குறுகிய காலத்தில் தேர்தல் அறிவிப்பும், வேட்பு மனு தாக்கல் தேதியும் அறிவிக்கப்பட்டதன் காரணமாகவோ என்னவோ ஆளுங்கட்சி, எதிர்கட்சி தவிர்த்து ஏனைய கூட்டணிக் கட்சிகளில் சலசலப்பில்லாமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர் என்றாலும் உள்ளூர ஒரு சுனாமி கனன்று கொண்டுதான் இருக்கிறது.
எடுத்த எடுப்பில் பாஜகவை தன் கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்டதில் அந்த கட்சிகள் இரண்டில் எதற்கு லாபமோ, நஷ்டமோ தெரியவில்லை. அதன் மூலம் வலுவிழந்து காணப்படுவது எதிர்கட்சிகள்தான். குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகள். அதிமுகவுடன் பாஜக இருக்கும் பட்சத்தில் இந்துத்வா, மதவாதம், தீவிரவாதம் என்றெல்லாம் அதற்கு அழுத்தம் கொடுத்து பிரச்சாரங்களை முடுக்கி விட்டதுதான் பழம்பெரும் வரலாறு.
அதிலும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் போராட்டம் முதல் நீட் வரையிலான விவகாரங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் வெறும் வாய்க்கு அவலாக இருந்தது. இப்போது திமுக கூட்டணியிலிருந்து கொண்டு அதிமுகவை எதிர்ப்பதற்கு அத்தகைய வலுவான அஸ்திரங்கள் இல்லையே என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அக்கட்சியினர்.
கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள நூறு வார்டுகளில் 5 மார்க்சிஸ்ட்டுகளுக்கும், 4 இந்திய கம்யூனிஸ்ட்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பழைய முகங்களாய் தெரிபவர்கள் சின்னவேடம்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தியும், வேலாண்டிபாளையத்தை சேர்ந்த புருஷோத்தமன் மனைவியும்தான். மற்றவர்கள் எல்லாம் புது முகங்கள்.
காங்கிரஸ் கட்சியில் திமுகவிடம் மொத்தம் 29 வார்டுகள் கேட்டிருந்துள்ளனர். கடைசியில் அமைச்சர் செந்தில் பாலாஜி அலாட் செய்தது 10 வார்டுகளாம். அந்த நேரத்தில் 14 வார்டுகளாவது வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றுள்ளனர் கதர் சட்டைகள். அடுத்த நாள் வரச்சொன்ன 5 மாவட்ட செயலாளர்கள் அதையே 9 வார்டுகளாக மாற்ற விட்டனர்.
இதில் கடுப்பான காங்கிரஸ்காரர்களை மா.செக்கள் எப்படியெப்படியோ தாஜா செய்துள்ளனர். மதுரையில் இந்த சதவீத அடிப்படையில்தான் சீட் சேரிங் நடந்துள்ளது. அதையேதான் நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றிருக்கின்றனர் திமுகவினர். அதற்கு இவர்கள், ‘மதுரை, நெல்லை கதை எல்லாம் வேற. கோவையில்தான் தமாகா மேயர், காங்கிரஸ் மேயர், காங்கிரஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் எம்.பி எல்லாம் இருந்திருக்கிறோம். அதை கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்ட போது அடுத்தநாள் வாங்க என கூல் செய்து அனுப்பி விட்டனராம் நம் திமுக நிர்வாகிகள்.
அடுத்தநாள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 9 சீட்டுகளை பிளாங்காக விட்டு விட்டு மீதியில் எல்லாம் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். அதற்குப் பிறகு காங்கிரஸ் புள்ளிகளை மாசெக்களும் பார்க்கவில்லை. அமைச்சரும் பார்க்கவில்லை.
இதன் விளைவு. வேறு வழியில்லாத கதர் சட்டைகள் 9 வார்டுகளுக்கும் முறையே நவீன்குமார், காயத்திரி, அழகு ஜெயபாலன், சரவணகுமார், குனியமுத்தூர் முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, பச்சை முத்து, சரளா, ஏ.எஸ். சங்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இருந்தாலும் காங்கிரஸ்காரர்களுக்கு திமுகவினரும், திமுகவினருக்கு காங்கிரஸ் காரர்களும் வேலை பார்ப்பதில்லை என்ற அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 3, கொமதேக 2, முஸ்லீம் லீக் 2, விசிக, 2 ஒதுக்கப்பட்டு சத்தமில்லாமல் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள். என்றாலும் வார்டுகள் வாரியாக பார்த்தால் கூட்டணிக்குள் திமுக தாமரை இலை தண்ணி போலவே தெரிகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாஜக 80, 90 என்று எகிறி 95-க்கு வந்து நின்று கடைசியில் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டதாக சொல்கிறார்கள். கடந்த தேர்தல்களில் 100-க்கு 100 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் களம் இறங்கியிருப்பது இதுதான் முதல் முறை. இதில் நான் எம்.எல்.ஏவாக இருக்கும் கோவை தெற்குத் தொகுதியில் வரும் அத்தனை வார்டுகளிலும் ஜெயித்துக் காட்டுவேன் என்று சூளுரைத்துள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரான வானதி சீனிவாசன். இவர் மீதும் தாெண்டர்களின் அதிருப்தி இல்லாமல் இல்லை. கோவை பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் வானதியும் ஒருவர்.
ஆனால் அதில் அவர் கையே ஓங்கியிருந்திருக்கிறது. முதலில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே சீட்டுகளை வாரி வழங்கிய வானதி, ஏற்கனவே கட்சியில் கடினமாக வேலை செய்தவர்கள், நீண்டகால கட்சித் தொண்டர்கள், சிபிஆர். ஜி.கே.எஸ் போன்ற முன்னாள் மாநில நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கவில்லையாம்.
‘சிபிஆரும், ஜிகேஎஸ்ஸூம் கோஷ்டி பார்ப்பார்கள் . ஆனால் அதற்காக இப்படி சீட் விஷயத்தில் எல்லாம் இழுத்தடித்து சோதித்துப் பார்த்து தொண்டர்களை சோதனைக்குள்ளாக்க மாட்டார்கள். ஆனால் இந்த முறை வானதியின் கைங்கர்யத்தால் அதுவும் நடந்தது. பழைய ஆட்களே கடைசி நேரத்தில் சீட் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது!’ என்கிறார்கள் அக்கட்சியில் சில