THE KOVAI HERALD :
அமோக வெற்றி வந்து பதவி வரும்போது பணிவும், பொறுப்புணர்வும் வரவேண்டும். எனவேதான் அறிஞர் அண்ணா திமுகவின் தாரக மந்திரமாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வார்த்தைகளை முன்மொழிந்தார்.
ஆனால் கோவை மாநகராட்சி உட்பட அத்தனை மாநகராட்சிகளையும், பெருவாரியான நகராட்சி, பேரூராட்சிகளையும் அள்ளி வெற்றி வாகை சூடிய திமுகவினர் அதிமுக வெற்றி பெற்ற சொற்ப தொகுதிகளிலும் கூட கண்ணியத்தை விட்டொழித்துள்ளது ரகளை, கலாட்டா, அடிதடி என இறங்கியதை கண்கூடாக கண்டிருக்கிறது தமிழகம்.
இது எதிர்கட்சிக்கு என்றில்லை, தம் கூட்டணிக் கட்சிக்கு, தம் கட்சி வேட்பாளருக்கு தலைமையால் ஒதுக்கப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பதவிகளைக்கூட ரகளையில் ஈடுபட்டு தனக்குத்தானே அபகரித்துள்ளனர் சில உடன்பிறப்புகள்.
இதன் உச்ச கட்டமாக முதல்வர் ஸ்டாலினே, ‘‘கடமை – கண்ணியம் – கட்டுபாடு”தான் கழகத்தவருக்கு அழகு! அதனை மீறி மறைமுகத் தேர்தலில் சாதித்துவிட்டதாகச் சிலர் நினைக்கலாம். அதற்காக குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமை உணர்வு எக்காலத்திலும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகப் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படு வார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்!’ என்று அறிவிக்கும் அளவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அப்படியென்னதான் நடந்தது? கோவை மாவட்டத்தில் நடந்த சில சாம்பிள் சம்பவங்கள்:
பரிதாபத்திற்குரிய மார்க்சிஸ்ட்டுகள்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.வினர் 12 பேரும், மார்க்சிஸ்ட் கட்சியினர் 2 பேரும், அ.தி.மு.க.வினர் 4 பேரும் வெற்றி பெற்றனர். இந்த பேரூராட்சி தலைவர் பதவி கூட்டணியில் மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கியது திமுக. அதன் வேட்பாளராக 8-வார்டு உறுப்பினர் சிவராஜன் அறிவிக்கப்பட்டார்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் திமுக, சிபிஎம் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.
ஆனால் பேரூராட்சி அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு தேர்தல் அதிகாரி ஜெசிமாவிடம் 6-வது வார்டு உறுப்பினர் விஷ்வபிரகாஷ் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்து பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் தம் கட்சிக்காரர்களுடன் வர, அவர்களுக்கு எதிராக திமுகவினர் கோஷமிட்டனர். அடிதடியும் ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் மூத்த தோழர் பாலமூர்த்தி என்பவர் கன்னத்தில் பளார் அறை விட்டார் உடன்பிறப்பு ஒருவர். இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் மார்க்சிஸ்ட் கட்சியினரை சூழ்ந்ததால், அங்கிருந்த போலீசார் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் மற்றும் கட்சி நிர்வாகிகளை அங்குள்ள ஒரு தனி அறையில் அடைத்து வைத்து இருந்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சிவராஜன் மற்றும் கட்சியினர் தேர்தல் அதிகாரி ஜெசிமா பானுவிடம், எங்களை உள்ளே விட யாரும் அனுமதிக்கவில்லை என்றனர். ஆனால் தேர்தல் அதிகாரி சரியான பதில் தரவில்லை என்று கூறி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கு 1 வது வார்டு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் உமாதேவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்து இந்த அமளிக்குள் அகப்பட்ட மார்க்சிஸ்ட் தோழர் மனோகரனிடம் பேசியபோது, ‘‘இங்கே கூட்டணி போட்டு திமுக 12 சீட்டும், எங்க கட்சி 2 சீட்டும் ஜெயிச்சிருக்கு திமுக மேலிடம் தலைவர் பதவியை எங்களுக்குத் தந்தாலும் உள்ளூர்காரர்கள் விட்டுக் கொடுப்பதாக இல்லை. இரவு தலா 6 கவுன்சிலர்கள் எங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் யாரையும் பார்க்க விடலை. அப்படிப் பார்க்கப் போனபோது எங்கோ கடத்திக் கொண்டு போய் வச்சுட்டாங்க. அதனால் அவர்கள் உறவினர்களைப் பார்த்து ஆதரவு கொடுக்கச் சொல்லீட்டு வந்தோம். இதில் 2 சீட் ஜெயிச்சதுல எங்க கட்சி கவுன்சிலர் ஒருவரையும் அவங்களே மறைச்சு வச்சுட்டாங்க. அடுத்தநாள் 9.30 மணிக்குத் தேர்தல். 9 மணிக்கு நாங்க குறிப்பிட்ட தலைவர் வேட்பாளர் கவுன்சிலரோட போறோம். மன்றக் கட்டிடத்திற்கு முன்னாடியே சுமார் 400 பேர் மறிச்சிட்டாங்க. கெட்ட வார்த்தையில் திட்டிட்டு, ‘2 சீட் ஜெயிச்ச உங்களுக்கெல்லாம் தலைவர் பதவி ஒரு கேடாடா?’ என்றெல்லாம் நாக்கூசும் வார்த்தைகளால் ஏச ஆரம்பிச்சுட்டாங்க. அதுல ஒருத்தர்தான் எங்க தோழர் பாலமூர்த்தியை பளார்ன்னு அறைஞ்சுட்டார்.
அதுவரைக்கும் போலீஸ் எதுவும் வரலை. வேடிக்கை பார்த்துட்டுத்தான் இருந்தாங்க. அப்புறம்தான் ரகளையாயிடும்ன்னு சொல்லி அங்கிருந்த ஒரு ரூம்ல அடைச்சு பாதுகாப்பா எங்களை வச்சுட்டாங்க. அதே நேரத்தில் கூட்ட அரங்கில் மனுதாக்கல் பண்ணி அவங்கள்லயே ஒருத்தரை தலைவராக தேர்ந்தெடுத்துட்டாங்க. இதுல எங்ககிட்ட இருந்து பிரிச்ச மார்க்சிஸ்ட் கவுன்சிலரை துணைத்தலைவர் பதவிக்கு அவங்களே தேர்ந்தெடுத்துட்டாங்க. போலீஸ்ல, தேர்தல் அதிகாரிகிட்ட எல்லாம் புகார் கொடுத்தோம். எதுவும் நடக்கலை. இப்படி ஒரு மோசமான நிலையை நாங்கள் அனுபவிச்சதே இல்லை. எந்த ஒரு கம்யூனிஸ்ட்டும் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் இல்லை. கட்சி முடிவு, கூட்டணி முடிவுக்கு கட்டுப்பட்டுத்தான் அதற்கேற்ப நடக்க ஆசைப்பட்டோம். அதற்கே இந்த நிலையா?’’ என தெரிவித்தார்.
பெரியநாயக்கன் பாளையம் கதை இப்படியென்றால் கோவை வெள்ளலூர் கதை வேறு மாதிரியானது. கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியிருக்க வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக பெரும்பான்மை பெற்றது.
இங்கு மொத்தமுள்ள 15 வார்டுகளில், அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வென்றுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மருதாசலம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தார்.
வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தின் முன் திமுக, அதிமுக மோதலை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள்.
மாவட்டம் முழுவதும் திமுக அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், இப்பேரூராட்சியையும் கைப்பற்ற திமுக முடிவு செய்து அதிமுக கவுன்சிலர்களுக்கு வலை வீச ஆரம்பித்தது. இதனால் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தலைவர் தேர்தல் நடைபெறும் நாளன்று அதிமுக உறுப்பினர்கள் கார் மூலம் வெள்ளலூர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வெள்ளலூர் அருகே 3 கார்களில் வந்தவர்கள் தங்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும், உறுப்பினர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்ட போதும், குறித்த நேரத்திற்கு தேர்தல் நடக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அங்கு கிளம்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே காத்திருந்த திமுக உறுப்பினர்களுக்கும், இவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதட்டமான சூழல் நிலவ காவல் துறையினர், உறுப்பினர்களை மட்டும் பேரூராட்சி அலுவல கத்திற்குள் அனுமதித்தனர்.
உள்ளேயும் உறுப்பினர்க ளுக்குள் வாக்குவாதம். ரகளை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலரான பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலை நடத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூனன், தாமோதரன் மற்றும் வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 8 அதிமுக கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தமிழரசி, கருணாகரன், சந்திரகுமார், கணேசன், உமா மகேஸ்வரி, பார்வதி, மருதாசலம் ஆகியோர் மனு அளித்தனர்
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, “உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து திமுகவினர் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். காவல் துறை மற்றும் அதிகாரிகள் துணையுடன் கரூர் மற்றும் வெளியூர் ஆட்களைத் தூண்டி விட்டு தாக்குதல் நடத்தினர். தேர்தலில் முறைகேடு செய்தே வெற்றி பெற்றனர். இதை மீறித்தான் வெள்ளலூர் பேரூராட்சியில் 8 கவுன்சிலர்கள் வென்றுள்ளனர்.
அவர்கள் எந்த இடத்திலும் தலைவர், துணைத்தலைவர் ஆகக்கூடாது என்றுதான். அவர்கள் வந்த கார்களை 3 வண்டிகளில் வந்த கரூர் மற்றும் வெளியூர்காரர்கள் கத்தி, கம்பால் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுகவிற்கு பெரும்பான்மை உள்ளது. உடனே தலைவர் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை தள்ளி வைக்க காரணமே இல்லை. திமுகவினர் தான் பெட்டியை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். நியாயம் இல்லாமல் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கவுன்சிலர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கவில்லை. தாக்குதல் நடத்திய திமுகவினர் அதிமுகவினர் மீது பொய் புகார் அளித்துள்ளனர்” என்றார்.
இதேபோல் வால்பாறை நகராட்சித் தலைவர் தேர்தலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கேயும் அடிதடி, ரகளை கலாட்டாதான்.
இந்த நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. தி.மு.க. 20 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் பிடித்தது. இதையடுத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக 10-வது வார்டு கவுன்சிலர் காமாட்சி அறிவிக்கப்பட்டார். மனு தாக்கலும் செய்தார். அதேசமயம் 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அழகு சுந்தரவள்ளியும் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சுரேஷ்குமார், கவுன்சிலர்களிடம் வாக்குச்சீட்டை கொடுத்து வாக்களிக்கும்படி கூறினார். தொடர்ந்து தேர்தல் நடந்தது. அழகுசுந்தர வள்ளி வெற்றிபெற சாதகமான நிலை பேசப்பட, அங்கே தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அவர்களில் சிலர் கூட்ட அரங்குக்குள்ளேயே புகுந்து தலைமை அறிவித்த வேட்பாளரைதான் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
அப்போது சிலர் போட்டி வேட்பாளரான அழகு சுந்தரவள்ளிக்கு ஆதரவாக வாக்களித்த கவுன்சிலர்கள் சிலரை அடிக்கவும் செய்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் ஆத்திரம் சிலர் அரங்கில் இருந்த மைக்குகளை உடைத்து எறிந்ததனர். கவுன்சிலர்கள் வாக்களித்த வாக்குச் சீட்டுகளை கிழித்து எறிந்தனர். இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு தரப்பினர் அங்கு திரண்டனர். இதன் காரணமாக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் தலைமை அறிவித்த வேட்பாளரைதான் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மற்றொரு தரப்பினர் வாக்கெடுப்பு நடந்ததை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். அத்துடன் இருதரப்பினரும் நகராட்சி அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் அறிவித்தார். மேலும் அந்த அறிவிப்பு நகராட்சி அறிவிப்பு பலகையிலும் ஒட்டப்பட்டது. பிறகு இருதரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரி கூறும்போது, ‘‘வால்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் இருதரப் பினர் இடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையர் அறிவித்த பின்னர் மறுதேர்தல் நடத்தப்படும் என்றார். இதற்கிடையே வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேர் பொள்ளாச்சியை அடுத்த கம்பாலபட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்க, அவர்களிடம் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் சென்று தலைமை அறிவித்த வேட்பாளரை தேர்வு செய்யும்படி பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்கள். அங்கும் கவுன்சிலர்களுக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்றவர்கள் திரும்பியிருக்கின்றனர்.
திமுகவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது இது போல தமிழகம் முழுக்க அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களாலேயே காற்றில் பறக்க விடப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் கொடுத்திருக்கும் அறிக்கை எந்த மாதிரி விளைவுகளை இவர்களுக்குள் ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
……………KAMALA KANNAN.S Contact No: 9244317182