கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம், மயில்கல், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக ஏற்கனவே புகார் இருந்தது. இந்தநிலையில் குனியமுத்தூர் பி.கே புதூர் பகுதியில் உள்ள பழைய குடோனில் சிறுத்தை இருப்பதாக அப்பகுதியில் உள்ள குடோன் ஊழியர் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுத்தை இருந்த குடோனை மூடி சென்றனர். காவல்துறை மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித் துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். சிறுத்தையை பிடிப்பதற்காக குடோன் அருகே 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வலைவிரித்தும் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக்குமார் தலைமையில் சிறுத்தை வந்துள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதியில் சிறுத்தையை பிடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சிறுத்தையை கட்டுப்படுத்தி பிடிக்க ஊசி செலுத்தலாமா என்பது குறித்தும் மருத்துவ குழுவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் சிறுத்தையை பொறுமையாக காத்திருந்து பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சிறுத்தை தானாக கூண்டில் சிக்கும் வரை காத்திருக்கிறோம் என்று வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.