வே.ரோகிணி:
ரோமாபுரி அரச லட்சிணை தாங்கிய மோதிரத்திற்கு இவ்வளவு மரியாதையா? வந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்று வரிசையாய்ப் போடப்பட்டிருந்த கல் திண்டில் அமர வைத் தார்கள் முதிய தம்பதிகள் இருவரும். தண்ணீர், பழரசம் கொடுத்து உபசரித்தார்கள்.
இப்படி தன் நாட்டிற்கு வருபவர்களை உபசரிக்க வேண்டும் என்பது ராஜஉத்திரவு. இவர்கள் இப்படி பணி செய்ய ராசாக்கள் பூமி மான்யம் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த பழைய கற்கட் டிடத்தின் இடிபாடுகளுக்குப் பின்னே இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து ஏலமும், கிராம்பும் கலந்த மசாலா வாசனைத் தூக்கலாக இருந்தது. அந்த மணம் அப்போதே இலைவிரித்து தண்ணீர் தெளித்து சாப்பிட வேண்டும் போன்ற உணர்வைத் தூண்டியது.
இவர்கள் பழரசம் அருந்தியதும், இடிபாடுக ளுக்குள்ளிருந்து பெண் ஒருத்தி வந்தாள். நடுத்தர வயது. குறு,குறுப்பான பார்வையுடன் இருந் தாள்.
‘என்ன சாப்பிடுகிறீர்கள். ‘கூழ், கஞ்சி, கேப்பைக் கழி.. சோளச்சோறு..!’’
அவர்கள் ஒருவருக் கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘இல்லையே. உள்ளே மசாலா மணம் தூக்கலாக வந்ததே..!’’
‘‘கேப்பைக்கழி ரக்கிரிக் குழம்பு!’ என்று இனிக்கு்ம் குரலில் தமிழ் வார்த்தைகள் வந்து விழுந்தது. கேட்ட நடுத்தர வயதுப் பெண் மட்டுமல்ல, மூதாட்டியும், கிழவனும் கூட ஆச்சர்யப்பட்டார்கள். வந்த பெண்களில் ஒருத்தி மட்டும் அழகாக தமிழ் பேசினாள்.
அதன் பிறகுதான் தெரிந் தது மற்ற மூவரும் ஒரு வருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. பாஷை புரியாமல் இவளையே பார்த்திருக்கின்றனர் அவர்களிடம் இவள் அராபிய மொழியில் பதில் சொன்னாள். அவர்களும் ஏதோ பேசிக் கொண்டு தலையாட்டினார்கள்.
இதுபோல ரோமானிய புரியிலிருந்தும், அராபியத் துறையிலிருந் தும் யாத்திரிகர்கள். வணிகர்கள் இந்தப் பாதையில் வருவது அதிகம்.
அதனால் கிழவனும் கிழவியும் மட்டுமல்ல, சத்திரத்தில் உள்ள இவர்கள் மகளும், மருமகனும், பேரன், பேத்திகளும் கூட கொஞ்சம் ரோமானிய, அராபிய மொழிகளை அறிந்தே இருந்தார்கள் பேச வராதே ஒழிய சட்டென்று புரிந்து விடும். இப்போது தமிழ் பேசும், அதுவும் அரபுநாட்டிலிருந்து ஒரு பெண் வந்திருக்கிறாள் என்றால் விட்டு விட முடியுமா?
‘‘உங்களுக்கு எந்த ஊரு?’’
‘‘துர்க்கி தெரியுமா? துர்க்கிஸ்தான்…!’’
‘‘இங்கே வர்றவங்க சொல்லிக் கேட்டிருக் கேன்…!’’ இது கிழவி.
‘‘அதுக்குப் பக்கத்துல யூதேயா ஏரோது அரசன் அறிவீர்களா? அங்கே பெத்தலகேம்ன்னு ஒரு ஊரு இருக்கு. அதைச் சொன்னா புரியுமா?’’
‘‘தெரியலையே!’’ என உதடு பிதுக்கினாள் மூதாட்டி,
‘‘ஏய் உனக்குத் தெரியுமா?’’ கிழவனைப் பார்த்துக் கேட்டாள்.
கொஞ்சம் யோசித்த பின் சொன்னான்:
‘‘பொறந்த குழந்தைகளை எல்லாம் கொல்லச் சொல்லி ஒரு ராஜா உத்திரவு போட்டாரே, அந்த ஊருதானே சாமீ?’’
தமிழில் பேசிய பெண் சட்டென்று ஆச்சர்யப்பட்டாள். அவள் ஆச்சர்யப்படுவதைப் பார்த்து மற்ற மூவரும் என்ன என்பது போல் அவளைப் பார்த்தனர். அவள் அவர்களிடம் இவன் சொன்னதை அரபி மொழியில் பெயர்த்தாள். அவர்களும் இப்போது கிழவனை ஆச்சர்யம் மாறாமல் வியந்து பார்த் தனர்.
‘‘உனக்கு அது எப்படித் தெரியும்?’’ தமிழ் பேசிய பெண் வெடுக்கென்று கேட்டாள். கிழவன் அசரவில்லை.
‘‘இதுல என்ன ஆச்சர்யம் இருக்குங்க அம்மணி. போன திவசம் பத்துப் பேர் நாவாய்ல வந்தாங்க. அவங்க இந்த வழியாத்தான் போனாங்க. அவங்க ஒரு ராத்திரி முழுக்க நம்ம சத்திரத்துலதான் தங்கினாங்க. அவங்கதான் பேசிட்டாங்க. அவங்க நாடு யூதேதயா. அங்கே ஏரோதுன்னு ஒரு ராஜா பாடாப்படுத்தறான்னு பேசிகிட்டாங்க. ஆமாம் அங்கே ஒரு வால் நட்சத்திரம் தெரிஞ்சுதாமே? அது அந்த அரசனுக்கு ஆகாதுதானே?’’
என்று கிழவன் நீட்டி முழக்க, தமிழ்ப் பேசின பெண் புருவத்தை உயர்த்தி ஆச்சர்த்தின் உச்சத்திற்கே சென்றாள். இவன் கூறுவதை அவள் என்ன மொழிபெயர்த்துக் கூறப்போகிறாள் என்பதையே எதிர்பார்த்து இவளையே நோக்கியவாறு இருந்தனர் மற்ற மூவரும்.
‘‘என்ன பெரியவரே. எங்க நாட்டுல நடந்த சரித்திரம் பூராவும் சொல்லுவே போலயிருக்கே!’’ என்று அப்பெண் வினவியதும் முதியவனின் மகிழ்ச்சி எல்லை கடந்தது.
‘‘ப்பூ இதென்னங்க அம்மணி. இன்னமும் சொல்லுவேன். அந்த வால்நட்சத்திரம் வச்சு அரசாங்க சாஸ்திரக் கார ஜோசியன் கணிச் சிருக்கான். அரசனை அழிக்க வல்ல தேவக்குழந்தை ஒண்ணு பொறந்துடுச்சு. அது அரசனையே அழிக்கப்போகுதுன்னு தெரிஞ்சுகிட்டான். அதனால ஊர்ல பொறந்த குழந்தைகளை எல்லாம் கொல்லச் சொல்லி உத்திரவு போட்டுட்டான் ராஜா. அதுலயும் 2 வயது வரைக்கும் உள்ள குழந்தைக ஒண்ணு கூட இருக்கக்கூடாது. அப்படி தலைசீவிக் கொண்டு வர்ற ஒவ்வொரு தலைக்கும் பத்துப் பொற்காசுன்னு சொல்லியிருக்கான் ராசா. இப்படியும் ஒரு கொடுங்கோலன் இருப் பானா?ன்னு ராசாவைத் திட்டறதை விட அவனோட படைவீரர்களைத் திட்டணும். பொற்காசுக்கு ஆசைப்பட்டு ஒரு படைவீரன்க ஒருத்தன் கூட சும்மாயிருக்கலை. நாட்டுக்குள்ளே மட்டுமில்ல, மலைங்காட்டுல, குகைக்குள்ளே எல்லாம் புகுந்து கிடைச்ச குழந்தை களை எல்லாம் வெட்டி தலையெடுத்துட்டு வந்துட்டாங்க. அதுல குழந்தையிருக்கிற தாய்மார்க, குழந்தைப் பெத்துக்கப் போற புள்ளைத்தாச்சிக நிறைய பேர் நாட்டை விட்டே ஓடிட்டாங்க.’’ என்று கிழவன் சொல்ல சொல்ல அந்தப் பெண் வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போது தன் ஆலா பனையை நிறுத்திய கிழவன், ‘‘அந்த நாடுதானே நீங்க டே்டது. நீங்களும் அப்படி நாட்டை விட்டு ஓடி வந்துட்டீங்களா? அப்படின்னா பொறந்த குழந்தை எங்கே? இல்லே, உங்கள்ல யாரு புள்ளைத்தாச்சி?’’ கிழவன் கேட்டபடி தன்னுடன் பேசிய பெண்ணின் வயிற்றை மட்டுமல்ல, உடன் அமர்ந்திருந்த இன்னொரு பெண்ணின் வயிற்றையும் ஊடுருவிப் பார்த்தான்
அவர்கள் அணிந்திருந்த பட்டாடை அங்கி, அவர்கள் வயிற்றின் தன்மையை சுத்தமாக மறைத்தது. அவன் தடுமாறுவதைப் பார்த்து தமிழ் தெரிந்த பெண் சிரித்தாள். அவள் ஏன் சிரிக்கிறாள் என்று புரியாமல் அடுத்த பெண் பார்த்தாள். குதிரை வீரன்களும் கூட அதே கண்ணோட்டத்தில்தான் அவளைப் பார்த்தனர். .
தமிழ் பேசிய அந்த அரபிப் பெண் மற்றவர்களுக்கு கிழவன் சொன்னதை அரபி மொழியில் விளக்கினாள். இப்போது நால்வருமே இணைந்து சிரித்தார்கள். இன்னொரு பெண்ணுக்கு முகம் சிவந்தது. வெட்கப்படுகிறாள். தன் வயிற்றைத் தடவிக் கொண்டாள்.
அவள் வயிறு சற்றே மேடிட்டிருந்தது அவள் அணிந்திருந்த துணியை தடவி உடலோடு ஒட்டி உரசியபோதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது.குதிரை வீரர்கள் இருவருக்கும், ‘அடேயப்பா, இந்தக் கிழவனுக்குத்தான் எத்தனை விஷயங்கள் தெரிந்து உள்ளது. நம்ம ரகசியத்தை இவன் கிட்டத்தான் சொல்ல வேண்டும்!’ என்று முடிவெடுத்தார்கள். அது என்ன ரகசியம்?
கதைப்போம்.
KAMALAKANNAN.S THE KOVAI HERALD Ph. 9244319559