புதுடெல்லியில் வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் குடியரசு தினவிழா நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில் அணிவகுப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் படிக்கும் 3 மாணவர்கள் நாட்டு நலப் பணி திட்டத்தின் சார்பாக தேர்வாகி உள்ளனர்.
நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பி.கோபி கிருஷ்ணன், ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஆர்.அபர்ணா ஆகியோர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பிலும், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர் ஆர்.ராகுல், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பிலும், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 8-வது முறையாக நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று சாதனைப் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டு்ள்ள மாணவர்களை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர். அலமேலு மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன், முனைவர் கேசவசுவாமி, முனைவர் ஜெ.சுபாஷினி ஆகியோர் பங்கேற்றனர்.