருக்கும் பெரியராஜாவும் கூட அந்தக் காட்சியைப் பார்த்து அவர் கண்கள் அப்படியே நிலை குத்தி விட்டது.
எது எப்படியோ. அரசி அடித்த அடியில் சுயம்வரம் நடந்து விட்டது. பெரிய மகராஜா ஆசைப்பட்டபடியே அவனுக்கு மகுடமும் சூட்ட வேண்டிய கட்டம். ஆனால் அதற்குள் அவனுக்கு அழைப்பு வந்து விட்டது. அதைக் கொண்டு வந்த தளபதி சித்தன்னன் மட்டும் முன்கூட்டியே இவள் பார்வையில் பட்டிருந்தால் உடனே அவனைத் தடுத்தாட் கொண்டு இருப்பாள் மகிழினி. காரியம் மிஞ்சி விட்டது.
தளபதியை என்ன மாதிரி ஓவியங்களைத் தேடி வரச்சொன்னானோ? எந்த மலையோ, எந்த மடுவோ, எந்த குகையோ? எங்கே அவன் புரவிகள் பறக்குமோ யார் கண்டார்கள்?
புயல்வேகத்தில் தன் தளபதியுடன் புறப்பட்டு விட்டான். மாலை அணிந்த அந்த மங்கை அதன்பிறகே மெல்ல கண்விழித்தாள். அவள் கொல்லி மலை நாட்டு இளவரசி. ஆதிகோசன் அதியன் அவள் தந்தை. தனக்கு என்ன நடந்தது என்று அவள் யோசிப்பதற்கு கூட சற்று நேரம் ஆகியது.
தான் ஸ்கந்தபுரத்து இளவரசனின் சுயம்வரத்தில் கலந்து கொண்டோம். அத்தனை மங்கையரையும் புறக்கணித்து வந்த அவன் தன் கழுத்தில் மாலையிட்டான் அதற்கு அச்சாரமிட்டவள் பட்டத்து அரசி. என்பவை மட்டும் நினைவில் வந்தது.
ஆனால் இளவரசனைக் காணோம் அதற்குப் பதில் யார் யாரோ நிற்கிறார்கள். தன்னைத் தன் நெஞ்சோடு சாய்த்து நிற்கிறாள் அரசி. அந்த நேரம். அங்கே கட்டிளம் காளை ஒருவன் வருகிறான். அவனிடம் ஸ்கந்தபுரத்து மண்ணின் சாயல் துளிகூட இல்லை. பெளர்ணமி நிலவுபோல் வெள்ளே வெளேர் என்ற நிறத்தில் இருக்கிறான். தலைமுடி அலை, அலையாய் சுருண்டு பிடறி வரை தொங்குகிறது.
அந்தப் பிடறி முடி முழுக்க பொன்னிறத்தில் ஜொலிக்கிறது. அவனைப் பார்த்தால் கொடுமணத்திற்கு மரகதமணிகளை கொண்டு வந்து உலோகங்கள் வாங்க வரும் உரோமானிய வணிகர்களின் சாயலை ஒத்திருக்கிறான். ஆஜானுபாகுவாய் ஆறடி இரண்டு அங்குல உயரத்தில் இருந்தான். அவனின் தோள்களும், புஜங்களும் வெண்கலச்சிலை போல் திடமாய் இருந்தன. அவன் கழுத்தில் பரல்கள், மாணிக்க மணி மாலைகள்.
அவனைப் பார்த்ததும் அரசி மகிழினிக்கு உவகை பொங்குகிறது. சடக்கென்று கண்களில் நீரூற்று.
‘வா என் மகனே எத்திரோய். உன் இளையன் வல்லவராயன் செய்த செயலைக் கண்டாயோ?’’ என்று தேம்பினாள்.
அந்த இளைஞன் வேறு யாருமல்ல. மகிழினியுடன் இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு சத்திரத்தில் வந்து தங்கினாளே. நிறைமாதக் கர்ப்பிணியாகவும் காணப்பட்டாளே. மகிழினியின் உரோமானிய வளர்ப்புத் தந்தையின் மருமகள். அதே சில்வியாவின் மகன்தான். அவனை ஸ்கந்தபுரத்தின் தலைமைத் தளபதி என்பதை அனைவரும் அறிவர்.
ஆனால் கொல்லிமலை நாட்டு இளவரசி, கலை வல்லவராயன் மாலையிட்ட மங்கைக்கு அது தெரியவில்லை. மாறாக இவன்தானே சுயம்வரத்தில் தனக்கு மாலையிட்டவன். தன் கணவனாக வாய்க்கப்பட்டவன். அடேயப்பா. என்ன உயரம். என்னே தேஜஸ். எப்படியானவன் தனக்கு துணைவனாக வாய்த்திருக்கிறாள் என்று எண்ணலானாள்.
அதுவே அவளுக்குள் ஏதோ இன்பத்தை சுரக்கச் செய்தது. அந்தக் கணத்தில் மற்றவர் பார்த்து விடக் கூடாதே என்று தலை கவிழ்ந்தாள். கண நேரம்தான். இமை ஒரு முறை மூடித்திறக்கும் நேரம்தான். மகிழினி அதைப்பார்த்து விட்டாள். ஒரு மங்கையின் தாபம் இன்னொரு பெண்ணுக்குத் தெரியாதா? ஆள் மாறி விழுந்த அவள் மோகிப்பை தரிசித்து அப்படியே நடுங்கியும் போனாள் மகிழினி.
THE KOVAI HERALD S.KAMALA KANNAN Ph. 9244319559