கன்னல் விழாவில் வெல்லத்தேர்: கண்டுகளித்த விவசாயிகள்

Pi7_Image_VID_20220923_122604_Moment11.jpg

THE KOVAI HERALD

ஊர்கூடித் தேர் இழுப்பார்கள். கேள்விப்பட்டிருக்கிறோம். ‘ஊர் கூடித் தேர் பார்த்தார்கள். அதுவும் வெல்லத்தேர் என்று சொன்னால் யாருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். அதிலும் அதை ஆச்சர்யமாகப் பார்த்தவர்கள் மிகுதியாக விவசாயிகள்.

கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் சார்பில், கரும்பு விவசாயிகளுக்கான, ‘கன்னல் விழா’ வெள்ளியன்று நடந்தது. இதற்கு தமிழகமெங்குமிருந்து கரும்பு விவசாயிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். இங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு கண்காட்சியை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார் முன்னதாக அவருக்கு பெண்கள் கும்மி கொட்டி கிராமியப்பாடல்கள் பாடி வரவேற்றனர்.

இந்த கண்காட்சி அரங்கில் மொத்தம் 40 அரங்குகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொன்றிலும் கரும்பு மூலம் செய்யப்பட்ட மதிப்புக்கூட்டுப் பொருட்கள். கரும்பு விவசாயத்திற்கு பாதுகாப்பளிக்கும் உபகரணங்கள், மருந்துகள், இரசாயனக்கொல்லி இல்லாமல் இயற்கையிலேயே கரும்பு அபரிமிதமாக உற்பத்தி செய்யும் முறைகள் என ஏகப்பட்ட விஷயங்களை ஒவ்வொரு அரங்கிலும் தனியார் வேளாண்மை நிறுவனங்களும், கரும்பு இனப் பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் வெவ்வேறு மையங்களும் சிறப்புற செய்திருந்தன.

இந்த அரங்குகளில் மக்களை ஈர்த்த இரண்டு விஷயங்கள். ஒன்று கரும்பு சர்க்கரையாக்காமல் நேரடியாகவே கரும்புச் சாறு மூலம் டீ தயாரிக்கும் முறை. அதற்கான இயந்திரங்கள். கரும்புச்சாறை பிழிந்து அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட ஐஸ் வடிவ திடப்பொருளை காய்ச்சி வடிகட்டி டீ தயாரித்து மக்களுக்கு நேரடியாகவே வழங்கியது வடநாட்டு நிறுவனம் ஒன்று. இதன் மூலம் உடல் ஆரோக்கியம் கூடும், சர்க்கரையில் கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. சுவையும் மிகுதி என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பை டெமோவாகவே செய்து காண்பித்தனர் ஸ்டால் அமைத்திருந்த நிறுவனத்தினர்.

இதேபோல் இன்னொரு அரங்கில் வெல்லக்கட்டியிலேயே தேர் செய்திருந்தனர். இந்த தேர் செய்வதற்கு பயன்பட்ட வெல்லத்தின் எடை மட்டும் 98 கிலோ. 1995 முதல் இப்படியான வெல்லத்தேரை உருவாக்கி காட்சிப்படுத்தி வருகின்றனர் கரும்பு நிறுவன ஆராய்ச்சி மையத்தினர்.

இதைப் பார்க்க கூட்டம் மிகுதியாகவே இருந்தது. இரண்டு நாள் காட்சிக்கு வைத்து விட்டு இறுதியில் இந்த தேர் ஏலம் விடப்படும். அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள் வாங்கிச் செல்லலாம் என்று சொன்னார்கள். இந்த வெல்லத்தேர் முழுக்க முழுக்க ரசாயனக் கலப்பில்லாமல், சோடா, உப்பு போன்ற சங்கதிகளும் இல்லாது, இதற்கெனவே பிரத்யேகமாக பாகு காய்ச்சி தயாரிக்கப்பட்டதாம்.

இதேபோல் கரும்பு ஜூஸ் மூலம் இன்ஸ்டன்ட் குல்பி ஐஸ், கரும்பு மூலம் கரும்புத்தேன். கரும்பு ஜூஸ் ஜாம் எல்லாம் வெவ்வேறு அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழக துணை வேந்தர் சீதாலட்சுமி, அனைத்து அரங்குகளையும் மிகுந்த ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்தார்.

இந்த விழாவிற்கு வந்திருந்தவர்களை பயிர் பாதுகாப்பு துறை தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார். விழாவிற்கு கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குனர் ஹேமபிரபா தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் சித்ராதேவி, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன மண்டல மைய முதுநிலை விஞ்ஞானி ரத்தினவேலு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக மத்திய பொறியியல் ஆராய்ச்சி நிறுவன மண்டல மையத் தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

S.KAMALA KANNAN Ph. 9244319559  

scroll to top