கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம்

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு மற்றும்  30 சதவீத ஊக்க மதிப்பண் வழங்கத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

”கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ்., போன்ற முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30% ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த ஆண்டு (2021)அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1,968 இடங்கள் உள்ளன. அதில் 50% அரசு மருத்துவர் களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50% இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இ தனால் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது. எனவே இதில் ஏதாவது ஒன்றை மட்டும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், ”ஊக்க மதிப்பெண்ணைத் தகுதியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிவ தால்தான் பொதுமக்கள் பயன் அடைகின்றனர். எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டனர்.

இதைத்தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி,  கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுகலைப் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டு சலுகைகள் வழங்க எந்தத் தடையும் இல்லை எனக் கூறியதோடு,  பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்கவும் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

scroll to top