கோயமுத்தூரின் கதை: 15. ஸ்காந்தபுரம் வந்த ரோமானிய மோதிரங்கள்

Pi7compressedkovai15.jpg

வே.ரோகிணி

அடர்ந்த வானந்திர இருள். பகல்நேரம் தான். ஆனால் சூரிய வெளிச்சத்தின் சிறுகீற்று கூட நிலத்தில் விழவில்லை.அந்த அளவுக்கு பத்து காத தூரமும் மரங்கள் அரண் அமைத்திருந்தது. அதை விட அங்கே நிலவிய  குளிர்ச்சி. நானாவித பறவைகளின் நாதம். பூச்சிகளின் கீச் கீச் ஒலி. அது எப்படியான பேரமைதி நிலவும் காடு என்பதை உணர்த்தியது.கல்லும் மண்ணும் மேவிய சற்றே உயரமான பாதை. குன்றிருக்கும் இடமெல்லாம் ஏறி, பாதாளத்தில் கீழிறங்கி மேலும், கீழுமாக செல்லும் பெரும்பாதை. பெருவழிப்பாதை. அதன் இருபுறத்தின் தொலைதூரத்திலும் ஆள் அரவம் இல்லை. இரண்டுக்கும் இடையே ஒரு மண்ணும், கல்லும் நிறைந்த சுவருடன் ஒரு கட்டிடம் மட்டுமே இருந்தது.அதன் முன் மேவிய கற்குவியல் திண்டில் ஒரு மூதாட்டி இருந்தாள். கூடவே துணைக்கு ஒரு கிழவன். அது ஓர் அன்னச்சத்திரம். பாங்காட்டுக்குள் இப்படி யொரு சத்திரம் இருப்பது நாட்டுவாசிகளுக்குத் தெரிகிறதோ இல் லையோ, இப்பெருவழி பயணிக்கும் யாத்திரி கர்களுக்கும், வணிகர்க ளுக்கும் அத்துபடி.  இதன் காப்பாளர்களான இந்த மூதாட்டிக்கும், கிழவனுக்கும் இங்கே ஆட்கள் வராவிட்டால் கண்கள் வெளிறிப்போகும். மனம் ஏங்கிக் கிடக்கும்.  இன்றும் அப்படித்தான் இருந்தார்கள். இரண்டு நாட்களாக ஒற்றை ஆள் சத்திரத்திற்கு வரக்காணோம். சீமையில் ஏதும் சண்டை நடக்கிறதோ,. வரும் வழியில் வழிப்பறிக் கொள்ளையர் அதிகமோ? கடற்கொள்ளையர்களிடம் பாய்மரங்கள் அகப்பட்டு விட்டதோ என்றெல்லாம் எண்ணினார்கள்.அவர்களின் ஆதங்கத்திற்கு தீனி போடும் விதமாக தென்திசையிலிருந்து குழம்போசை. நிச்சயம் அது குதிரைகளின் குழம்பொலிதான். மெல்லியதாக கேட்கும் அடி ஓசையிலிருந்து அது ஒன்றல்ல, இரண்டு என யூகித்து விட்டாள் மூதாட்டி.உடனே இடிபாடுகளுடன் கூடிய கட்டிடத்தின் வெளியே கூன் விழுந்த முதுகு அப்படியும் இப்படியும் ஆட, ஓட்டமாய் ஓடி வந்து கண்ணுக்கு கை வைத்துப் பார்த்தாள். அவள் பின்னாடியே கிழவனும் வந்தான். பார்த்தான்.‘‘அவங்க ரெண்டு பேர்!’’ என்றாள் மூதாட்டி.‘‘இல்லை நான்கு பேர்!’’ என்றான் கிழவன்.‘‘நான் சொல்லுவதுதான் சரி!’’ என்றாள் மூதாட்டி.‘பந்தயம்!’’கிழவனும் விடவில்லை.‘‘பந்தயம்!’’ என்றான்.தென்திசை பெருங்குன் றின் குன்றின் திருப்பம். அதையொட்டி இரண்டு குதிரைகள்..பாய்ச்சலில் மேடேறிக் கொண்டிருக்கின்றன. அதன் காலடியில் சரளைக்கற்களும், ஓடைக்கற்களும் இடம் பெயர்கின்றன. மேடேறும்போது அவற்றின் நடையில் தள்ளாட்டம். வேகம் குறைவு. ஒவ்வொரு குதிரை மீதும் ஒவ்வொரு உருவம். ‘‘நான் சொன்னதுதான் சரியாச்சு பார்த்தியா?’’ என்றாள் கிழவி.கிழவன் அங்கேயே பார்த்தபடி, ‘‘கொஞ்சம் பொறு!’’ என்றான்.குதிரைகள் இங்கே நெருங்கி விட்டன. புரவிகளில் அமர்ந்திருந்தவர்களின் நீளமான வெள்ளை அங்கி அலையாடியது. கருப்புப் புள்ளியிட்ட குல்லாவின் மீதிருந்த கொங்காடை கழுத்திற்கு கீழ் வரை சுருண்டிருந்தது. அதன் மீது வெள்ளைத்துணி கவ்விய தலைப்பாகை. அதை துல்லியமாக அராபிய ஆடை என்று சொல்லி விட முடியாது. அராபிய ஆடை அல்ல என்று ஒதுக்கி விட முடியாது. நெடு, வெடு உயரத்திலிருந்தார்கள். நிச்சயம் வணிகர்களா கத்தான் இருக்க வேண்டும். இந்த சத்திரத்தை நெருங்கியதும் குதிரைகள் நின்றன. இவர்கள் இருவரையும் பார்த்தபடி சேனத்தை இழுத்துப் பிடித்தனர் புரவிக்காரர்கள். செம்மி நிறத்தில் கரிய முடி பிடறியுடன் கூடியது ஒரு புரவி. இன்னொன்று தூய வெண்ணிறம். பிடறி முடி பொன் வண்ணத்தில் மினுங்கியது. அதன் மீதிருந்தவர்கள் உடனே இறங்கவில்லை. இருவரும் ஒன்று சொன்னது போல் தன் வலது கையை பின்பக்கமாக வளைத்தார்கள். அங்கே இவர்களை அட்டையாய் ஒட்டி அமர்ந்திருந்த ஓர் உருவத்தை பிரித்துக் கீழிறக்கினார்கள். அதன்பிறகுதான் தெரிந்தது. குதிரை மீது வந்த இருவருமே தன் பின்னால் ஒருவரை அமர்த்தி தன்னோடு பிணைத்து வந்திருக்கிறார்கள் என்பது. ‘நான் சொன்னது சரியாயி டுச்சு பார்த்தியா?’’ கிழவன் மூதாட்டியை நோக்கி இளித்தான். அவன் இளிப்பு விகாரமாக இருந்தது. கடைவாயிலிருந்து முன்புறம் வரை மருந்துக்குக்கூட பற்கள் இல்லை. கோணிய உதடுகள். சுருக்கம் விழுந்த தாடைகள். பிறகு எப்படியிருக்கும்? மூதாட்டிக்கு தான் தோற்று விட்டோம் என்ற கடுப்பு, அதை சட்டென்று மடைமாற்றினாள்: ‘‘வரணும்.. வரணும்.. எங்க ராஜ்யத்திற்கு ராஜ்யம்தாண்டி வரும் சக்கரவர்த்திகள் வர வேணும்.   கோடானு கோடி, கோடியாத்த நல்ல பிரபுக்கள் நலமே வாழி, வாழிய வாழி, வாழியவே. ரட்டர் குல ராச்சியம். ராசாதி ராசா. எங்கள் ஸ்ரீ ஸ்ரீ வீரராய சக்ரவர்த்தி மகாராசா வம்ச குலந்தோன்றி, அரசாட்சியாளும் ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தராய மகாராசா நாட்டு சத்திரபுத்திர சந்திர சூரிய நாட்டிற்கு வரவேணும்… வரவேணும் ராசாவே. .ராசாவே.. ராசாவே வரவேணும்!’’ நீட்டி முழக்கி கிழவி அந்தப் பாட்டைப் பாடினாள்.கிழவனுக்கு வேறு வழியில்லை. அவள் பாடியதையே அடியொற்றி பின்பாட்டு பாடினான்.குதிரைகளிலிருந்து கீழிறங்கிய இருவர் மட்டுமல்ல, அதன் மீது அமர்ந்திருந்த நெடித்த உருவத்தை உடையவர்களும் அந்த முதியவர்கள் பாடிய பாட்டையும், அவர்கள் நெளிந்து குழைந்த அழகையும் ரசித்தனர்.சத்திரத்திற்கு வரும் வழிப்போக்கர்களானா லும், யாத்திரீகர்கள்யானாலும், ஆண்டியானாலும், அரசனா னாலும் இப்படித்தான் வரவேற்க வேண்டும் என்று ஸ்காந்தபுரத்து பட்டத்து ராஜா ஸ்ரீ கோவிந்தராய ராசாவின் உத்திரவு. அப்படி செய்யாவிட்டால் சத்திரக்காப்பாளர்கள் பாதாளச்சிறையில்தான் இருக்க வேண்டும். சில சமயம் சிரச்சேதம் கூட நடக்கலாம்.ராஜா சேவர்களுக்குத் தரும் மரியாதையை விட கடலோடி, கப்பலோடி வரும் வணிகர்களுக்கு ஏகோபித்த மரியாதை செய்தாக வேண்டும். அவர்கள் கொண்டு வரும் பொன்னும், மணியும் நம் கஜானாக்களை நிறைக்க இந்த மரியாதையே மூலதனமாய் நிற்க வேண்டும். அரசாட்சியில் தெளிவாகத்தான் இருந்தான் மன்னன். பின்னாலிருந்து இறங்கிய வர்கள் முழுக்க, முழுக்க கருப்பு அங்கி அணிந்திருந்தனர். அவர்கள் கண்கள் மட்டுமே தெரிந்தது. கிழவன், கிழவி பாடும் மரியாதைப் பாடல் கேட்டதும் அவ்விருவரும் தன் முகத்திரை விளக்கினர். அட, இரண்டு பெண்கள். அதுவும் இரட்டை முழு நிலாக்கள் போன்ற முகங்கள். யாத்திரிகர்கள், வணிகர்கள் பொதுவாக நாடு விட்டு நாடு பெண்களை அழைத்து வருவது வழக்கம். அதிலும் மேல்நாட்டு வணிகர்கள் அவ்வளவு சுலபமாய் அப்படி வந்து விட மாட்டார்கள். எனவே அவர்களை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். புரவி செலுத்தி வந்தவர்கள் கீழே குதித்தனர். தன் இடுப்புப் பகுதியில் அங்கிக்குள் கைவிட்டு எதையோ எடுத்தார்கள். இருவர் கையிலும் முத்திரை மோதிரங்கள். ரோமானிய அரச கட்டளை. அதைப் பார்த்ததும் எண்சாணாகக் கிழவனும் கிழவியும் உடலைக்குறுக்கி வணங்கினார்கள்.

கதைப்போம்.

THE KOVAI HERALD Ph. 9244319559 

scroll to top