அவள் பளிச்சென்று முழு நிலவு போல இருந்தாள். இருட்டில் கூட ஒளிர்ந்தாள். அதற்கேற்ற மாதிரி தூரத்தில் எரிந்த தீவட்டிச்சுடர்கள் அவள் முகத்தின் ஒரு புறத்தை தங்கம் போல் ஜொலிக்க விட்டன. அந்த ஒளியிலிருந்து அவளின் முகம் சற்றே சோகம் ததும்புவதையும் காண முடிந்தது. கண்களில் நீர்த்திவலைகள் மினுங்கின.
‘‘தன் குழந்தைகளையே கொன்ன ராஜா அதோட நிற்கலை. மறுபடியும் கால நேரத்தைக் கணிச் சுப் பார்த்தான். அது விவகாரத்தை மேலும் மோசமாக்கிடுச்சு!’’ என்றாள். பிறகு லேசாக விம்மினாள். பிறகு மீதிக் கதையையும் நீட்டி முழக்கி சொல்ல ஆரம்பித்தாள்.
‘‘அந்த அபூர்வக் குழந்தை பொறந்துடுச்சு. அதுக்குத் தேவர்கள் ஆசியும் வழங்கிட்டாங்கன்னு தெரிஞ்சுது அப்புறம்தான் ராஜா இன்னும் மூர்க்க மானான் அரசன். பிறந்த குழந்தைகள் மட்டுமில்ல. நாட்டில் அஞ்சு வயசுக்குள்ளே இருக்கிற குழந்தைகளை எல்லாம் கொல்லச் சொல்லி உத்திரவு போட்டுட்டான். அப்பவும் அவன் பயப்பீதி ஒழியவில்லை. ஒவ்வொரு நாள் ராத்திரியும் அவன் கனவில் அக்குழந்தை வந்தது. அவனை நோக்கி கைகளை அகல விரித்து அழைத்தது. அந்தக் குழந்தையின் தலையில் ஏதோ ஒரு கிரீடம் சூட்டப்பட்டிருந்தது. அது அன்பால் அர வணைப்பது போல் தோன்றினாலும் இவனுக்கு அது தன்னை கை நீட்டி கொல்வதாகவே உணர்ந்தான். அலறினான். அவன் சத்தம் கேட்டு ராணிகள் அவனை அரவணைத்தனர். அப்போது கனவில் வந்த குழந்தையின் ரூபத்தைப் பிதற்றினான். இரு கரம் நீட்டி அழைப்பதைச் சொன்னான். அதில் ராணிகளுக்கும் கூட பயம் ஏற்பட்டது. அவன் கனா கண்டு அலறும்போது அவனிடம் செல்வதைத் தவிர்த்தார்கள். அப்படி ஒரு நாள் கனா கண்ட வேளையில் யாரும் அவனை நெருங்கவில்லை அடுத்தநாள் காலை ராஜாவின் கண்கள் அரண்மனை விட்டத்தையே வெறித்திருந்தது. உடல் விறைத்திருந்தது. பயப்பீதியுடனே முழிச்சது முழிச்சபடி செத்துக் கிடந்திருக்கான்.
உடனே ராஜகுல வழக்கப்படி அவன் உடலை அடக்கம் செய்தார்கள். பிறகு அவன் மகனுக்கு பட்டம் சூட்டினார்கள். அவன் அப்பனைப் போல இல்லை. என்றாலும் அவனின் அச்சம் அப்பனை விடவும் எல்லை கடந்திருந்தது. தன் தகப்பனைக் கனவில் வந்து கொன்ற குழந்தை, தன்னை நேரில் வந்து கொல்லும் என்றே நடுங்கினான். அந்த சாத்தான் குழந்தை உயிரோட இருப்பதாகவே நம்பினான். அந்தக் குழந்தை எங்கே இருக்கு. அதைப் பெத்தவங்க யார், யாருன்னு நாடு முழுக்கத் தேடி அலைவதே அவன் வேலையாகி விட்டது. அந்தக் குழந்தையை கண்டும் பிடிச்சுட்டான். அப்போது அந்தக் குழந்தை இளைஞனாகி இருந்தது. அந்த இளைஞன் ஊர் ஊராக மக்களிடம் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான். ஒரே ஒரு அங்கி மட்டும் அணிந்து மக்களின் மத்தியில் எளிமையாய் உலா வந்தான். அவன் மக்கள் மத்தியில் நிறைய வித்தைகள் செய்தான். அந்த வித்தையில் குருடர்கள் பார்த்தார்கள். செவிடர்கள் கேட்டார்கள். அவன் தொட்டவுடன் பாவிகளின் பாவக்கறை அகன்றது. அவன் தன்னைத் தேவதூதன் என்றான். மக்களோ அவனையே கடவுளாக நினைத்து உருகினார்கள். இந்த உலகத்தில் தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்ட மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? இவனல்லவோ கடவுள் என்பதுதான் தாரக மந்திரம். இங்கே பாவம் செய்யாதவர்களை இல்லை. அவர்களை ரட்சிக்கவே வந்துள்ளேன். என்னிடம் பாவக்கறை கழுவிக் கொண்டவர்கள் மீண்டும் பாவம் செய்யாதிருப்பீராக என ஆசீர்வதித்தான்.
எங்கள் நாட்டில் அர சனையே நாங்கள் தெய்வமாகக் கருதுகிற வழக்கம். அரசன் எப்போது எண்ணெய் ஸ்நானம் செய்து தலைமைப் பொறுப்பு ஏற்கிறனோ அப்போதிருந்து எங்களுக்கு அவனே கடவுள். அப்படிப்பட்ட கடவுள் செய்யாத சடங்கை தனி ஒரு மனிதனாக யாரிடமும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஓர் இளைஞன் செய்கிறான். அவன் கண்களில் கருணை ஒளிர்கிறது. உடலில் தேஜஸ் சுடர் விடுகிறது. அவனைப் பார்க்கும்போதே உடலெங்கும் ஏதோ புரிபடாத ஒரு அவலம் பிரிந்து செல்லும் உணர்வு. இப்படியான சடங்கு தீர்க்கும் வைபவத்தை யாரும் கேட்டதுமில்லை. கண்டதுமில்லை. அவனைப் பற்றிப் ஜனங்கள் பேசப்பேச அரசனுக்கு ரெளத்திரம் கொப்பளித்தது. அவனை பல வகைகளில் எச்சரித்து தண்டித்தும் பார்த்து விட்டார் அரசர். ஆனால் அந்த மனிதர் அடங்குவதாயில்லை. அவர் கண்களில் ஒரு தெய்வீக ஒளி. அவர் போகிற இடமெல்லாம் அவர் உடலைச்சுற்றி ஒரு வெளிச்சம் பொன் போல ஜொலித்தது. அவன் தொட்டவுடனே குஷ்டரோகிகள் சொஸ்தமானார்கள். அதைப் பார்த்து வெல, வெலத்துப் போன ராஜக்காரியக்காரர்கள் அவரை விலங்கிட்டுக் கொண்டு போய் ராஜா முன் நிறுத்தினார்கள். ‘இவன் ஆபத்தானவன்!’ என்று ராஜா சொல்லும் முன்னரே அரச ஜோதிடன் கணிந்து விட்டான். ‘உங்களை கொல்ல வந்த அந்தக் குழந்தை இவன்தான்!’ என்று சொல்ல பொரி கலங்கிப் போனான் மன்னன்.
அதனால் அவனை பாதாளச்சிறையில் தள்ளினான். நாட்டிலேயே கொடூரமான சிலுவைத் தண்டனை கொடுக்கவும் தயராகி விட்டான் புது அரசன். இந்த சிலுவைத் தண்டனை வேற்று நாட்டிலிருந்துதான் எங்கள் நாட்டிற்கு வந்தது. இப்போது அந்த தண்டனை நாடு முழுக்கப் பரவிக்கிடக்கிறது. அது ஒரு பக்கம் நடந்தாலும், புதிதாக பிறக்கப் போகிற குழந்தைகளையும் பழைய மன்னன் உத்திரவுப்படி துன்புறுத்துவதும் தொடர்கிறது. அதில் நிறைய குழந்தைகள் பிறந்து விழுந்ததும் படைவீரரின் கொலைவாளால் உயிர் விடுவதும் தொடர்கிறது. அதனால் கர்ப்பிணியாகிய பெண்கள் எல்லாம் அடுத்தடுத்து நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு மகவைப் பெற்று அரசனின் கொலை வெறிக்கு பலி கொடுத்த பெண்களில் ஒருவள்தான் நான். இவள் என் தோழி. தங்கைக்கு நிகரானவள் அவள் கர்ப்பத்தில் உள்ள குழந்தையாவது காப்பாற்றப்பட வேண்டும். அதற்குத்தான் உபாயம் செய்தேன்.
நான் இந்த சோழநாட்டைச் சேர்ந்தவள். ஒரு முறை கொடுமணத்திற்கு ரோமா புரி வணிகர்கள் வந்தார்கள். தாய் தந்தையற்று அனாதையற்று நின்ற என்னை தம்மோடு அழைத்துச் சென்று வளர்த்தார்கள். அவர்களுடன் நான் போகும்போது எட்டு வயசு. இப்போது இருபத்தி நாலு வயசு. இவள் என் தோழி. என்னை அழைத்துச் சென்ற வளர்ப்புத் தந்தையினுடைய மருமகள். எப்படியாவது தன் மருமகளையும் அவள் வயிற்றில் வளரும் ஆறு மாச சிசுவையும் காக்க வேண்டும். அதற்கு என் உதவியை நாடினார். என் சொந்த மண்ணுக்கு போய் விடட்டுமா என்றதும் சம்மதித்தார். அதோடு அவர் தன் இரண்டு மகன்க ளையும் என்னுடனே வழித் துணைக்கு அனுப்பினார். அவர்கள்தான் இந்த இரண்டு வீரர்கள். இவர்களும் கடல் கடந்து வாணிகம் செய்கிறவர்கள். இங்கே வந்தால் வாணிகத்திற்கு வாணிகம் செய்த மாதிரியும் ஆச்சு. தன் மருமகள் பேரக்குழந்தைகளையும் காப்பாற்றிய மாதிரியும் ஆச்சு என்றுதான் இங்கே வந்திருக்கிறோம்!’’
அவள் சொல்வதை வியப்புடன் கிழவியும், அவள் மகள், மருமகன், பேத்திகள் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தனர். கிழவன் மட்டும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தார். இப்படியான ரகசியம் எல்லாம் தனக்கு ஏற்கனவே தெரியும் போலவோ, ப்பூ இதென்ன பெரிய ரகசியம் என்பது போலவோ இருந்தது அவன் பார்வை. அதோடு, ‘‘எல்லாம் சரி. உங்க ராசாவின் பேர் என்ன?’’ என்ற கேள்வியையும் எழுப்பினான்.
அதுவரை கதை சொன்னவள் உடன் இருந்த மற்ற மூவரைப் பார்த்தாள். பிறகு, ‘குழந்தைகளைக் கொல்ல உத்திரவிட்டு கனாக் கண்டே செத்துப் போனவன் பெரிய ஏரோது. அடுத்து இப்போது ஆட்சிக்கு வந்திருப்பவன் சின்ன ஏரோது. அவனே புதிய உத்திரவை இட்டிருப்பவன். சிலுவை தண்டனை கொடுக்க அவன் உத்திரவிட்டுள்ள ஆண் மகனை மக்கள் ஏசு என்று அழைக்கிறார்கள்!’’
‘‘அது என்ன சிலுவைத் தண்டனை..!’’
‘‘உங்க நாட்டில் பெருங் குற்றம் செஞ்சவங்களை எப்படி யானையின் காலடி யில் விட்டு தலையை நசுக்குகிறார்கள். தூக்கில் போட்டு சாகடிக்கிறார்கள். அதை விட மோசமான தண்டனை இது. இந்த தண்டனை பெற்றவர் பெரியதொரு மரத்தை முதுகில் கட்டிவிடுவார்கள். அதை தாங்கி தண்டனை பெற்றவர் இழுத்து வரவேண்டும். பிறகு அதே மரத்தை அறுத்து குறுக்குச்சட்டம் உரு வாக்குவார்கள். அதில் தண்டனை பெற்றவரை பதித்து கை, கால், நெஞ்சு, தலை எல்லாவற்றிலும் ஆணியடிப்பார்கள். குருதி கொப்பளிக்கக் கொப்பளிக்க அணு, அணுவாகச் சித்ரவதைப் பட்டு அந்த ஆள் துடி, துடிக்க சாகவேண்டும்!’’ என்றாள். அவள் வர்ணித்து சொல்வதைக் கேட்டதுமே சுற்றி நின்ற கிழவனின் குடும்பமே ஒரு முறை சிலிர்த்து நடுங்கிக் கொண் டது. கிழவன் ஏதும் பேசாமல் அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்தான்.
கதைப்போம்.
THE KOVAI HERALD S.KAMALAKANNAN Ph.no.9244317182