கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

817444.jpg

கடலூர் அருகே கேப்பர்மலை பகுதியில் உள்ள எம். புத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை  ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பட்டாசு வாங்க வந்த ஒருவரும் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையில் வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (வயது 50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 34) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

scroll to top