கோவையில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளார்களிடம் பேசுகையில், ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றி மிக நீண்ட பதில் உரையை கொடுத்துள்ளார் முதலமைச்சர். ஆனால் ஒவ்வொரு நாளும் பட்டப் பகலில் நடந்து கொண்டிருக்க கூடிய படுகொலைகள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகளை பார்க்கும் பொழுது தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கின்ற நிலைமையில் இருந்து வெகு சீக்கிரமாக கீழே இறங்கி சென்று கொண்டிருக்கிறது என தெரிகிறது.
மாநில அரசாங்கம் அவர்கள் தொடர்புடைய நபர்கள் மீது, அந்த நபர்கள் நடத்துகின்ற நிறுவனங்கள் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றி தான் கவலைப்படுகிறார்கள் போல் உள்ளது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு உடனடியாக கவனிக்க வேண்டும். தமிழகம் என்றும் அமைதி பூங்கா என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து இம்மாதிரியான எவ்வித நிகழ்வும் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.
அதுமட்டுமின்றி கோவையை பொறுத்தவரை பல்வேறு கோரிக்கைகள் சட்டமன்றத்தில் நான் எழுப்புகிறேன் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதற்கு பதில் கொடுக்கிறார்கள் குடிநீர் பிரச்சனைக்கு சட்டமன்றத்தில் பேசுகின்ற போது 15 நாட்களுக்குள் நிலைமை சீரடியும் எனக் கூறினார்கள் அது வரையிலாவது லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன் அதற்கான நடவடிக்கைகள் இதுவரை துவக்கப்பட்டதாக தெரியவில்லை. அதேபோல் உக்கடம் மேம்பாலத்திற்காக அப்பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகளை காலி செய்து வேறு இடத்தில் வைத்துள்ளார்கள் அவர்களுக்கு புதிதாக குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் ஆனால் அப்பகுதியில் இருக்கின்ற மீன் மார்க்கெட் பகுதியை இன்னொரு இடத்திற்கு மாற்றினால் தான் புதிய குடியிருப்புகளை கட்ட முடியும். அதே சமயம் அதற்கான பட்ஜெட்டும் ஒதுக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது அதற்கான மதிப்பு அதிகரித்துள்ளதால் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் நாங்கள் ஆட்சியைப் பிடிக்க போகிறோம் மாற்றத்தை உருவாக்க போகிறோம் என அரசியலுக்கு வந்தார்கள்
ஆனால் கடந்த இரண்டு வருட காலமாக, அவ்வப்போது வந்து ஒரு ஸ்டேட்மென்ட்டை மட்டும் அளித்துவிட்டு செல்கிறார். கோவையில் நிற்பதும் நிற்காததும் அவருடைய முடிவு. ஆனால் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என கட்சியை ஆரம்பித்த நீங்கள் காங்கிரஸ் போன்ற ஊழல் கட்சியுடன் சேர்ந்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்து விட்டு நான் மாற்றத்தை அளிக்க போகிறேன் என்றால் உங்களுடைய அரசியல் கணக்கு என்ன?. மேலும் தற்போது அவரை கட்சியின் தலைவராக பார்க்க முடியாது அவர் ஒரு ஊழல் மிகுந்த ஊழல் கறை படிந்த காங்கிரஸ் திமுக கூட்டணியின் உடைய நட்சத்திர பேச்சாளர்.” என்று பேசினார்.