குழாய் மூலம் கேஸ் இணைப்பு, உணவு பூங்காக்கள்: தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்

TelanganaIndustrailPolicy.png

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், தமிழகம் உற்பத்தி சூழல் அமைப்பில் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித் துறையில் சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடியில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு (கியாஸ்) வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் 2,785 விற்பனை நிலையங்கள் மூலம் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரம் தொழிற்சாலைகளின் மையமாக உருவாகி உள்ளதால் அங்கு புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது.

வழிகாட்டி நிறுவனம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தவிர்த்து, அனைத்து நிறுவனங்களின் முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்த்திடுவதற்கான முகமையாகும். மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள், இரசாயனங்கள், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், கனரக பொறியியல், தோல் பொருட்கள், ஆடைகள், நிதிச் சேவைகள், தகவல் தொழில் நுட்பம், தகவல் சேவைகள் போன்ற துறைகளிலும், தொழில் நுட்பம் சார்ந்த வகையில் தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்த, கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்களை அமைத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

2021-22-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.40 சதவீதம் ஆக உள்ளது. ஹீண்டாய், ப்யூஜோ, BMW, டெய்ம்லர், கேட்டர்பில்லர், அசோக் லேலண்ட், TVS, ரெனால்ட் நிஸ்ஸான், ஃபாக்ஸ்கான், டெல்டா, டெல், HP, சால்காம்ப், சியட், சாம்சங், மிச்செலின், MRF, கிரண்ட்ஃபோஸ், வெஸ்டாஸ், நார்டெக்ஸ், ஹிட்டாச்சி மற்றும் L&T போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள், தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. சமீபத்தில், ஓலா எலக்ட்ரிக், டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஃபர்ஸ்ட் சோலார் மற்றும் பெகாட்ரான் போன்ற புதிய நிறுவனங்களையும் தமிழ்நாடு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

scroll to top