கோயமுத்தூரின் கதை:10. ஸ்காந்தபுர தளபதிக்கு கோசன் போட்ட உத்திரவு

Pi7compressedcoimbatore.jpg

வே.ரோகிணி

உண்டுக் கொழுத்த களிறுகள் பிளிறுகளுடன் கூடிக் கழித்தன. கரியதான யானைகளை வெண்மை வேழம் விகல்பம் செய்தன. மாதங்கம் கைம்மாவுடன் உறங்கி எழுந்தன. உம்மரும், அஞ்சனாவதியும், அல்லியன், ஆம்பல், இபம், குஞ்சரம் சேர்ந்து உம்பல், அரசுவா, அறுபடை, ரதியாகி இருளாகியும் நின்றன. உரலாய் நின்ற பாதம் தழுவி, கரையடி தூங்கல், தோல் பெற்று எறும்பியாகி, துளையுள்ள பூட்கை விலங்கேயாகி ஒருத்தலில் சுகம் கண்டன. தொங்குகின்ற நால்வாய் குஞ்சரம் திரட்டி சுரேணு உவாவாகி கரியதாகியது. சிந்துரம் சிந்தி வயமாவாகி புகர்முகம் காட்டி தந்தி மதாவளம் கண்டு தந்தாவளமாகி, உருண்டு திரண்ட கைம்மலை வழுவை மதகயம், போதகம் போக மதோற்கடமாகி விரமலி நின்று கடகத்தில் அணிவகுத்தன. அதவை, வடவை, பிடி, கரிணியாி அத்தினியாய் பரிபாலித்த கஜேந்திரக் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர படாத பாடுபட்டனர் மாவூத்துகள். யானைப் படையின் கதை இப்படியென்றால் குதிரைப்படைகளின் அதிகலத்தை சொல்லவே வேண்டாம்.
பரியாய் பறந்த புரவிகள், அசுவமாகிப் பறந்து அச்சுவம், அத்திரியாகி, அயம், அரியாக, இவுளி, உத்தரி, உன்னி, கண்ணுகம், கந்தருவம், கந்துகம், கர்க்கி, கிள்ளை, குந்தம், குரகதம் என்னும் நிலை கடந்து  குரை, கொக்கு, கொய்யுளை, கோடகம்,கோடரம், சடிலம், சயிந்தவம், துரகதம், துரகம், துரங்கம், தூசி, தேனு, நாணுகம், பத்திரி, பாடலம், பாய்மா, மண்டிலம், மாவயம், வாசி, தேசி என ஆளாளுக்கு சொல்லாடல்களால் ஆயிரமாயிரமாய் திளைத்து நின்றன. சோழ நாடு சோறுடைத்து; பாண்டி நாடு முத்துடைத்து; தொண்டை நன்நாடு சான்றோர் உடைத்து என்றாகிப் போன உலகில் சேரநாட்டுக்கு ஈந்த கொங்குநாடு வேழமுடைத்து மட்டுமல்ல, அசுவமுடைத்தே நின்றது. ஆண்டுகள் பல கழிந்தன. வன தேவதைக்கு இரண்டாம் திருவிழாவும் வந்தன. சேரன் செங்குட்டுவன் இருந்த திக்கிலிருந்து எந்தப் படையும் காணோம். கொங்கு தளபதிகள் கோசர்களுக்கும் சரி, அவர்களை வைத்துப் பரிபாலனம் செய்த கோனி முத்தா அரசிக்கும் சரி, குடிக்காவலுக்கும், போர்த்தளவாடங்களை உருவாக்கி கட்டியாள வந்த கொங்குவேலன் தளபதிக்கும் கூட இது புரியாத புதிராகவே இருந்தது. இதோ, அதோ போர் என்று ஓலை அனுப்பின சேரன் செங்குட்டுவன் என்ன ஆனான்? அவன் மறுபடி வடதிசை நோக்கிப் படையெடுத்து சென்று விட்டான் என்றார்கள். அந்த நேரத்தில் சோழநாட்டின் மீது போர்தொடுத்துக் கொண்டிருந்தான். ஆயிரமாயிரம் படைகளை திசை திருப்பி கொங்கு நாடு புக அனுப்பி விட்டு சோழ எல்லைகள் வலுவிழந்து இருக்கும் நேரம் பார்த்து அடிப்பதா யுத்த நீதி என்று ஊரே பேசியது. ஒரு நாள், இரண்டு நாள் இல்லை. மாதங்கள், வருடங்களாக நீடித்த போரில் யார் வென்றார்கள் என்று தெரியவில்லை. சோழன் படையிழந்து, வலிமையிழந்து, குடிகள் நிறைய இழந்து நிர்கதியாய் நிற்கிறான் என்றார்கள். சரணாகதியை தவிர சோழனுக்கு மார்க்கமில்லை என்ற தகவலும் வந்தது. திரை செலுத்தினால் போர்நிறுத்தம் என்றும் ஒரு நாள் சேரன் அறிவித்ததாக சொன்னார்கள். அடுத்த சில நாட்களிலோ பேரதிசயம் நிகழ்ந்தது. சோழநாட்டின் உறையூரில் பெருந்திருவிழா. சேரன் நாட்டு களிறுகள் எல்லாம் அங்கே அணிவகுத்ததாக வந்தது சேதி. அதில் சோழராஜனும், சேர ராஜனும் முடிசூடி பல்லக்கில் பவனி வந்ததாகவும், கற்பின் மாதரசி கண்ணகிக்கு ஆலயம் எழுப்பியதாக பேசிக் கொண்டார்கள். தினந்தோறும் கண்ணகிக்கு வழிபாடு, ஆண்டுதோறும் திருவிழா என்று பூர்வபட்டயம் இருவரும் எழுதிக் கொண்டதாகவும் பேச்சு வந்தது. ஆம், போர் நிறுத்தம். பரஸ்பரம் இருநாடுகளுக்குமான நட்புக்கு கண்ணகி வித்திட்டாள்.
அடுத்த போர் பாண்டிய நாட்டின் மீது அறிவித்தான் சேரன். பாண்டியனிடம் இல்லாத ரதகஜதுரகபதாதைகள் சேரனிடம் இருக்குமா என சந்தேகம்தான். ஆனாலும் சேரனின் கஜப்படையை விஞ்சும் சக்தி உலகத்திலேயே இல்லை. அதுதான் பாண்டிய நாட்டு மக்களை கொஞ்சம் திகிலடைய வைத்தது அது மட்டுமா? கற்பின் மாதரசி கண்ணகியை பெருந்தெய்வமாக கொண்டாடும் வேந்தன். தன் தெய்வத்துக்கு நிந்தனை செய்து அவமானப்படுத்திய தேசத்தை சும்மா விடுவானா? கண்மூடித்தனமாக, மூர்க்கமாக அல்லவா தாக்குவான். அந்தத் தாக்குதலை மன்னன்தான் தாங்குவனா, படைகள்தான் தாங்குமா? குடிமக்கள்தான் தாங்குவரா? என்பதே அனைவரின் கவலையாக இருந்தது.
அதற்கு வேற்று நாட்டிலிருந்து வந்த மன்னர்கள் ஓர் உபாயம் சொன்னார்கள். இப்போதைக்கு வேந்தர்களிலேயே அதீத பலபராக்கிரமம் படைத்தவனாக சேரன் செங்குட்டுவனே உள்ளான். வடக்கே கனகவிஜயனின் முடிதனை எடுத்து, கல்லினை வைத்துக் கண்ணகிக்கு கோயில் எழுப்பியவன் அவன். அந்தக் கோயிலுக்கு கல்சுமந்த காரணத்தினாலேயே கனகவிஜயன் மீது அவனுக்கு சீற்றம் குறைந்தது. கனிவும் பிறந்தது. பிடித்தநாட்டை திரும்பக் கொடுத்து, அவன் மணிமுடியை அவன் தலையில் தானே சூடி, அவனை அரியாசனத்தில் அமரச் செய்து விட்டான்.
ஒரு பக்கம் ரெளத்திரகாரனாக இருந்தாலும், இன்னொருபக்கம் பரோபகாரியாகவும், தர்ம சிந்தனையினனாகவும் உள்ளான். எனவே அவனைக் குளிர்விக்க பாண்டிய நாட்டின் திக்கெங்கும் கற்பரசி கண்ணகிக்கு கோயில் எழுப்புங்கள். குடிமக்களை எல்லாம் அதில் அன்றாடம் வழிபாடு நடத்தச் செய்யுங்கள். மண் கோயிலா, கற்கோயிலா, சிதிலமடைந்த சிற்பமா, மழைக்கு கரைந்தே போகும் உருவாரமா?  எதுவேயானாலும் கண்ணகி தேவதை, கண்ணகி கோயில் என்று பெயர் மாற்றுங்கள். சேரனின் தீட்சண்யப் பார்வை குறையும். படைபலம் திரட்டி வெல்லுவதைக் காட்டிலும் மதியூகத்தால் வெல்வது சமகாலத்திற்கு பொருத்தமானது!’ என்று உரைத்தனர். மாறன் இளவழுதிப் பாண்டியன் தாத்தாவைப் போலவே மாவீரன்தான். ஆனால் அவரைப் போல மதிகெட்டவன் அல்லன். அவரை விடவும் மதியூகி. கண்ணகி எரித்த மதுரையில் திக்கெங்கும் அதே கண்ணகிக்கு உருவாரங்கள் செய்வித்தான். மக்களை வழிபாடு நடத்தச் செய்தான். அவற்றை எல்லாம் ஓவியங்களாக ஓலையில் வரைந்து சேரநாட்டு மன்னனுக்கு தூதுவர்கள் மூலம் கொடுத்து அனுப்பினான். ‘‘ஆகா, இதுவல்லவோ அரசு. முன்னை இட்டத் தீக்கு சரியான கர்மவினை தந்திட்டான் பாண்டி வேந்தன்!’ என்று மகிழ்ந்தான் சேரன். பாண்டி நாட்டுக்கு யானைத் தந்தங்களும், கோமேதக வைர, வைடூரியங்கள், தங்கப்பாலங்களும் பரிசாக கொடுத்து அனுப்புவித்தான். அப்போதுதான் தெரிந்தது. கொங்கு நாட்டின் மீது அதுவரை அவன் படைதிரட்டி வராமல் இருந்ததற்கு காரணம் யாதுமல்ல. இங்கே நடந்த கோனி முத்தா வழிபாட்டை கண்ணகி வழிபாடாக புரிந்து கொண்டு ஒற்றர்கள் அங்கு கொண்டு சேர்த்த செய்திதான். சேர, சோழ, பாண்டியரெனும் மூவேந்தர்களும் கண்ணகி தேவியால் பிளவுபட்டார்கள். இப்போது கண்ணகி தெய்வத்தால் ஒன்று சேர்ந்தார்கள். இனி இங்கே போர் ஏது? பரிவாரங்களுக்கான தீனியை எதற்காக வீணடிக்க வேண்டும்?ஸ்காந்தபுரத்து தளபதிக்கு, ‘உங்கள் படைகள் ஊர் திரும்பட்டும்!’ என உத்திரவிட்டான். கொங்குவேலனின் தளபதிக்கு மட்டுமல்ல, அவனுடன் சிற்றேவல் புரிந்த குட்டித் தளபதிகளுக்கும், பல்லாயிரம் படை வீரர்களுக்கும் கூட தன் மண் திரும்புவதில் விருப்பமில்லை. அந்த விருப்பமே கோசர்களின் நாட்டை இரட்டர்கள் பிடித்துக் கொள்ள காரணமாக மாறியது.

கதைப்போம்…..

THE KOAVI HERALD KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top