கோயமுத்தூர் ராஜாக்கள் 20:மூன்றாம் பட்டம் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணராயன் மகாராஜா

Pi7_Image_201.jpg

வே.ரோகிணி:

அரண்மனையின் மணகரை வாசல் வெகு அமர்க்களப்பட்டது. பிரம்மாண்ட வெளி. அங்கே ஏகப்பட்ட கொட்டகைகள். பல்வேறு நாட்டு சிற்றரசர்களும் வந்திருந்தார்கள். அவர்களின் மெய்க்காப்பாளன்கள், தளபதிகள் என பலரும் வீற்றிருந்தார்கள்.

பட்டத்து இளவரசனுக்கு முடிசூட்டும் விழா மட்டுமல்ல. மகிழினியை கரம்பற்றும் விழாவும் அங்கே நடந்தேறியது.

அது ஒரு திடீர் கல்யாணம். நாட்டு மக்கள் மட்டுமல்ல, அண்டை நாட்டவர்களும் எதிர்பாராத திருமணம்.

ஸ்ரீவீரராஜ சக்கரவர்த்தியின் மைந்தர் கோவிந்தராயனைக் காட்டிலும் கீர்த்தியோடு மக்களை வழிநடத்திய சிற்றரசன் சேர, சோழ, பாண்டிய வம்சத்திலேயே இல்லை. அதை இவனை தன் கீழ் ஆட்சி புரிந்த சோழராஜனே பாராட்டியிருக்கிறான்.

சிறந்த நீதிமான். நெறிமுறை தவறாதவன். எதிரிகளே ஆனாலும் கொலை பாதகம் செய்யக்கூடாது. விசாரித்த வரை குற்றம் சாட்டப்பட்டவன் மீது குற்றம் உறுதிப்படாமல் சந்தேகம் எழுந்தால் அதை குற்றவாளிக்கு சாதகமாக்கி விடுவிக்க வேண்டும்.

இயன்றவரை மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு கொண்டவனாக விளங்கினான். இவன் காலத்தில் அவன் பரிபாலித்த நாட்டில் வருடத்தில் முப்போகம் விளைந்தது. எல்லாமே தானியப்பயிர்கள்.

காடுகளில் பிடிபடும் யானைகளை சமமாக சேரனுக்கும் சோழனுக்கும் பங்கிட்டுக் கொடுத்து வந்தான். அபாரமான யானை பழக்குநர்கள் இவனிடம் இருந்தனர். தர்மசிந்தனை பரிபாலனத்தில் இவனுக்கு நிகர் எவருமில்லை என்று குடிமக்களும் போற்றிப் புகழும் நிலையில் இவனிடம் ஒரே ஒரு குறை இருந்தது.

அது குறை அல்ல. மனக்கிலேசம். எந்த ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தாலும் இவன் சிந்தை குளிர்ந்து விடும். மோகம் கொண்டு விட்டால் அவள் அந்தப்புரத்தை அலங்கரித்தாக வேண்டும். அப்படியானவனுக்கு எப்படி, எப்படியோ கடிவாளம் போட்டுப் பார்த்தாள் பட்டத்து ராணியானவள்.

இவனோ அடங்கவில்லை. அன்றைய தினம். ரோமாபுரியிலிருந்து வந்த இரண்டு பெண்களில் ஒருத்தி மீது அபார மோகம் கொண்டான். கர்ப்பிணிப் பெண்ணும் கூட அழகுதான். ஆனால் அவளை தம் புறத்துக்கு கொண்டு வருவது பாவச்செயல் என்று எண்ணினான். இருந்தாலும் அவர்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் தன் கடமை என்றான்.

மன்னனின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை மந்திரிப் பிரதானிகள், உடன் இருந்த தளபதி, உபதளபதி, ராஜகுருவைத் தாண்டி அரசி யூகித்து விட்டாள். தன் ஆசனத்தில் அமர்ந்ததும் அவள் பார்வையில் வெம்மை கக்கியது. ‘யாரங்கே. இந்தப் பெண்களை அழைத்துச் சென்று அரண்மனை மாடச் சத்திரத்தில் தங்க வையுங்கள்!’ என்று மன்னவனைத் தாண்டி உத்திரவும் இட்டாள்.

இப்படியான நடவடிக்கை இந்த ஸ்காந்தபுர மண்ணுக்கு புதிதில்லை. என்றாலும் பட்டத்து ராணியைத் தாண்டி பல பெண்களை எந்தக் கேள்வி முறையும் இல்லாது தானே மணந்து அந்தப்புரத்துக் கொண்டு வந்த ராஜா இந்தப் பெண்களில் கர்ப்பம் அல்லாத யுவதியை விட மாட்டான் என்றே முடிவு கட்டினர். சபை கலைகிறது என்ற ஆக்ஞையையும் அவளே இட்டாள்.

அடுத்த கணம் தன் ஆசனத்தை விட்டு இறங்கினாள். கம்பீர நடை நடந்தாள். தேர் போன்ற அசைவுடன் சென்ற அவள் பின்னே சேடிப் பெண்கள் வரிசையாய் சென்றனர். அரண்மனை தாண்டி. பொற்றாமரைக்குளம் தாண்டி, சேடிப்பெண்களின் இருப்பிடம் நீங்கி அடுத்தாக இருக்கிறது. மாடச்சத்திரம்.  தூக்கிகளுக்கு அங்கே செல்லுங்கள் என ஆணையிட்டு பல்லக்கினுள் அமர்ந்தாள். அவளின் இடமும் வலமுமாக தலைமை சேடிப் பெண்கள் அமர்ந்தனர். . மற்ற சேடிப் பெண்கள் இருபுறமும் அணி வகுக்க, பல்லக்குப் புறப்பட்டது.

சத்திரத்தில் காவலர்கள் அரசியைப் பார்த்ததும் இடுப்பு வளைத்து குனிந்து வணங்கினார்கள். கையில் இருந்த வேல் கம்புகளும் அவர்களுடன் சேர்ந்து தாழ் பணிந்தது. சத்திரத்தினுள் சென்றாள். அவ்விரு பெண்களைக் கண்டாள். என்ன நடந்தது என்று விசாரித்தாள்.

அவர்கள் ரோமநாட்டிலிருந்து இங்கே எதற்காக வந்தார்கள் என்பதை தெளிவுறக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். உள்ளொன்று வைததுப் புறமொன்று பேசும் வழக்கம் ஸ்காந்தபுரத்து ராணிக்குப் பழக்கமில்லை. நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

‘‘உன் பெயர் என்ன சொன்னே?’

‘‘மகிழினி’’

‘‘இந்த கருவுற்ற தாயின் பெயர்?’’

‘‘சில்வியா!’’

அவர்கள் இருவரையும் பார்த்து ஒரு பெருமூச்செறிந்தார் ராணி.

‘‘இவளைப் போலவே நீயும் கர்ப்பமடைந்து வந்திருக்கக்கூடாதா?’’ என்று கேட்டாள். மகிழினி என்பவளுக்கு விளங்கவில்லை.

அரசி என்ன சொல்கிறார்?

‘‘வேறொன்றுமில்லை பெண்ணே. நீ இங்கே வந்திருக்கக்கூடாது. அப்படியே வந்திருந்தாலும் இவ்வளவு அழகாக இருந்திருக்கக்கூடாது. அப்படியே இருந்திருந்தாலும் இந்த ராஜாவின் கண்ணிலவாது பட்டிருக்கக்கூடாது..!’’

‘‘என்ன சொல்கிறீர்கள் ராணி?’’

‘‘என்னம்மா புரியாதது போல் கேட்கிறாய். அந்த ராஜா பார்த்த பார்வையில் உன்னைத் தின்று விடுவது போல் பார்த்தாரே. அதிலிருந்து கூடவா விளங்கவில்லை? அவர் உன்னை அந்தப்புரத்தில் இட்டு தனக்கு பதினெட்டாவது ராணியாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்..!’’

‘‘என்ன சொல்கிறீர்கள்? நான் ஏற்கனவே ஒரு பிள்ளை பெற்றவள். அந்தக் குழந்தையை எம் நாட்டு அரசனிடம் பறிகொடுத்தவள். என்னை மணம் செய்து கொண்டவனைக்கூட அந்த அரசவையின் வீரர்களே கொன்றார்கள். அப்படியான கொடூரத் துயரம் கொண்டவனை இந்நாட்டு அரசன் தன் அந்தப்புரத்தில் இடுவதாவது…!’’

‘இதிலென்ன இருக்கிறது? இங்கே யாராக இருந்தாலும், ஒரு பெண்ணும், ஆணும் சம்மதித்தால் இருவரும் கரம் பற்றலாம் என்பது நியதி. பெண் குழந்தைகளோடு வேறொருவனைக் கை பற்றி இருந்தாலும் சரி, ஆண் வேறொருத்தியைக் கை பற்றி இருந்தாலும் சரியே!’’

‘‘எம் நாட்டில் அப்படி எதுவும் இல்லை அரசி’’

‘இருக்கலாம். ஆனால் இங்கே அப்படி இல்லையே. தவிர உன் மீது ஆசைப்பட்டிருப்பவன் அரசன். நீயோ இங்கிருந்து கடலோடி நாடு சென்றவள். திரும்ப இங்கே வந்திருக்கிறாய். ஆகவே உன்மீது அத்தனை உரிமை செலுத்தவும் அரசன் அதிகாரம் உடையவனாகிறான். இப்படியிருக்க அந்த நாட்டுப் பெண்ணை பாதுகாக்கத் தவறினவன் என்ற பெயர் எம் ராஜாவுக்கு ஏற்படாது. அதுவும் தன் நாட்டிற்கு வந்த தம் இன யுவதியை கைப் பிடிக்க எதுவும் தடையாக இருக்காது..!’’

‘‘என் சம்மதம் இன்மை கூடவா?’’

‘‘நிச்சயமாக..!’’

அவள் கண்களில் முணுக்கென்று கண்ணீர் பிதுங்கியது. அரசியையே பார்த்தாள். அரசியாகப்பட்டவள் அவள் கூந்தலை ஆதாரவாக வருடினாள்.

களங்க வேண்டாம் பெண்ணே. அதற்காகத்தான் ஒரு யோசனை வைத்துள்ளேன். அதன் மூலம் நீயும் தப்புவிக்கலாம். நானும் என் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வேன். உன் சம்மதம் இருந்தால்..?’’

‘‘சொல்லுங்கள் ராணி!’’ கண்ணீரைத்துடைத்துக் கொண்டு கேட்டாள். ராணி தொடர்ந்து சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமுற்றாள் இப்படியும் நடக்குமா? நமக்கு இப்படியும் ஓர் அதிசய வாழ்க்கை அமையுமோ?

ஆம். அரசியானவள் அதைத்தான் சொன்னாள்.

‘‘நீ என் மகன் இளவழகனை கை பிடித்தல் வேண்டும். நாட்டின் படைத்தளபதியாக உள்ள அவன் உன்னைக் கைப்பிடித்த கணத்திலிருந்து இந்நாட்டு மன்னனாக பட்டம் சூட்டப்படுவான். அவன் உன்னையும், குடிமக்களையும் நன்றாகப் பாதுகாக்கட்டும். எம் அரசன். எம் ராஜா அந்தப்புரத்தில் அவனின் அரசிகளோடும், சேடிப் பெண்களோடும் கிடக்கட்டும்!’’

அவள் சொன்னபடியே நடந்தது. இளவரசனின் கைபற்றல் விழா இனிதே நடந்தேறியது. சுத்துப்பத்து பதினெட்டுப் பட்டிகளிலிருந்தும், பாளையங்களிலிருந்தும் அத்தனை ராஜாக்களும் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் இளவரசனுக்கு ராஜ மகுடம் சூட்டும் வைபவமும் அமர்க்களமாக நடைபெற்றது.

அந்த விழாவில் கோவிந்தராய ராஜவின் மகனான இளவழகன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ணராயன் என்ற பெயரில் மகுடம் சூட்டப்பட்டான். பேரிகைகள் முழங்கின. வாத்தியங்கள் அதிர்ந்தன. அவளின் பட்டத்து ராணியானாள் மகிழினி.

THE KOVAI HERALD S.KAMALAKANNAN Ph.no.9244317182

scroll to top