கோப்பையை வென்றது இந்தியா

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரை 2-0 என கைப்பற்றியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித், இஷான் கிஷான் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். பெர்குசன் வீசிய 6வது ஓவரில் இஷான் ஒரு பவுண்டரி, ரோகித் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச மொத்தம் 20 ரன்கள் எடுக்கப்பட்டன. ‘பவர்பிளே'(முதல் 6 ஓவர்) முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தது. போட்டியின் 7வது ஓவரை வீசிய கேப்டன் சான்ட்னர் சத்தமில்லாமல் திருப்பம் ஏற்படுத்தினார். இரண்டாவது பந்தில் இஷானை(29) வெளியேற்றினார். கடைசி பந்தில் சூர்யகுமாரை(0) பெவிலியனுக்கு அனுப்பினார். இந்த ஓவரில் 2 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி, இந்தியாவுக்கு ‘செக்’ வைத்தார்.

மீண்டும் ‘சுழலில்’ மிரட்டிய சான்ட்னர் ரிஷாப்(4) விக்கெட்டையும் வீழ்த்தினார். அரைசதம் கடந்த ரோகித் சர்மாவை(56) சோதித்தார் சோதி. இவரது பந்தை ரோகித் இறங்கி வந்து நேராக அடிக்க, அதை அப்படியே ஒற்றை கையில் பிடித்து அசத்தினார் சோதி. இதையடுத்து இந்திய அணி 12 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பின் ஸ்ரேயாஸ்(25), வெங்கடேஷ்(20) சேர்ந்து அணியை மீட்டனர். கடைசி கட்டத்தில் ‘டெயிலெண்டர்கள்’ கலக்கினர். ஹர்ஷல் படேல்(18), தீபக் சகார்(21*) விரைவாக ரன் சேர்த்து கைகொடுத்தனர். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் குவித்தது.

பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே தடுமாறியது. அக்சர் படேல் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் பட்டையை கிளப்பினர். மிட்சல்(5), சாப்மேன்(0), பிலிப்ஸ்(0) விரைவில் வெளியேறினர். தனிநபராக போராடிய கப்டில் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவர் 51 ரன்னுக்கு சகால் ‘சுழலில்’ வீழ்ந்தார். நியூசிலாந்து அணி 17.2 ஓவரில் 111 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’ தோல்வி அடைந்தது.மூன்று விக்கெட் வீழ்த்தி அக்சர் படேல், ஆட்டநாயகன் விருதை வென்றார். கேப்டனாக தனது முதல் தொடரிலேயே முத்திரை பதித்த ரோகித் சர்மா, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

scroll to top