காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் முடக்கப்பட்டிருந்தது. மேலும், 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டனர். மாணவர்கள் முந்தைய வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள், வருகை பதிவேடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவ.,1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில், 10,11,12ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “நடப்பு கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வுகள் நடைபெறும். பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி, நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்,” என அவர் கூறினார்.

scroll to top