‘‘கோயமுத்தூருக்கு கரூர் ஸ்டைலு எடுபடுமா?’’ஆளுங்கட்சி நேர்காணல்; வெடிக்கும் அதிருப்திகள்

தி கோவை ஹெரால்டு : சபா கமலக்கண்ணன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் வார்டு வாரியாக வேட்பாளர்களுக்கான நேர்காணல்களை நடத்தி முடித்துள்ளன. இதில் ஆளுங்கட்சியான திமுகவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் முன்னிலையில் நடந்த நேர்காணலில் கடும் அதிருப்தி அலைகள் புறப்பட்டிருக்கின்றன.
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மிக வேகமாக நடந்து வருகிறது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. தற்போது கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர மொத்தமுள்ள 100 வார்டுகளில் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சியினர் உள்ளனர். அதற்கான வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே 2 கட்சியினரும் கோவை மாநகர பகுதிகளில் தொடங்கி செய்து வருகின் றனர்.
தி.மு.க. சார்பில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.
விருப்ப மனு அளித்தவர் களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி கோவை பீளமேட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் கடந்த 21, 22 மற்றும் 23 தேதிகளில் நடந்தது. நேர்காணல் நிகழ்ச்சிக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா என்ற கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, வரதராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நேர்காணலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில்தான் நேர்காணலுக்கு சென்ற வர்கள் பலரிடம் கடும் அதிருப்தி அலைகளை காண முடிந்தது. நேர்காணல் முடித்து வந்த சிலரிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்தது:
‘‘கோவை மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ சீட் கூட ஜெயிக்காத நிலையில், இங்குள்ள கட்சிப் பிரதிநிதிகள் மீது நம்பிக்கையில்லாமல் கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை பொறுப்பில் போட்டு மாவட்டத்தின் நிர்வாக மற்றும் கட்சிப்பணிகளை கவனித்து வருகிறது எங்கள் கட்சித் தலைமை என்பது எல்லோரும் அறிந்ததுதான். அவர் தலைமையில் உள்ள கட்சி நிர்வாகிகள் இதுவரைக்கும் இல்லாத சிறப்பான முறை யில் நடந்து 100-க்கு 90 சதவீதம் உள்ளாட்சித் தேர்தலிலாவது வெற்றியை ஈட்டி கட்சியைக் காப் பாற்றுவார்கள் என்று நினைத்திருந்தோம். அது இப்போது படிப்படியாக குறைந்து, கோயமுத்தூர் திமுகவை யாராலுமே காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு இந்த நேர்காணல் மூலம் கொண்டு போயிருக்கிறார்கள்.
இது டாஸ்மாக் பார் ஏலத்திலிருந்து தொடங்கி யது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விட்டு, உள்ளூர் கட்சிக்காரர்களையும், போலீஸையும கவனித்துக் கொண்டு பார் நடத்தினால் போதுமானது என்பதுதான் அதிமுக ஆட்சியில் இருந்த நடைமுறை. அது போல இப்போது பார் எடுப்பவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விட்டு ஆளுங்கட்சியான எங்களையும் (திமுக), போலீஸையும் ‘கவனித்து’க் கொண்டால் போதும் என்ற நிலையைத்தான் எடுப்பார்கள் என்று அனை வரும் எதிர்பார்த்தோம்.
ஆனால் இதற்கென கரூரிலிருந்து ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர் கள் தன் பெய ரில் பார் எடுத்து இங்குள்ளவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை விற்றிருக்கிறார்கள். இதற்கு ரசீதோ, வேறு எழுத்துப் பூர்வமான உத்திரவாதமோ இல்லை. பார் எடுத்தவர் இதைக் கொடுப்பதோடு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்த வேண்டும். போலீஸிற்கும் மாமுல் தரவேண்டும். அந்த வகையில் ரூ. 5 லட்சம் செலவாகும். ஆக மொத்தம் ரூ. 20 லட்சம் செலவு செய்து பார் நடத்தினால் அதில் என்ன வருவாய் வந்து விடும். அதன் மூலம் உள்ளூர் ஆளுங்கட்சிக்காரர்களுக்கு எதுவுமே இல்லை. இப்படி இருந்தால் கட்சிக்காரர்கள் எப்படி மக்கள் பணி செய்வார்கள். தேர்தலுக்கு செலவு செய்ய முடியும்? என்பதுதான் எங்கள் கேள்வி.
இந்த நிலையில்தான் பொங்கலுக்கு மளிகைப் பொருட்கள் கொடுத்தாலும், பரிசுப்பணம் கொடுக்காதது மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் பேச்சை சமாளிப்பதே உள்ளூர் கட்சிக்காரர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. கொரானா வேறு ஒரு பக்கம் பிடுங்கி எடுக்கிறது. இதை வாகாக பயன்படுத்திக் கொண்டு, ‘எடப்பாடி காலத்தில் எப்படியெல்லாம் நடந்தது?’ என்று அதிமுக பிரச்சாரம் செய்கிறது. இந்த சூழ்நிலையில்தான் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கப் போகிறோம். அதற்கான நேர்காணலை நடத்தியிருக்கிறார்கள். இதுவாவது உள்ளூர் கட்சிக்காரர்களின் மன நிலையை வைத்து நடந்ததா என்றால் இல்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகராட்சியின் 72 வார்டுகளை கட்சியில் 8 பகுதிக் கழகங்களாக பிரித்திருந்தார்கள். அதுவே பின்னர் 100 வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்ட போது 11 பகுதிக்கழகங்களாக மாற்றி அதற்கெல்லாம் கட்சி நிர்வாகிகளை நிய மித்தார்கள். அது இப்போது 33 பகுதிக்கழகங்களாக மாறி விட்டது. அதற்கெல்லாம் செயலாளர், தலைவர் உட்பட பல்வேறுபட்ட பகுதிக் கழக நிர்வாகிகள் உள்ளார்கள். ஒரு பகு திக்கழகத்திற்கு மூன்று வார்டுகள், ஒரு வார்டில் இரண்டு, மூன்று என கிளைகள். ஒரு வார்டில் 10 முதல் 30 பேர் வரை உள்ளாட்சித் தேர்தலில் சீட் கேட்டு பணம் கட்டி யுள்ளார்கள். இவர்களை எல்லாம் தனித்தனியாக கூப்பிட்டு, ‘நீங்கள் என்ன பொறுப்பு வகிக்கிறீர்கள்? கட்சியில் என்னென்ன பணிகள் செய்தீர்கள்? வெற்றி வாய்ப்பு எந்த அளவு உள்ளது?’ என்றெல்லாம் கேட்டு நேர்காணல் நடத்துவதுதான் கட்சியில் காலம் காலமாக இருந்து வரும் மரபு.
ஆனால் இப்போது அப்படியல்ல ஒரு பகுதிக் கழகத்தில் மூன்று வார்டுகளுக்கும் சேர்த்து 60 பேர் 70 பேர் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அவர்களை ஒட்டுமொத்த மாக அழைத்து நேர்காணல் செய்துள்ளார்கள். அதுவும் எப்படி? ‘யாரை வேட்பாளரா நிறுத்துவதுன்னு கட்சி முடிவு செய்யும். அவர்களுக்கு நீங்க கோஷ்டி சண்டை இல்லாம வேலை செய்து ஜெயிக்க வைக்கணும். உங்களுக்கு சீட் கிடைக்கலைன்னு வருத்தப்படக்கூடாது. அடுத்தது கூட்டுறவு சொசைட்டி தேர்தல் வருது. அதில் எல்லாம் உங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும்!’ன்னு பொத்தாம் பொதுவா பேசி அனுப்பியிருக்கிறார்கள். இதில் ஒரு வார்டில் 4 கோஷ்டி இருந்தால் அத்தனை பேருமே அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இது கோயமுத்தூரு. கரூர் ஸ்டைலு எல்லாம் எடுபடாதுன்னு வெளிப்படையாகவே பேசுகிறார்கள். இதை யெல்லாம் உள்ளூர் மூத்த நிர்வாகிகள் பார்த்துக் கொண்டு உள்ளூர சிரிப்பாய் சிரிக்கிறார்கள். சீட் கொடுக்கும் விஷயத்திலும் டாஸ்மாக் பார் விநியோகம் மாதிரிதான் நடந்து கொள்வார்கள் போல இருக்கிறது. அப்படி மட்டும் நடந்தால் அந்தந்த வார்டில் உள்ளவர்கள் தேர்தல் பணியிலிருந்து சுத்தமாக ஒதுங்கி இருந்து விடுவார்கள். சுலபமாக அதிமுக ஜெயித்து விட்டுப் போய் விடும். ஒரு எம்.எல்.ஏ இல்லை, மந்திரி இல்லை. இனி மேயராவது ஆளுங்கட்சியில் இருந்தால்தான் நம்ம குறையாவது சொல்ல ஒரு வாய்ப்பு ஏற்படும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து திமுகவிற்கு ஓட்டளிக்க தயாராக இருந்தார்கள்.
ஆனால் இப்போது டாஸ்மாக் பார் விவகாரம், பொங்கல் பரிசுத்தொகை இல்லாததால் ஏற்பட்ட மக்கள் அதிருப்தி, சீட் ஒதுக்குவதில் வெளி யூர்க்காரர்களி்ன் தலையீடு எல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கட்சியை கடைநிலைக்கு கொண்டு போய் நிறுத்தி விடும். இதை எப்படியாவது தலைமைக்கு கொண்டு போக ஒவ்வொரு தொண்டனும் துடிக்கிறான். கொண்டு போகத்தான் ஆளில்லை!’’ என்று பலரும் புழுங்கித் தள்ளினார்கள். மாநகராட்சி வார்டுகளில் நிலவும் அதிருப்தி மற்ற நகர்புறங்களின் நேர்காணல்களிலும் எதிரொலிக்கவே செய்கிறது.
இதே நேரத்தில்
அதிமுக நடத்திய நேர்காணல் எப்படியிருந்தது?
நேர்காணல் முடித்து விட்டு வந்த அதன் கட்சிக்காரர்களிடம் பேசினோம். ‘‘முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட செயலாளர்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர்.ஜி அருண்குமார், சிங்க நல்லூர் ஜெயராமன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலையில்தான் இந்த நேர்காணல் நடந்தது. ஒவ்வொருவரிடமும் பிரதானமாக கேட்கப்பட்டது தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதுதான். குறைந்தபட்சம் வார்டுக்கு 5000 வாக்குகள் நமக்கு விழ வேண்டுமென்றால் தோராயமாக ரூ.40 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி வரும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
‘‘திமுகவில் உட்கட்சி பூசல், அக்கட்சியில் வெளியூர்க்காரர்களின் ஆக்கிரமிப்பு, மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கொடுக்காதது, டாஸ்மாக் பார் விவகாரம் என்று ஆயிரம் அதிருப்திகள் இருந்தாலும் திமுக ஆளுங்கட்சி. அதிகாரத்தை பயன்படுத்தும். அதுவும் கோவையை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக என்னவேண்டு மென்றாலும் செய்வார்கள். அதை எதிர்த்து என்னதான் செலவு செய்தாலும் ஜெயிக்க முடியுமா தெரியவில்லை. அதனாலேயே கட்சியில் மூத்தவர்கள் பலரும் சீட் கேட்காமலே ஒதுங்கிக் கொண்டார்கள். அதனால் புதியவர்கள்தான் அதிகமாக இந்த முறை போட்டியிடுவார்கள். அவர்கள் எல்லாம் எஸ்.பி.வேலுமணியின் முழு ஆசி பெற்றவர்களாகவே இருப்பர்!’’ என்று தெரி வித்தனர் நம்மிடம் பேசியவர்கள்.

scroll to top