குண்டுவெடிப்பு தினத்தில் பேருந்து நிலையம் அருகே கிடந்த மர்மபெட்டி

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் ஊனமடைந்தனர். இன்று கோவை குண்டுவெடிப்பு தினம் என்பதால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மாநகர பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தின் எதிரே கருப்பு நிறத்தில் மர்ம பெட்டி ஒன்று கிடப்பதாக அவ்வழியே சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் மேலும் இரண்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தியதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனிடையே வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பெட்டியை சோதித்து பார்த்ததில் அந்த பெட்டி காலியாக இருப்பது தெரியவந்தது.

scroll to top