கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரடிமடையில் மதுவிற்றதை தட்டிக்கேட்ட தென்கரை பேரூராட்சி கரடிமடை அண்ணாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (55) என்பவர் திமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து செல்வராஜ் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “இன்றைய நிலையில் மோசமான நிலையில் கோவை மாவட்டம் உள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. கள்ளத்தனமாக மது விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. காவல்துறை இதை கண்டு கொள்ளாமல் உள்ளது.திமுகவைச் சேர்ந்த இளைஞர் அணி பொறுப்பாளர்கள் ராகுல் மற்றும் கோகுல் ஆகியோர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காளம்பாளையத்தில் மதுபான கடை பார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பார் முறைப்படி உள்ளதா என்று தெரியவில்லை. இவர்கள் கரடிமடையில் பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்று வருகிறார்கள். இதற்கு தாய்மார்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த ராகுல், கோகுல் மதுபானத்தை அதிக விலைக்கு விற்றதோடு கரடிமடையில் பல இடங்களில் மளிகை பொருட்களை மதுக்களை விற்றுள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரை பேரூராட்சி கரடிமடையில் எங்களது கட்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (55) இருந்தார். இயக்கத்திற்காக பாடுபட்டவர். அவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த இளைஞர் அணி பொறுப்பாளர்கள் ராகுல் மற்றும் கோகுல் ஆகியோர் கள்ளத்தனமாக மது விற்பதையும், அதிக விலைக்கு மது விற்பதையும் எதிர்த்து செல்வராஜ் நியாயமாக கேள்வி கேட்டுள்ளார். எப்படி கேட்கலாம் என்று திமுகவை சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் அவரை அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் அவர் ஒரு இடத்தில் உட்கார்ந்தபோது பின்னாடியே வந்த ராகுல், கோகுல் ஆகியோர் மற்றும் அவர்களுடன் இன்னும் பலர் தொடர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். உயிர் போகாவிட்டால் பெட்ரோல் ஊற்றி எரித்து விட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அடி தாங்காமல் செல்வராஜ் இறந்து விட்டார்.
ஆனால் காவல்துறை இருவரை மட்டுமே கைது செய்துள்ளது. இதற்கு பின்புலமாக பலர் உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் காவல் துறையினர் மோசமான நடந்து கொண்டுள்ளனர். இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி ஆகியோர் கொலை செய்யப்பட்ட செல்வராஜ் உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். கொலை செய்யப்பட்ட செல்வராஜின் மகள் கூட வந்து சேர முடியாத நிலையில் அடக்கம் செய்ய ஏன் வற்புறுத்தினார்கள். நன்றாக இருந்த ஒரு தந்தை திடிரென இறந்தால் எந்த மகள் ஏற்றுக் கொள்வாள். அந்த பெண் வருவதற்குள் இன்ஸ்பெக்டர் அந்த உடலை எடுத்து அடக்கம் செய்ய வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்த பிறகு செல்வராஜன் மகள் தந்தையின் உடலை பார்க்க முடிந்தது.
இதற்குப் பின்னால் யார் உள்ளனர். இவ்வளவு தைரியமாக களத்தனமாக மதுவை விற்றுவிட்டு எதிர்த்து கேட்டவர்களை அடித்து கொலை செய்கிறார்கள் என்றால் இவர்கள் பின்னால் யார் உள்ளனர். ஆளும்கட்சியை சேர்ந்தோருக்கு வருமானத்தை பங்கிட்டு கொள்கிறார்கள் என்ற தகவல் வந்தது? திமுகவைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பில் உள்ளோருக்கு பணம் போவதாக சொல்கிறார்கள். ஆகவே இவ்விவகாரத்தில் காவல்துறை பாதிக்கப்பட்ட செல்வராஜ் குடும்பத்தை மிரட்டுகிறது.
இவ்விவகாரத்தில் காவல்துறையினர், சாட்சி சொல்பவர்களையும் உடன் நின்றவர்களையும் மிரட்டி வருகிறது. போலீசார் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இப்போது கைது செய்யப்பட்டுள்ள திமுகவின் ராகுல், கோகுல் மட்டும் இல்லாமல் பின்புலமாக உள்ள பலரையும் கைது செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாமூல் வாங்கிவிட்டு தான் கள்ளத்தனமாக மதுவிற்பதற்கு காவல்துறை உடந்தையாக உள்ளது. இன்று திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இந்த கொலை வழக்கில் சாட்சி சொல்பவர்களை காவல்துறை மிரட்டுகிறது என்றால் இது யார் கொடுக்கும் தைரியம்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் வழக்கு போட்டுள்ளனர். வழக்கில் கூட்டு சதி, பாதுகாப்பு, கள்ள மதுவிற்பனை ஆகியவற்றை கொண்டுவரவில்லை. எதற்காக இந்த கொலை நடந்தது. அதிக விலைக்கு மது விற்றதை தட்டி கேட்டவரை கொலை செய்துள்ளனர். உடந்தையாக இருந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், காவல்துறையினரை அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அக் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தர வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்துவோம்.
இவர்களிடம் யார் பணம் பெற்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வராஜ் கொலை செய்யப்பட்டதால் அந்த குடும்பமே தவித்து வருகிறது. அந்த குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கஞ்சா, மதுவிற்பனை விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்விவகாரத்திலாவது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலுமாக தோற்றுவிட்டது.
கஞ்சா, கள்ளத்தனமாக மதுவிற்பனையை தடுக்கவேண்டும். காவல்துறை மானிய கோரிக்கையின்போது ஸ்டாலின் முன்னிலையில் சட்டசபையில் 2:30 மணி நேரம் எடப்பாடியார் பேசினார். ஆனாலும் எந்நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. தமிழகத்தில் இளைஞர்கள், மாணவ சமுதாயமே பாதிக்கப்பட்டு வருகிறது.” என்று பேட்டியளித்தார்.
அப்போது மாவட்ட கழக துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, மாவட்ட கழக பொருளாளர் என்.எஸ்.கருப்புசாமி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பிரதீப், பேரூராட்சி கழக செயலாளர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார், கழக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் முத்து இளங்கோவன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.