கோயமுத்தூரின் கதை 5.தென்திசை புறப்பட்ட கோணபாட்டன் குடிகள்

WhatsApp-Image-2020-08-12-at-8.46.06-AM.jpg

வே.ரோகிணி

தாழம்பூ வாசம் காடேகிக் கிடந்தது. பூ நாகங்கள் அதற்குள் முயக்கத்தில் இருந்தன. தொட்டாலே பற்றிக் கொள்ளும் விஷம். ஆனாலும் காந்தமாய் இழுக்கும் மணம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தாழமடல்கள் பசுமையாய் விரிந்து கிடந்தன. அவற்றைத் தாண்டி அவர்கள் அனைவரும் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காக தெற்கு சீமை நோக்கிப் புறப்பட்டிருந்தனர்.
சாரி, சாரியாய்.. எறும்பு போல அங்கே ஊர்ந்தது வெறும் மனிதர்கள் மட்டுமல்ல. ஒரு நூறு யானைகள், இருநூறு குதிரைகள், ஆயிரமாயிரம் மாடுகள், எருமைகள், ஆடுகள், நாய்கள் என அவர்களுடனே புறப்பட்டிருந்தன.
அவர்கள் கைகளில் கருவேலன், கருங்காலி மரங்களிலான வேல் கம்புகள், குத்தீட்டி போன்ற ஆயுதங்கள். கூடவே கொம்பு, கொலாலு, தாரை, தப்பட்டை போன்ற இசைக்கருவிகள். அவர்களுக்குப் பின்னே பெரும் பாறைகள். குன்றுகள், மலைகள். கூமாச்சியாய் ஒரு நெடுமலை. மழுங்கையாய் ஏழெட்டு குன்றுகள். அதிலிருந்து வில்லில் புறப்பட்ட நாண் போல்தான் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
கட்டாஞ்சி, கரட்டாஞ்சி, குருந்தம், தாளமலை இப்படி வாய்க்கு வந்த பேரை அதற்கு இந்த மலை மலசர்கள் வைத்திருந்தார்கள். இந்த தாழம்பூ மலையில்தான் முன்னொரு காலத்தில் கோயபாட்டன் இளங்கோசனைக் கண்டான். இந்த தாழம்பூ குகையில்தான் அந்த இவர்களின் குலகுரு முனிவரும் வாசம் செய்தார். தாழமடல் ஓடையில் முங்கி எழுந்து தாழம்பூ மலையில் வாசம் செய்த மாமுனிதான் தன்னாசி எனப்பட்டார்.
தன்னாசி தம் அருந்தவத்தால் சாகாவரம் பெற்றிருந்தார். அவர் வயசு அவருக்கே தெரியாது. இஷ்டப்பட்டால் மேலோகம் செல்ல ஈசுவரனிடம் அவர் வரம் வாங்கியிருந்ததாக நாடு கடந்து வரும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர் சச்சருவாய் மனித ரூபமாய் இருப்பார். அடுத்தது புலி ரூபமெடுப்பார். அடுத்த நொடியில் கழுகாக பறந்திடுவார். கூடு விட்டு கூடு பாயும் வித்தை கைவரப்பெற்றவர் தாளமடல் தன்னாசி என்றார்கள்.
அதைப் பற்றி கேட்கும்போதெல்லாம் அவர் சின்ன பிரதிபலிப்பு கூட காட்டாது இருந்ததாக பாட்டனுக்கு பாட்டன், முப்பாட்டன்கள் எல்லாம் கதை கதையாய் இவர்களுக்கு சொல்லி வந்துள்ளார்கள். தன்னாசி முனிவர்தான் நம்மையும் நம் குலத்தையும் காத்தது. நம் குல விளக்காய் இந்த இளங்கோசர்களை காவலுக்கு வைத்துச் சென்றது என்று இவர்களுக்குள் கதை பேசும்போதெல்லாம் சிலிர்த்துக் கொள்வார்கள் இப்போதும் தாழமடல் ஓடையில் தன்னாசி இருக்கத்தான் செய்கிறார்.
அவர் பத்தாவது தலைக்கட்டோ, பதினைந்தாவது தலைக்கட்டோ தெரியாது. அந்த முனிவரின் சக்தி இவர்களுக்கு இல்லை. இல்லாவிட்டால் நினைத்தவன் எல்லாம் இவர்கள் ஊரின் மீது படையெடுப்பார்களா? திரை வசூலிப்பார்களா? கொஞ்ச காலமாகவே அப்படித்தான். சில சமயம் சோழனின் ஆட்கள் வந்தார்கள். அவர்களை அடித்து விரட்டினார்கள் கோசர்கள்.
சோழர்களிலும், கோசர்களிலும் சேதம் அதிகம். இருந்தாலும் சோழன் பேரரசன். கோசர்களை அடக்கி விட்டான். அவர்களையே இங்கே பிரதிநிதி ஆக்கி திரை வசூலித்துத் தர கட்டளையிட்டான். இன்னொரு முறை பாண்டியன் தன் தளபதிகளை அனுப்பினான். சோழர்களை அடித்துத் துரத்தி தன் கொடியை நாட்டினான். இங்கேயும் கோசர்கள் அவர்களுக்கு கப்பம் செலுத்த வேண்டியவர்கள் ஆனார்கள். மாறி, மாறி இந்த அரச பெருமக்கள் இங்கே படையனுப்பி இம்சைப்படுத்தக் காரணம் பெருவழி.
வஞ்சித்துறைமுகத்திலிருந்து கொற்கை துறைமுகம் வரை, காவேரிப் பூம்பட்டினம் நகரம் வரை ரோமபுரிநாட்டு வணிகர்கள் செல்லும் வழித்தடம் இதுவே. அங்கே மலைமலசர்களை வைத்துக் கொண்டு கோசர் என்ற ஓர் இனம் திரை வசூலிப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்.
இவர்கள் இருவரும் போதாதென்று இதோ இப்போது இன்னொருவன் முளைத்து விட்டான். அவன்தான் சேரன். சோழனுக்கும், பாண்டியனுக்கும் இங்கே படை அனுப்பக் காரணமுண்டு. ஏனென்றால் அவர்களுக்கு வரும் தண்டல், வரி, கிஸ்தி எல்லாம் இடையில் கோசர்கள் பறித்துக் கொள்வதன் கோபம். ஆனால் சேரனுக்கு இது வழித்தடமுமல்ல. கோசர்களால் தொந்தரவுமில்லை. ஆனாலும் ஏன் இப்படி இங்கே படை திரட்டி வருகிறான்?
அவன் கோபம் கோசர்களோ, கோவன்களோ அல்லர். பாண்டியர்கள். சோழர்கள். அவர்கள் செல்வம் கொழிக்கக் காரணம் கொங்கு மண். அங்கே புரளும் செல்வமும் செழிப்பும் அதைக் கைப்பற்றினாலே சோழனும், பாண்டியனும் நமக்கு கீழ்படிவார்கள் என்ற எண்ணம். அதன் வெளிப்பாடுதான் இந்த படையெடுப்பு. கோசர்கள் வசூலித்த தண்டத்தீர்வை எல்லாம் கோவன்குடிகளிடம் பதுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கிடங்காக கோட்டையாக, கோவனூர் இருக்கிறது என்ற எண்ணம். இனி இங்கிருப்பது சரியல்ல என்றுதான் அத்தனை பேரும் தம் ஜாகையை காலி செய்து விட்டு புறப்பட்டு விட்டார்கள்.
அவர்கள் மனிதர்கள் என்று சொல்லுவதற்கு நவீன ஆடைகள் அணிந்திருக்கவில்லை. தங்க நகைகள் பூட்டியிருக்கவில்லை. அதில் முத்து, பவளம், வைர, வைடூரிய கல்மணிகள் பதித்திருக்கவில்லை.
ஆண்கள் ஓர் ஒட்டுக் கோவணம் மட்டும் அணிந்திருந்தனர். அதுவும் பனை ஓலையின் கீற்றுகளில் கிடைக்கும் நார்ப் பொருளால் பின்னல்போட்ட ஆடையாக இருந்தது. ஒரு சிலரது தேகத்தை மான்தோலும், புலித்தோலும், நரித்தோலும் மறைத்தது. பெண்களும் ஏறத்தாழ அப்படித்தான்.
இடுப்பில் அரைஞாண் போல் நார்கயிறு கட்டி, அதில் இந்த மரவுரி ஆடையை சுற்றியிருந்தனர். மேல்பகுதி அப்பட்டமாக திறந்து கிடந்தது. சிலரது கழுத்தில் ஆபரணமாய் நரிப்பல்லு, புலிப்பல்லு, சிறுத்தைப் பல்லு என தொங்கவிட்டிருந்தனர். உற்றுப் பார்த்தால் அந்த மங்கைகள் தொங்க விட்டிருக்கும் அந்த மணிகள் எல்லாம் கஜமுடி, வேங்கை முடி, கரடி முடி, நரிமுடிகள் கொண்டு உருவான கயிற்றில் கோர்க்கப்பட்டிருந்தது தெரிந்தது.
அப்படி வரும் பெண்கள் ஒவ்வொருத்தியின் கைகளிலும் பெரும்பாலும் ஒரு கைக்குழந்தை இருந்தது. அவை ஒவ்வொன்றும் அவளின் இடது மார்பையோ, வலது மார்பையோ பற்றி சப்பிக் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல, அவர்களின் கையிழுப்பில் சிறுவனோ சிறுமியோ இருந்தார்கள். அவர்கள் சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தத்துப் பித்து என்று நடந்தார்கள்.
கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள், கட்டிளம் காளைகளான இளைஞர்கள், வயதாளிகள் என பாரபட்சமின்றி ஒவ்வொருவர் கைகளிலும் ஏதாவது ஒரு மூட்டை இருந்தது. கரிபடிந்த மண்பானைகள், தூசி படிந்த மரப்பெட்டிகள், பனை ஓலைகளால் வெய்த தூக்குப் பைகள். அவற்றில் எல்லாம் மூங்கில் அரிசி, ராகி, சாமை, கம்பு, அவரை போன்ற சில தவச தானியங்கள் அடைத்துக் கிடந்தன.
அதில் கெக் கெக் என்று சத்தமிட்டு கோழிகளும் சேவல்களும் இருந்தன. ஆண்கள், பெண்கள் எவர்க்கும் ஒட்டியாணமாய் வயிறு. கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும் கூட வயிற்றில் ஒரு புடைப்பு தெரிந்ததே ஒழிய மானமாய் ஊதிய வயிறு இருக்கவில்லை. ஒவ்வொருவர் உடம்பும் சேகேறிய, வஜ்ரம் பாய்ந்த கருங்காலி மரம்போல காணப்பட்டது.
அந்த உடம்புகளில் தழும்பில்லாத இடமே இல்லை. எல்லாமே வீரத்தழும்பு. எதிரிக்குழுவுடன் போரிட்டு தன் இருப்பிடத்தை காக்க வேண்டும். விஷ ஜந்துக்களை அடித்துக் கொன்று தன் இருப்பை உறுதி செய்ய வேண்டும். காட்டு விலங்குகள் யானை, சிறுத்தை, புலி, கரடி போன்றவற்றிடமிருந்து போராடி தன் மனைவி மக்களைக் காக்க வேண்டும். இத்தனைக்கும் அவனிடம் இருப்பதெல்லாம் கருங்காலி, வேங்கை, வேம்பு, புளி, ஆல் போன்ற மரங்களினால் செய்யப்பட்ட ஆயுதங்கள். கல் ஆயுதங்கள் மற்றும் சுட்டமண் வேல்கம்புகள். இதை வைத்து போராடும் வாழ்க்கை தன் உடம்பில் ஆயிரமாயிரம் வீரத்தழும்புகள் பெற்றதில் வியப்பென்ன?
இவர்களுக்கெல்லாம் நடுநாயகம் போல் செல்லும் யானை அம்பாரி ஒன்றில் கோணன் இருந்தான். அவன் புஜங்கள் மற்றவர்களை விட புடைத்திருந்தன. அவன் தலையில் சேவல்கோழி, மயிலிறகு உள்ளிட்ட பல்வேறு பறவைகளின் சிறகுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு சித்திர வேலைப்பாடு கொண்ட கிரீடம் இருந்தது. அதேபோல் அவனுடன் ஒட்டி அமர்ந்திருந்த அவன் மனைவி கோணியும் ஒரு கிரீடம் சூட்டியிருந்தாள்.
இருந்தாலும் கோணன் கிரீடம் அளவு கோணியின் கிரீடம் இல்லை. அவர்களுக்கு பின்னே ஒரு யானை அம்பாரியில் இரண்டு பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். இளமை பொங்கும் பூரிப்பு. இருவர்க்கும் பால்குடங்களாய் தளும்பும் மார்பில் தவழுகிறது முத்து மாலை. கோணன்-கோணி தம்பதிகளுக்கு பிறந்த கோணி, முத்தா. இருவருமே கோணன் நாட்டு இளவரசிகள்.
கதைப்போம்…

THE KOVAI HERALD Ph. 9244319559

scroll to top