ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி அளவுக்கு பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தங்கியிருந்த தகவலை அறிந்த தமிழக காவல்துறையினர், இன்று கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 17ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கடந்த 20 நாள்களாக, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 தனிப்படையினர் தேடி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹாசன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி, பிறகு சென்னை அழைத்து வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.