குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

sp1.jpg

கோவை மாவட்டம் சுகுணாபுரம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர், எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் கிழக்கு, செந்தமிழ் நகர் மற்றும் பிள்ளையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 3500 -க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதையும் செந்தமிழ் நகர் தன்னாசியப்பன் கோவிலில் உள்ள பாறை மீது சிறுத்தை படுத்திருந்ததை பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்ததுடன் மக்கள் யாரும் அங்கு
செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கக் கூடிய நாய்களை அடித்து கொன்று வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் கடந்த 30ஆம் தேதி அதிகாலை அப்பகுதியில் உள்ள ஒருவர் வீட்டின் சுற்றுச்சுவர் கேட்டைத் தாண்டி உள்ளே சென்று வளர்ப்பு நாயை சிறுத்தை கடித்து குதறியது. இதை அங்குள்ளவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.
எனவே அந்த பகுதிகளில் சுற்றித் திரியக் கூடிய சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் கொண்டு விட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

scroll to top