தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடுகள் குறித்து கூட்டணிக் கட்சிகளோடு அரசியல் கட்சிகளின் பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. கருர் மாவட்டத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டணி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது தி.மு.க வினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், எம்.பி ஜோதிமணி வாக்குவாதத்தில் ஈடுபட்ட தாகவும், இதனால் கோபமான தி.மு.கவினர், ஜோதிமணியை வெளியேறும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசமாக வெளியேறினார். திமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், ‘உங்க ஆபிசுக்கு வந்து இருக்கேன். எப்படி நீங்க வெளிய போ அப்படினு சொல்லலாம். விருந்துக்கா வந்துருக்கேன்.மரியாதை இல்லாம பேசுறீங்க. நான் என்ன இவங்க வீட்டுக்கா வந்து இருக்கேன். வெளியே போன்னு சொல்றதுக்கு’ என்று கொந்தளித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்பாலாஜி, ‘நடந்த சம்பவங்களுக்குள் போகவேண்டாம் என நினைக்கிறேன். நானும் அது சம்பந்தமாக பேச விரும்பவில்லை. இன்றைய நாளை பொறுத்தவரை தேர்தலுக்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களை சொல்லி அதற்கான சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் வேற மாதிரி நிகழ்வுகளை உருவாக்குவதற்கு நான் விரும்பவில்லை” என்று பதில் அளிக்க மறுத்து சென்று விட்டார்.