நாட்டின் 73வது குடியரசு தினத்தினை முன்னிட்டு, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசிய கொடியேற்றி வைத்து
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 78 பயனாளிகளுக்கு 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 227 காவலர்களுக்கு தமிழக அரசின் பதக்கங்களையும், சிறப்பாக செயலாற்றிய பல்வேறு அரசு துறை ஊழியர்கள் 317 பேருக்கு சிறந்த பணிகளுக்கான பாராட்டு சான்றிதல்களையும் மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மரியாதையை அவர்களது வீடுகளுக்கே சென்று மாவட்ட ஆட்சியர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
விழாவில், தென்மண்டல காவல்துறை ஐஜி அன்பு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.