மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத் திருநாள் முதல்நாளன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவனியாபுரத்தில் கடந்த 6 ம் தேதி மதுரை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது.
இதற்காக, அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், பந்தக்கால் நடப்பட்டு, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வரும் காளைகள் வரிசையாக நின்று வருவதற்காக சவுக்கு கம்புகள் நடப்பட்டது. தொடர்ந்து வாடி வாசல் அமைக்கும் பணி நடைபெற இருந்த சூழலில் திடீரென்று சாலையில் நடைபெற்றுக்கொண்டிருந்த பணிகளை கொரான பரவல் காரணமாக வழிகாட்டும் விதிமுறைகளுக்காக நிறுத்த சொல்லி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தினர்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை உள் வேலைகளான வீரர்களுக்கு கொரோனா சோதனை செய்யும் இடம், ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனைஇடம் போன்ற வேலைகளை மட்டும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால், சாலையில் நடப்பட்ட சவுக்கு கம்புகளை அப்புறபடுத்தினர்.
இதனை அடுத்து, கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ள நிலையில் இன்று காலை அவனியாபுரத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் மீண்டும் மிக விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதனால், கிராம பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் என அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.