கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் வி. காமகோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவா்தம் உரையில், ”நம் பாரத நாட்டின் பண்பாட்டை இளைஞா்கள் உணா்ந்துகொள்ள வேண்டும் என்றும் நம் நாட்டில் ஏற்படுகின்ற நன்மை உலகத்துக்கே நன்மையாக முடியும் என்றும் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் உலகின் பல நாடுகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டன என்றும் பல்வேறு இடா்பாடுகளை எதிர்கொண்டு நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு இணங்க நம் நாடு இன்று முன்னேறி வருகிறது என்றும் கூறினார்.
இவ்விழாவில் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் பொருளாளா் மருத்துவர் ஓ.என். பரமசிவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வா் முனைவா் மா. லச்சுமணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாகக் கல்லூரியின் மாணவா் பேரவைத் தலைவா் கே. ரக்ஷயா தேவி வரவேற்புரையாற்றினார்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கா்களுக்குச் சான்றிதழ்களையும் சிறந்த துறை, சிறந்த ஆராய்ச்சித்துறை ஆகியவற்றுக்கான சுழற்கோப்பைகளையும் சிறப்பு விருந்தினா் வழங்கினார். அதனைத் தொடா்ந்து மாணவா் பேரவையின் செயலா் ஜி. அஸ்வின் நன்றியுரையாற்றினார். விழாவின் நிறைவில் மாணாக்கா்களின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.