குடியரசு தின அணிவகுப்புக்கான தென்னிந்திய முகாம்- ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தேர்வு

குடியரசு தின அணிவகுப்புக்கான தென்னிந்திய முகாமில் பங்கேற்க கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நாட்டின் குடியரசு தினவிழா வரும் 2022-ம் ஆண்டு, ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டின் தலைநகர் டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்க, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் எஸ். நவீன் சங்கர், ஐ. பவ்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இருவரும் இக்கல்லூரியில் பி.காம். பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இதேபோல் இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஏ. சுபாஷினி, தமிழகத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர்கள் 22.10.2021 முதல் 31.10.2021 வரை பெங்களூருவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான முந்தைய முகாமில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 14 பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

குடியரசு தின அணிவகுப்புக்கான தென்னிந்திய முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் டாக்டர் பி.எல்.சிவக்குமார், சக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் எஸ். பிரகதீஸ்வரன், ஆர். நாகராஜன், கீர்த்திவாசன் ஆகியோர் பாராட்டினர்.

scroll to top