கொத்துக் கொத்தாய் சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள்

north1.webp

கொரானா காலத்தில் ஊருக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் திரும்ப வருவதற்குள்ளேயே வேலைக்கு ஆள் கிடைக்காமல் தமிழக தொழில் முனைவோர் படாதபாடுபட்டுப் போனார்கள். இப்போது தமிழக வடமாநிலத் தொழிலாளர் மோதல் வாட்ஸ் அப் மற்றும் வலைத்தளங்களில் மிகுதியாக பரவுவதால் கொத்துக் கொத்தாக வடமாநிலத்தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருப்பதாக வரும் செய்தி தொழில் முனைவோருக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.  இதுவரை 40 ஆயிரம் தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்குச் சென்று விட்டதாகவும், அதன் நிமித்தம் பீகார் சட்டசபை அமளி துமளிப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் தமிழக, பீகார் போலீஸாரும் விசாரணையில் இறங்கி, வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ அத்தனையும் போலி; நம்ப வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.

சில வாரங்கள் முன்பு திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் வேலை தமிழனுக்கே என்ற கோஷம் அதன் பின்னே முன் வைக்கப்பட்டது. அதன் சுவடு மறைவதற்குள்ளாக சென்னையில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில்பரவின.   அந்த 2 வீடியோக்களும் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கமளித்தார். 

இது தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓடும் ரயிலில் வட மாநில தொழிலாளியை ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து உடனடியாக வட மாநில தொழிலாளியை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து காவல்துறை கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தமிழகத்தில் பணி புரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் பல சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது.

இது குறிப்பாக வட மாநிலங்களில் வேகமாக பரவியது. வட மாநிலத்தவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்து இருந்தது. அதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இது தொடர்பாக தனது ட்விட் பதிவில் கவலை தெரிவித்து இருந்தார். நிதிஷ் குமார் தனது ட்விட் பதிவில், “தென் மாநிலத்திற்கு வாழ்வாதாரத்தை தேடி வரும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழக அதிகாரிகளுடன் பேசி உறுதி செய்யுமாறு பீகார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்தே தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ‘‘பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல அந்த வீடியோக்கள் காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்த இரு வீடியோக்களில் ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டதுடன் தொடர்புடையது ஆகும். இன்னொன்று கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக் கொண்ட வீடியோ ஆகும். இதுதான் உண்மை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் பீகார் சட்டசபையில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ‘திட்டமிட்டு சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம்!’ என்று அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கமளித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே வடமாநில தொழிலாளர்கள் தென்மாநிலங்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு வருவது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஊதியம் அதிகம், பெரும்பாலும் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்தே தொழிலாளர்கள் தமிழ்நாடு வருகிறார்கள். தினசரி வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களைப் பார்த்தாலே நமக்கு இது புரியும்.

இப்படி மட்டும் இதுவரை தமிழகத்தில் பனியன், நூற்பாலை, எஸ்டேட், ஹோட்டல், மளிகைக்கடைகள், துணிக்கடைகளில் 5 லட்சம் பேருக்கு மேல் வடமாநிலத்தொழிலாளர்கள் தமிழகத்தில் இருப்பதாக வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் ஆட்கள் இந்த வீடியோக்கள் மூலமாக தன் சொந்த ஊருக்கே திரும்பி விட்டதாகத் தெரிவிக்கிறார்!’ வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவரான விக்கிரமராஜா.

‘‘தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தராமல் இவர்களுக்கு நாங்கள் வேலையளிப்பதாக தொடர்ந்து புகார் கூறுகின்றனர். அதில் துளியும் உண்மையில்லை. இங்குள்ள இளைஞர்கள் உடல் உழைப்பு தருவதற்குத் தயாராக இல்லை. அப்படியே தயாராக சிலர் வந்தாலும், அவர்களை வைத்து மட்டும் இத்தனை வேலைகளை செய்ய முடியாது என்பதால்தான் இவர்களை முழுமையாகப் பயன்படுத்துகிறோம். இந்த வடமாநிலத்தொழிலாளர்களிடம் பல்வேறு வாட்ஸ் அப் குரூப்கள் உண்டு. அதில் தங்களுக்கு ஒன்று ஓர் ஊரில் நடந்தால் அதை அப்படியே படம் எடுத்து அடுத்தடுத்த குரூப்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். அதைப் பார்த்தே இங்கே நமக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொந்த ஊருக்கு பயணமாகி விடுகிறார்கள். இப்படி இவர்கள் வெளியேறுவதன் மூலம் தமிழகத்தின் வியாபாரத்தலங்கள் மட்டுமல்ல, தொழிலே ஸ்தம்பித்து விடும்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பீகார் சட்டசபையில் அங்குள்ள பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்ட வேளையில்   புலம்பெய்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த சம்பவங்கள் குறித்து விசாரிக்கத் தனியாக ஒரு குழுவைத் தமிழ்நாடு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சில பாஜக எம்எல்ஏக்கள் நாற்காலிகள் மீதும் ஏறி நின்று கோஷம் போட்டனர். இதையடுத்து அவர்கள் வெளிநடப்பும் செய்தனர்.

அப்போது சட்டசபையில் இருந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இது குறித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி பீகாரில் இருக்கும் சிலர் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகத் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் முற்றிலும் பொய்யான ஒன்று. இந்த விவகாரத்தில் இரண்டு வீடியோக்களை பரப்புகின்றனர். இரண்டுமே பொய்யான வீடியோக்கள்.. புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பொய்யான கட்டமைப்பை உருவாக்கவே இப்படியான வதந்திகளை பரவச் செய்துள்ளனர். போலியான வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை. அவர்கள் எதற்காக இப்படி தொடர்ச்சியாக பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டும். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஏதாவது நடந்தாலும் கூட எங்கள் அரசும், தமிழக அரசும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்

scroll to top